வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

காலம்.

காலம்.

இதை எங்ஙனம் எடுத்தியம்பவியலும்?

மௌனங்கள் வாடைக்காற்றின் வேகமெடுத்து
மேடைகளில் முழங்கிய காலங்கள்
மூச்சடைத்து முடிய,
வேகமும் வீரமும் மேலெழுந்து
தோளுயர்த்தி பலமேந்தி உச்சம் தொட்டிருந்தது
பிற்காலம்.

மலைகளிலும் காடுகளிலும்
படுத்துறங்கிக் கற்றுவந்த வீரர்களை
யாரிவர்கள் என்னும் வண்ணம்
புருவமுயர்த்தி உலகு வியப்பேந்தியது
அக்காலம்.

இழப்புகளை விழுங்கியபடியான வெற்றிகளை
குவித்தபடியான ஏறுகாலத்தில்…

யாருமே தப்பிவிடாதபடியாக
வானத்தைப் பிளந்தாற்போல
பெருமழையைப் பொழிவித்தார்கள்.

நீண்ட…..
மிக நீண்டகால வெள்ளப்பெருக்கு
அனைத்தையும் அழித்துப் போட்டது.

தனிக் கூரைகளும் தனிக்கிணறுகளும்
தமக்கென்றேயிருந்தவர்களின் கண்முன்னே
யாவுமே சமதரையாக்கப்பட்டன.

வானமே கூரையான
எங்கென்றில்லாத நிலங்களில்
உயிர்களை ஒட்டிக்கொண்டனர் மிச்சமிருந்தவர்.

செத்தவருக்குச் சமமாய் எத்தனை நாட்கள்தான்
நடிக்கவியலும்?
இதோ!
விதைகளிலிருந்து முளைத்தவை நிமிரத் தொடங்குகின்றன.

இன்னொரு காலம் இயல்பாயெழுகிறது.

* (கேப்பாப்புலவுச் சிறுவனின் பேச்சைக் கேட்டபொழுதில்).....

வி. அல்விற்.
09.02.2017.

இது www.ilctamil.com வானொலிக்காக வழங்கப்பட்ட கவிதை.
நன்றி. திரு. முல்லை அமுதன்.

கருத்துகள் இல்லை: