சனி, 4 பிப்ரவரி, 2017

முதிர் கன்னி.

நான் முதிர்ந்து கொண்டிருக்கிறேன்
பனிப்பிரதேசமொன்றில் அச்சமுற்றிருக்கும்
இலையுதிர்கால மரமொன்றுபோல.

யாரெல்லாமோ வந்து போகின்றார்கள்.
ஆமென்று தலையசைக்க
பணம் பிடித்திருக்கிறது.
தூரதேசத்தின் பணத்தில்
உயர்ந்திருக்கும் வீடு பிடித்திருக்கிறது.
கிலோக்களில் இருக்கும் தகதகப்பும் பிடித்திருக்கிறது

ஆனாலும்…..
ஆமென்று தலையாட்ட இன்னும் ஒருவராவது வருவாரில்லை.

புறோக்கரும் சலிக்கிறார்.
பக்கத்து வீடுகள் என்னைப்பார்த்து பெருமிதமாக நகைக்கின்றன.
நண்பிகளின் குழந்தைகள் என்னை விளையாட அழைக்கின்றன.

இப்போதெல்லாம்
முன்பையும் விட அதிகமாகத் தலைகுனியப் பழகியுள்ளேன்.

சே!
நான் கொஞ்சம் மஞ்சள் பூசினாற் போலப் பிறந்திருக்கலாம்.
இடை இன்னும் கொஞ்சம் சிறுத்திருக்கலாம்.
மூக்கு கொஞ்சம் கூர்மையாக அமைந்திருக்கலாம்.

என் செய்வேன்?

என்னைப் பார்க்க வந்தவர்கள் எல்லோருமே
கண்ணாடியில் தம்மைப்பார்க்காத
பேரழகர்களெல்லோ!

அம்மா சொல்லுகின்றா கடவுள் அழைத்து வருவார் என்று.

காத்திருக்கிறேன்….
இந்தத் தையிலாவது ஒரு ஆணழகன் வருவானென்று.

வி. அல்விற்.
15.11.2016.

கருத்துகள் இல்லை: