செவ்வாய், 30 அக்டோபர், 2012

எதுவரை??

சோறு வடித்துக் கொண்டிருந்த தாரிணி வீட்டு முற்றத்திலிருந்த தனது மகனைத் திரும்பிப் பார்த்தாள். அவன் கைகளால் மண்ணை அளைந்து கொண்டிருந்தான். கைகள்தான் செயல்பட்டதே தவிர தான் செய்யும் செயலுக்கான தெளிவு கண்களில் தெரியவில்லை. உடல் மெலிந்து  தலையை ஒரு பக்கம் சாய்த்து வைத்தபடி கால்கள் இரண்டையும் நீட்டி வைத்துக் கொண்டிருந்தான். பார்த்த  மாத்திரத்திலேயே அவனுடைய குறைபாடு புரியக் கூடியதாய் இருந்தது. எட்டு வயதுச் சிறுவனுக்குரிய செயல்பாடு எதுவும் அவனில் இல்லை. தாரிணிக்கு அவள் விரும்பாமலேயே கண்களிலிருந்து கண்ணீர் பொங்கி வந்தது. சொல்லி அழ யாருமில்லை; அழுதும் பயனில்லை. கண்களைத் துடைத்துக் கொண்டு கோப்பையில் சாப்பாட்டைப் போட்டு எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். மகனைத் தூக்கி கை கால்களைக் கழுவி துடைத்து விட்டு சாப்பாட்டை ஊட்டி விடத் தொடங்கினாள்.
நான்கு வருடங்களுக்கு முன்பு இருந்த தன்னுடைய கைகளுக்குள் அடங்காமல் ஓடித்திரிந்த சுட்டிப் பையன், இன்று தான் தூக்கி வைத்து உணவு ஊட்டும் நிலைக்கு ஆளாகிப் போன கொடுமையை நினைத்து ஒவ்வொரு நிமிடமும் நொந்து கொண்டிருக்கிறாள். பரந்து பட்ட நோக்கத்தைக் கொண்டிருந்த அவள், இன்று தன்னிரண்டு பிள்ளைகளை நோக்கியே உயிரைப் பிடித்துக் கொண்டிருக்கிறாள். சுவரில் எறியப்பட்ட பந்தாய் காவு கொள்ளப்பட்ட தேசத்திலிருந்து கணவனையும் பறி கொடுத்து விட்டு திரும்பி வந்தபோது, அண்ணா சொன்னார்: " தங்கச்சிக்குக் கலியாணம் இன்னும் ஆகேல்லை நீ இப்ப வந்தால் நாங்கள் என்ன செய்யிறது? எங்களுக்குக் கிட்ட ஒரு காணியிலை கொட்டில் போட்டுத் தாறன். இப்போதைக்கு அதில இரு பிறகு பாப்பம்".
 அவள் தனது ஒன்பது வயதான மூத்தவன் குட்டியுடனும் உடலும் மனதும் பாதிக்கப்பட்ட சின்னவனுடனும் அந்தக் கொட்டிலுக்குள் ஒடுங்கிக் கொண்டாள்.
அவள் அவர்களிலிருந்து ஒதுங்கினாளே தவிர தன் நோக்கத்தில் இருந்து ஒதுங்கவில்லை. பிள்ளைகளோடு தன் முழு நேரத்தையுமே செலவிட்டாள். மூத்தவன் குட்டி படிப்பில் சுட்டியாயிருந்தான். தாயின் கண்ணீரைப் புரிந்திருந்தான். நல்லவர்கள் பூமியில் இன்னும் இருக்கிறார்கள் என்று உணர்த்தும் வகையில், தாராள மனம் படைத்தோர் அவளது நிலைக்கு உதவியது மிகப் பெரிய ஆறுதலாயிருந்தது. இருந்தாலும் வாய்விட்டு  உதவி கேட்க ஏதோ தடுத்தது. கிடைத்ததை வைத்து சமாளித்துக்  கொண்டிருந்தாள். ஆனால் சின்னவனுடைய மருத்துவச் செலவு எகிறியது. பெரியவன் குட்டியை அவள் இவ்வளவு சிரமத்துக்கிடையிலேயும் ஒரு தனி ஆசிரியரிடம் பாடசாலைக்குப் பிறகு படிக்க அனுப்பிக் கொண்டிருந்தாள். பாடசாலைக்கும் வீட்டுக்கும் அதற்குப்  பிறகு டியுசனுக்கும் என்று அவன் அலைவதும் அவனுடன் பயத்தில் அவளும் சின்னவனைத்  தூக்கிக் கொண்டு அலைவதும் சிரமமாக இருந்தது. அவள் சின்னவனையும் தூக்கிக் கொண்டு அலைய அவனுக்க அடிக்கடி காய்ச்சல்  வரத் தொடங்கியது.
ஒரு நாள் மாலை பாடசாலையிலிருந்து குட்டி  திரும்பியபோது, முகம் அவ்வளவு நன்றாக இல்லாமலிருந்தது. தாய் விபரம் அறிய முற்பட்டாள்.
"என்னப்பு? சுகமில்லையா?"......
"ஒண்டுமில்லை"......
தாரிணி கிட்ட வந்து நெற்றியில் கையை வைத்துப் பார்த்தாள். சுடவில்லை.வேறேன்னவாயிருக்கும்?.....
"என்னெண்டு சொன்னாத்தானே எனக்குத் தெரியும்?"
"நாங்கள் இஞ்ச வந்து நாலு வருஷமாகிது. நடந்து நடந்து நான் களைச்சுப் போட்டேன் அம்மா. எனக்கு ஒரு சயிக்கில் உங்களால வாங்கித் தர ஏலுமோ?....
 அப்பா இருந்திருந்தால் எனக்கு வாங்கித் தந்திருப்பார்.....
தாரிணிக்கு உண்மையாகவே நெஞ்சு வலித்தது. கொஞ்ச நேரம் எதுவும் பேச முடியாமல் இருந்தது.
"ம்ம்.... அப்பா இருந்திருந்தால் கட்டாயம் வாங்கித் தந்திருப்பார்."
"எல்லாப் பிள்ளையளும் பள்ளிக்கூடத்தாலை நேரத்தோடை வீட்டை வந்து, விளையாடி பிறகு படிக்க நேரம் இருக்கு, நான் மட்டும்தான் நடந்து வீட்டை வாறதுக்கிடையிலேயே களைச்சுப் போடுறன், ஒரு சயிக்கில் இருந்தால் நானும் கெதியிலை வீட்டை வந்திடுவன் ; டியுசனுக்கும் போய்வர வசதியா இருக்கும்".
குட்டி கள்ளமில்லாமல் தன்னுடைய ஆதங்கத்தை விளக்கினான். ஆனால் தாரிணி என்ன செய்வாள்? யாரிடம் கேட்பாள்? மகனுக்குக் கிட்ட வந்து முதுகைத் தடவிக் கொடுத்தாள்.
"பாப்பம்" என்றாள்.
மகன் அம்மாவை உற்றுப் பார்த்தான். அந்தப் பார்வையில் அவநம்பிக்கை தெரிந்தது. தாரிணி தலையைத் திருப்பிக் கொண்டு உள்ளே போய் விட்டாள். அன்று இரவு முழுவதும் காலக் கொடுமையை நினைத்து ஆத்திரம் தீர திட்டித் தீர்த்து அழுது முடித்தாள்.
அடுத்த நாள் காலை தலையிடியுடன் தொடங்கியது. நேற்றிரவு சம்பவம் தாரிணி, மகன் இருவரையும் வெகுவாகப் பாதித்திருந்தது. மகனுக்கு சாப்பாட்டைக் கொடுத்து அனுப்பி விட்டு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தொலைபேசியில் பேசியவர்களிடம் சயிக்கிளுக்கான பணம் கேட்க வாய் துடித்தது. ஆனால் வார்த்தைகள் வெளி வர மறுத்தன.இன்னொருவரிடம் தன்னிலை சொல்லிக் கையேந்துவது கடினமாயிருந்தது.
இன்று மாலையிலும் குட்டி களைப்புடன் பாடசாலையிலிருந்து திரும்புவான்.......
அவனுக்கு யார் சயிக்கில் வாங்கிக் கொடுப்பார்கள்?

கருத்துகள் இல்லை: