திங்கள், 5 ஜனவரி, 2015

என்னோடு கனன்றிரு

பனி இறுக்கியிருக்கும்
இந்த உறை தேசம் 
என்னை மூடி விடாதபடி
செழுந்தமிழ் மொழியாள்
இதமாய் என் நுதல் வருடி 
தன் இளஞ்சூட்டில் 
துயில் கொள வைத்து 
காலச்சிறகடிப்பில் 
நொந்து விடாவண்ணம் 
தூக்கி நிறுத்தினாளே

என்னடி செய்வேன் 
நின் துணையன்றி
என் விரல்கள் அசையுமோ
நின் கண்ணசைவின்றி 
என் காலம் நிற்குமோ

தருவாய் நலம் பெற யாவும் 
அருள்வாய் அகிலம் வாழ
கருவாய் எழுத்தில் கனிவாய் 
உருவாய் உள்ளத்தில் நிறைவாய்

நின்னடி போற்றி வணங்குகிறேன்
என்னைக் காத்தருள்வாய்

காலத் துவழ்ப்பின்
குறை களைந்து மீண்டுன்
தாயாய் சேயாய் 
சதிபதியாய் 
பிரிந்திணையும் காதலராய்
உற்ற ஞெலுவராய்
அவர் பால் 
நின் புகழ் ஏற்றிட
காலக்கணக்கின்றி 
என்னோடு கனன்றிரு.

வி. அல்விற்.

01.01.2015.

கருத்துகள் இல்லை: