ஞாயிறு, 6 மே, 2012

முதற்பிரிவு

அன்று இரவு முழுவதும் எனக்கு நித்திரை வரவே இல்லை. இரவு முழுக்க எனக்கு பலவிதமான கனவுகள். சில குழப்பமான சிந்தனைகளும் கூடவே வந்தன. ஆனாலும் புதிய ஓர் இடத்தில் வாழப் போவதை எண்ணி ஒரு விதமான சொல்ல முடியாத விசித்திரமான உணர்வு. அம்மாவும் குடும்பத்தாரும் ஏற்கனவே என்னுடன் நீண்ட நாட்களாக பேசி எடுத்த முடிவுதான். எனது உடுப்புக்கள், மற்றும் தேவையான பொருட்கள் எல்லாம் ஆயத்தப் படுத்தி வைத்தாகி விட்டது, இருந்தாலும் இறுதி நேரத்தில் மனம் இறுக்கம் கண்டது. எனக்கு அப்போது பதினொரு வயது இருக்கும். அம்மாவுடன் மனம் விட்டுப் பேச முடியவில்லை. எனது எண்ணங்களை சொல்ல முடியவில்லை. அதற்கு வேறு பல காரணங்கள் இருந்தன. ஏன் இப்போதும் கூட அம்மா எனக்கு ஒரு மாதிரி. அன்றும் இன்றும் என்றும். ஒளி தந்து தன்னை உருக்கும் மெழுகுவர்த்தியுடன் பேச முடியுமா? ஆனால் அந்தப்  பக்குவம் அந்த வயதிலேயே என்னிடம் தோன்றியிருந்ததை நினைத்து இன்றும் ஆச்சரியப்பட்டுக் கொள்ளுவேன். இனிப் புறப்படுவதுதான் மிச்சம்.

இரவு நீண்டாலும் விடியலை யாராலும் தடுக்க முடியுமா? வழமையான காலைப்போழுது எல்லோருக்குமாய் விடியத் தொடங்கியதுஆனாலும் அன்றைய காலை எனக்கு விசேடமானது. அதிகாலை நான்கு மணிக்கே புறப்பட்டு நடக்கத் தொடக்கி விட்டோம்.
வானத்தை அண்ணாந்து பார்த்தேன். முழு நிலவு பிரகாசம் பூமியை நிறைத்துக் கொண்டிருந்தது. எமது ஊர்களில சில பெண்கள் குங்குமப் போட்டு வைத்திருக்கும்போது அது அவர்களது முகத்தை விடப் பெரிதாக இருக்கின்றதாக நினைத்துக் கொண்டிருக்கின்றேன் அந்த நாட்களிலேஅது போலவே இந்தச் சந்திரனை நினைக்கத் தோன்றியது. வானம் பரந்திருந்தாலும்  எம் கண்களில் முதலில் படுவது நிலவு தானே, கழுத்தைத் இடதுபுறம் திருப்பி  தலையைத்தூக்கி அண்ணார்ந்தபடி வலப்புறமாக கண்களால் வானத்தை மெதுவாக அளவிட்டுக் கொண்டு வரும்போது அத்தனை அழகும் எனக்குத்தானோ என்று எண்ணும்படி தோன்றும். இனிப்பை மொய்க்கும் எறும்புக் கூட்டங்கள் போல முழு நிலவைச் சுற்றி நிற்கும் தாரகைகள் கண்சிமிட்டும் அழகும், அவற்றை நான் உருவங்களாக்கி மகிழ்ந்ததும் சிறுவயதிலிருந்தே  தொடர்கின்றது.

எமது கிராமத்துக்கும் மயிலிட்டிக்கும் மூன்று கிலோ  மீற்றர் தூரம் இருக்கும் என்று நினைக்கின்றேன். அந்த அதிகாலைப்  பொழுதில் தெரு நடமாட்டமற்றுக் கிடந்தது. எமது கால் நடைச் சத்தம் கேட்டு நாய்கள் மட்டும் வளவுகளுக்குள்ளால் இருந்து  குரைத்து விட்டுத் திரும்பின. எத்தனையோ தடவை அமது ஊரிலிருந்து மயிலிட்டிக்கு கால் நடையாகவே போயிருந்தாலும் இந்த அதிகாலை விசேட பயணம் எனக்கு அன்று அதிசயமாகவிருந்தது.

நான்கு நாற்பத்தைந்து மணியளவில் மயிலிட்டி கன்னியர் மடப் பாடசாலையை வந்து சேர்ந்திருந்தோம். அந்த நேரம் யார் வீட்டுக் கதவைத் திறந்திருப்பார்கள்? மடம் பூட்டியிருந்தது. காத்திருக்க வேண்டியதுதான். இந்த நேரத்துக்கு அம்மா ஏன் கூட்டிக் கொண்டு வந்தார் என்று எனக்கு விளங்கவில்லை. (என்னால் கேட்க முடியாது என்று ஏற்கனவே சொல்லி விட்டேன்) வெளியில்  நின்றபடியே காணிக்கை மாதாவிடம் அம்மாவும் நானும் வேண்டிக் கொண்டோம். கண்களால் வானத்தை மீண்டும் அளக்கத் தொடங்கினேன். இப்போது நிலவு மேகக் கூட்டங்களுக்கிடையிலே ஒழிந்து விளையாடிக்கொண்டிருந்தது. சில நட்சத்திரங்கள் எரிந்து விழுந்தன. நேரம் ஆகிக் கொண்டிருந்தது. மெல்லிய வெளிச்சம் பரவத் தொடங்கியது.

ஆறு மணியளவில் ஒரு கன்னியாஸ்திரி வந்து வெளிக் கதவைத் திறந்ததும் ஆச்சரியப்பட்டு, மனம் வருந்தி வரவேற்றார். என்னையும் அம்மாவையும் அழைத்துச் சென்று நான் தங்குமிடத்தை இன்னொரு பெண் மூலம் காண்பித்தார். தேநீரும் காலை உணவும் தந்தார்கள். அம்மா எனக்கு நிறையப் புத்திமதிகள் சொன்னார்; பின்னர் விடை பெற்றுச் சென்று விட்டார். அம்மா விடை பெறும் போது எனக்கு தொண்டைக்குள் ஏதோ அடைத்தது; அழுகை வருமாப் போல் இருந்தது.

சிறிது நேரத்தில் பாடசாலைக்கு நேரமாக பாடசாலைக்குச் சென்று விட்டேன். மயிலிட்டிக் கிராமத்தின் சிறப்புக்களில் ஒன்று அந்த ஆலய வளவுக்குள்ளேயே கன்னியர் மடம், பாடசாலை, குருவானவர் தங்குமிடம் அனைத்தும் சேர்ந்தாற்போல் அமைந்திருப்பது. அதிலும் கன்னியர் மடமும் பாடசாலையும் சேர்ந்தே இருந்தது. பாடசாலை நாட்களில் ஆலயத்தையும் அதன் கிணற்றடியையும் சுற்றியே விளையாடிக் கொண்டிருப்போம். அன்றைய பொழுது இடைக்கிடையில் அம்மாவின் ஞாபகம் வந்தாலும் சிக்கலின்றிக்  கழிந்தது.

மாலையில் மடத்துக்குத் திரும்பியபோது வீட்டு யோசனை வரத் தொடங்கியது. அம்மாவைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. அக்காமாரின் நினைவு வந்தது. நான் எங்கோ ஒரு காட்டில் தனித்து விடப்பட்டது போல இருந்தது. "பாசம்" என்பதன் வரைவிலக்கணம் புரியாத வயதில் அந்த உணர்வு மட்டும் அழுகையை உண்டுபண்ணியது. அங்கே இருந்தவர்கள் எல்லோருமே அன்பாக இருந்தார்கள். ஆனால் சிறைப்பட்டிருந்தாற் போல ஓர் உணர்வு தென்பட்டது. வீட்டில் இருக்கும் சுதந்திரம் பறிக்கப்பட்டிருந்தது புரிந்தது. இரவு உணவு இறங்கவில்லை. படுக்கையில் அழுகை வெடித்தது யாருக்கும் காட்டிக் கொள்ளாமலே. ஏனென்றால் அங்கே இரண்டு வேறு எனது அக்காமாரின் வயதை ஒத்த பெண்கள் தங்கியிருந்தார்கள். அடுத்த நாள் காலை எனக்கு அழுகையோடுதான் விடிந்தது.

பாடசாலையில்  பாடங்களில் கவனம் செல்லவில்லை. வீட்டு யோசனையே தலை முழுக்க நின்றது. இப்படியே சில நாட்கள் கண்ணீருடன் கழிந்தன. அங்கே தங்கியிருப்பது சாத்தியமில்லை என்பது தெரிந்தாலும் என்ன செய்வது என்று தெரியவில்லை. (இப்போது போல தொலைபேசி, குறுஞ்செய்தி, இணையத்தள  வசதிகள் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்) கன்னியாஸ்திரிகள் சில நாட்களில் பழகிப் போய் விடும்  என்று நினைத்தார்களோ என்னவோ என்னை வழிப்படுத்த முயற்சித்தார்கள். ஆனால் நாளாக ஆக எனக்கு வீட்டு யோசனை கூடிக் கொண்டே வந்தது. எனது சிநேகிதி ஒருத்தி எமது ஊரிலிருந்து பாடசாலைக்கு தினமும் வந்து போவாள். அவளிடம் ஒரு நாள் துணிந்து சொல்லி விட்டேன் எனது அம்மாவை வந்து என்னைக் கூட்டிச் செல்லும்படி. எனக்குத் தெரியும் அம்மா கோபப்படுவார்  என்று. நான் என்ன செய்ய? என்னால் அம்மாவைப் பிரிந்து இருக்க முடியவில்லையே!

அம்மா விடையம் கேள்விப்பட்டு கோபத்துடன் வந்து சேர்ந்தார். என்னைக் கூட்டிக் கொண்டு வீடு திரும்பினார்.

காலம் நிற்கவேயில்லை. எத்தனையோ பெயர்வுகளைத் தந்து இன்று ஒரு நிரந்தரப் பிரிவைத் தந்து நிற்கின்றது. இன்று என்னால் அழ முடியவில்லை. காலம் மாற்றங்களையும், பிளவுகளையும் தந்து நிற்கின்றது. மனம் மாற்றங்களுக்குப் பழக்கப்பட்டுவிட்டது என்று நினைக்கின்றேன். என் அம்மாவைப் பார்த்து இருபத்தொரு வருடங்களாகி விட்டது என்றால் நம்ப முடியாமல் இருக்கிறது. அந்த முதல் பிரிவும் முழு நிலவும் மறக்கவே முடியாது. முழு நிலவை எங்கே கண்டாலும் என் மனம் பதினொரு வயதிற்குப் போய் விடும்.

கருத்துகள் இல்லை: