புதன், 25 ஏப்ரல், 2012

குழப்பம்


par Alvit Vincent, vendredi 20 avril 2012, 17:42 
 
இருட்டிலேயே கையால் தடவி மின் விளக்கை போட்டு அலறிக் கொண்டிருக்கும் நேர எழுப்பியை நிறுத்தி விட்டு மீண்டும் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்க ஆரம்பித்தாள். அதன் பின்பும் இன்னும் கொஞ்ச நேரம், இன்னும் கொஞ்ச நேரம் என்று தூங்கும் சுகம் இருக்கிறதே அந்த சுகம் தனியானது.இனி முடியாது எழும்பியே ஆக வேண்டும். போர்வையை விலத்தி தலையைத் தூக்கி எழும்ப முயற்சிக்க முதுகு  விண்ணென்று தெறிக்குமாற்போல் வலித்தது. கடவுளே இது இன்னும் எவ்வளவு காலத்திற்கு  என்று எண்ணியபடியே குளியலறைக்குள் நுழைந்து பல் விளக்கியபடியே கண்ணாடியில் முகத்தைப் பார்த்தாள். பார்க்க தன்னிரக்கம் பொங்கியது. கத்தி அழ வேண்டும் போலிருந்தது ஆனால் அதுவும் முடியாமல் இருந்தது. குளித்து முடித்து வெளியே வந்து தேநீர் போட்டு, காலைச் சாப்பாட்டையும் மேசையில் ஒழுங்குபடுத்தி விட்டு காந்தனின் மதியச் சாப்பாட்டையும் அவனுடைய பையில் வைத்தாள்.
இத்தனைக்கும் எழும்ப மனமின்றி கை கால்களைப் பரத்திக் கொண்டு காந்தன் படுத்திருந்தான். "காந்தன் எழும்புங்கோவன் நேரமாயிட்டுது" என்று தட்டி எழுப்பிவிட்டு அவசர அவசரமாக படுக்கையை ஒழுங்குபடுத்தி விட்டு ஓடி ஒடி வெளிக்கிடத் தொடங்கினாள்தனது சகோதரியின் திருமணத்துக்காக எனது பால்ய நண்பி ஜெயா, சாராவை இரண்டு நாட்களுக்கு முன்பாகவே அவளுடைய வீட்டிற்குக் கூட்டிச் சென்று விட்டதால் சாராவோடு செலவழிக்கும் நேரம் மிஞ்சியிருந்தது. இருவரும் வெளியே வந்து காந்தன் தொடருந்துப் பாதைக்குள் இறங்க, உதயா ஓடிப்போய் 6.45 மணி பேருந்துக்குள் ஏறி கதவு ஓரமாக உள்ள ஆசனத்தில் இடைஞ்சலின்றி அமர்ந்து கொண்டாள்.
சில சமயங்களில் மனது விரும்பாமல் கூட பல விடயங்களை அசை போட்டு ஆராயத் தொடக்கி விடும். கொஞ்ச நாட்களாக காந்தனின் போக்கில் மாற்றம் இருப்பது தெளிவாகத் தெரிந்தது. எந்த ஒரு சிக்கலுக்கும் தீர்வு காண்பதற்கு அச் சிக்கல் தோன்றிய காரணத்தையும் அதன் ஆழ அகலத்தையும் கண்டு கொள்ள வேண்டும். அதற்கு அது சம்பத்துப்பட்டவர்களிடையே ஒரு சுமுகமான தொடர்பாடல் இருந்தாலே அது சாத்தியமாகும். முன்பு மாதிரி காந்தன் அன்பாகக் கதைப்பது குறைந்து விட்டது அநேகமான சமயங்களில் தேவையில்லாமல் எரிந்து விழுவது வழக்கமாகி விட்டது. அவளுக்கும் வரவர பொறுமை குறைந்து பதிலுக்குத் திருப்பிக் கத்த முயற்சிப்பது தெரிகிறது. எப்படித்தான் இரண்டு பேர் உழைத்தாலும் கையிலே எதுவும் மிஞ்ச மாட்டேன் என்கிறது. போன மாதமும் காந்தனின் தாய் கொழும்புக்கு வந்திருந்தபோது ஒரு முழுச் சம்பளத்தையும் அனுப்ப வேண்டியிருந்ததால் வங்கிகளைச் சமாளிப்பது கடினமாயிருந்தது. மற்றைய எமது தேவைகளையும் செய்ய முடியாது போய் விட்டது.
பல சமயங்களில் வீட்டு அழுத்தங்களை விட வெளியிட அழுத்தம் பரவாயில்லை போல் தோன்றும் .வீட்டு யோசனைகள் குழப்பங்களுக்கிடையில் வேலையை ஒழுங்காகச் செய்து முடிப்பது இலகுவான காரியமல்ல. உதயாவுக்கு அன்றைய பொழுது கனமாகக் கழிந்து வீடு வந்து சேர ஆறு மணியாகி விட்டது. வீடு ஒழுங்கு படுத்தி சமையல் செய்து குளித்து முடிக்க ஒன்பது மணியாகி விட்டது. அந்நேரம் காந்தன் வீடு வந்து சேரும் நேரம். இன்னும் காணவில்லை. நேரம் பத்தாகியது. உதயாவுக்கு கண்கள் பாரமாகத் தொடங்கியது. இன்று கதைக்க வேண்டும். நாளைக்கு பின்நேர வேலைக்குப் போகாமல் நேரத்தோடு வீட்டுக்கு வரச் சொல்ல வேண்டும். காந்தனுக்கு திருமண வீட்டுக்குப் போக வேண்டும் என்ற ஞாபகம் இருக்கின்றதோ தெரியவில்லை. அத்துடன் மகள் சாரா எம்மை ஆவலுடன் பார்த்திருப்பாள். யோசனைகளை சுழர தூக்கம் அழுத்திக் கொண்டது.
ஏதோ ஒரு சத்தம் அலறித்துடித்து எழுப்பியது உதயாவை. எழுந்து பார்த்தவள் விக்கித்துப் போய் விட்டாள். காந்தன் தான் நிறை வெறியில் நிற்க முடியாமல் தள்ளாடிக் கொண்டிருந்தான். அப்படியே தொலைக்காட்சிப் பெட்டியின் மேலே விழப் போனவனை தடுக்க ஓடியவளை நாற்றம் கிட்டே நெருங்க விடவில்லை. அப்படியே குப்புற விழுந்தவன் மேலே அருகிலிருந்த சிறு மேசையின் மேலிருந்த பூச் சாடி விழுந்து உருண்டது. அவனைத் தூக்கிப் போய் படுக்கையில் படுக்க வைப்பது சாத்தியமானதாகப் படவில்லை.போர்வையை எடுத்து வந்து போர்த்தி விட்டு வரவேற்பறையின் இருக்கைகளிலேயே சுருண்டு கொண்டு அழத் தொடங்கியவளுக்கு எப்படி நித்திரையானால் என்று தெரியவில்லை. கண் விழித்தபோது உதயாவுக்கு நடந்தது கனவோ என்றிருந்தது. காந்தனை படுத்திருந்த இடத்தில் காணவில்லை. குளியலறையில் சத்தம் கேட்டது. வழமை போல் எல்லாம் ஆயத்தம் செய்து விட்டு, அவனுடன் பேச்சை ஆரம்பித்தாள். "நேற்று எங்கை போனீங்கள்" ? அவன் பதிலின்றி எதையோ தேடிக் கொண்டிருந்தான். "உங்களைத்தான் கேக்கிறேன் , நேற்று ராத்திரி எங்கே போயிட்டு வந்தீங்கள்?" அவனுக்குப் பட்டென்று கோபம் வந்தது. கையிலிருந்ததை தூக்கி எறிந்தான். "கட்டாயம் உமக்கு இதுக்குப் பதில் சொல்ல வேணுமோ?", "சாமத்தில நிறை வெறியில தள்ளாடிக்கொண்டு வந்தால் என்ன அர்த்தம்? நான் கேக்காமல் வேற ஆர் கேக்கிறது?" அவளும் பதிலுக்குக் கத்தினாள். " வாயை மூடும்! உமக்கு வரவர வாய் கூடி விட்டுது." "எனக்கொன்றும் வாய் கூடேல்லை. நீங்களும் உங்கட பழக்க வழக்கங்களும் சரியாயில்லை எண்டு சொல்லுறன் ". "நீர் ஒண்டும் எனக்கு வழி சொல்லித் தர வேண்டாம். அவனவன் வெளிநாட்டுக்கு வந்து எப்பிடியெல்லாம் வாழ்க்கையை அநுபவித்துக் கொண்டிருக்கிறான்; நானும் இங்க வந்து வைத்து வருசமாக கழுவிக்கொண்டுதான் இருக்கிறன் வேற என்னத்தக் கண்டன்?" இதைக் கேட்டதும் உதயாவுக்கு என்றுமில்லாமல் கோபம் பொங்கியது. "நான் என்ன சும்மாவா இருக்கிறேன், நானும் வந்த காலத்திலிருந்து வேலை செய்து கொண்டுதானிருக்கிறேன்" கோபம் அழுகையாகி வெடித்தது.
கோபங்களின் உச்சங்களில் சொற்கள் தடுமாறுவது மனித இயல்புகளில் ஒன்று. அது அங்கே நடந்தது.
"ஓமடி, அதுதான் உழைக்கிறன் எண்ட திமிர்ல வாய் காட்டுகிறாய்" கத்தியபடியே தேநீர்க் கோப்பையை தூக்கி வீசி விட்டு தன்னுடைய பையைத் தூக்கிக் கொண்டு கதவை அடித்துச் சாத்தி விட்டு இறங்கிப் போய் விட்டான்.
அழுதபடியே சிதறியவற்றைக் கூட்டிப் போட்டு விட்டு வீட்டைப் பூட்டிக் கொண்டு தானும் இறங்கினாள். இன்று வழமையான பேருந்தைப் பிடிக்க முடியாது. ஏழு மணியைப் பிடித்து பிந்திப் போனதற்கான மன்னிப்பையும் கேட்டு வேலை தொடங்குவதற்குள் மூச்சு வாங்கியது. எங்களுக்குள் ஆயிரம் இடிகள் இருந்தாலும் அப்படியே விழுங்கிக் கொண்டு முகத்தில் சாந்தம் காட்டி வேலை செய்வது எமது இயல்புகளில் ஒன்று.காலையில் நடந்த சண்டையினால் இன்று திருமணத்திற்குப் போவது பற்றி முடிவெடுக்க முடியாமல் போய் விட்டது.நாங்கள் போகாவிட்டால் சாரா மிகவும் நொந்து போவாள். இங்கே குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்கவிடின் அவர்கள் தறிகெட்டுப் போவதற்கான சாத்தியங்கள் மிக அதிகமுண்டு. இன்று காலைச் சண்டையில் சாரா இல்லாமல் போனது நல்லது என்று தோன்றியது. வேலை முடிய வெளியே வந்து ஜெயாவுக்குத் தொலைபேசியில் உடல் நிலை சரியில்லை திருமணத்துக்கு அனேகமாக வரமுடியாமல் போகலாம் என்று போய் சொன்னாள்.அப்படி வரமுடியாவிடின் சாராவத் திருமணம் முடிய வீட்டில் கொண்டு வந்து விடுமாறு கேட்டுக் கொண்டேன்.
இரவாக நெஞ்சு படபடக்கத் தொடங்கியது. காந்தன் இன்னும் திரும்பவில்லை. அவன் வருவதற்கு முன்பே சாரா வந்து நித்திரையாகி விட்டால் நல்லது என்று நினைத்தேன். நேற்றைய நிலையிலே இன்றும் அவன் வந்தால், அவனைப் பார்த்து குழந்தை பயந்து வெறுப்படையும் என்பது நிச்சயம். அதனை அவள் விரும்பவில்லை. எனது தோழி சிறிது நேரத்துக்குள் குழந்தையுடன் வந்து விட்டாள்.தோழியின் கேள்விகளுக்குப் பதிலளித்து அவளை அனுப்பி விட்டு சாராவையும் நித்திரையாக்கி விட்டாள்.

காந்தனுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தாள். நேர எழுப்பி இல்லாவிட்டாலும் அந்த நேரத்துக்கு பழக்கத்தால் எழும்புவது போல் உதயா எழும்பியபோது மணி ஐந்து நாற்பத்தைந்து,
சுற்றிலும் பார்த்தபோது காந்தன் வந்ததற்கான அடையாளம் எதுவும் தெரியவில்லை. அவளுக்குள் இப்போது பலவிதமான பயங்கள் பற்றிக் கொண்டன. இவருக்கு என்ன நடந்தது; ஏன் இப்படி நடந்து கொள்ளுகின்றான்? இப்ப எங்கே என்று ஆளைத் தேடுவது? நல்ல வேளை இன்று வேலை இல்லை என்று எண்ணிக் கொண்டாள்.
"மம்மோ , மம்மோ" என்று சிணுங்கியபடி சாரா எழுந்து வந்து காலைக் கட்டிக் கொண்டாள். "பாப்பா எங்க " அவளுக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியவில்லை. சமாளித்தபடி "பாப்பா அவசரமான ஒரு அலுவலாக வெளியே போய் விட்டார் இப்ப வந்திடுவார் " என்று சொன்னாள். அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. அவன் வருவான் என்று பார்த்திருப்பதா? அல்லது தெரிந்தவர்களிடம் விசாரிப்பதா? யாரிடமாவது விசாரிக்கவும் விருப்பமின்றி இருந்தது. இவர் வந்தாரா என்று விசாரிக்க அவர்கள் இவர்களுக்குள் ஏதோ பிரச்சனை என்று ஆளுக்கொருவராக தாம் நினைத்தபடி எல்லாம் கதைகளைக் கட்டிக் காற்றிலே பறக்க விடுவார்கள். கற்பனைகளில் கை தேர்ந்தவர்கள் அல்லவா நம் மக்கள்? யோசிக்க யோசிக்க மண்டை வெடிக்குமாப் போல் இருந்தது.
நேரம் ஏழரை ஆகிக் கொண்டிருந்தது. அந்நேரம் தொலைபேசி ஒலித்தது. கைகளிலே தொலைபேசியைத் தூக்கும் போது ஒரு நடுக்கம் இருந்ததை உணர முடிந்தது.
, "ஹலோ....... ஓம், நான் தான், விலாசத்தைச் சொல்லுங்கோ! உடனே வாறன்"....... ஒரு காகிதம் எடுத்து அவசரமாக ஏதோ கிறுக்கிக் கொண்டு நன்றி சொல்லி விட்டு தொலை பேசியை துண்டித்தாள் . பதட்டமாக சாராவையும் அள்ளித் தோளிலே போட்டுக் கொண்டு வெளியே வந்து வாடகை உந்து ஒன்றிலே ஏறிக்கொண்டு விலாசத்தைச் சொன்னாள். கண்கள் பொழியத் தயாராகுவதை தவிர்க்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள்.கடவுளே ஒன்றும் நடந்திருக்கக் கூடாது என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டாள்.
அவள் வந்தடைந்தது ஒரு மருத்துவமனை. வரவேற்பறையில் பெயரைச் சொல்லி அறை எண்ணைக் கேட்டுக் கொண்டு மின் ஏற்றிக்குக் காத்திருக்கப் பொறுமையின்றி மாடிப் படிகளால் குழந்தையுடன் ஓடினாள்.அறைக்குள் நுழைந்து அவன் படுக்கையில் கிடந்த கோலத்தைக் கண்டு ஓவென்று கத்த முயற்சித்தவள் அங்கு நின்ற ஒரு மருத்துவரின் பார்வையைக் கண்டதும் வாயைக் கைகளால் மூடிக் கொண்டாள். மருத்துவர் அவளிடம் விடயத்தை மெதுவான குரலில் விளக்கினார். காந்தன் குடி வெறியில் இருந்திருந்த வேளையில் யாரோ அவனைத் தாக்கிச் சென்றிருக்கின்றார்கள். நினைவிழந்து கிடந்தவனை காவல்துறை மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றது. "நல்ல வேளை காவல்துறையினர் பார்த்துக் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றனர் இல்லாவிட்டால் இரவு முழுக்க கவனிப்பற்றுக் கிடந்திருப்பாரானால் என்ன நடந்திருக்கும் என்றே சொல்ல முடியாது. அவருக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்திருக்கிறது " என்று சொல்லி விட்டு மருத்துவர் சென்று விட்டார்.
உதயா அவனுடைய கட்டிலுக்குப் பக்கத்தில் வந்து ஒரு கதிரையை இழுத்துப் போட்டுக் கொண்டு இருந்தாள்.இவ்வளவு அமளிகளையும் பார்த்துப் பயந்திருந்த சாரா தாயை இறுக்கிக் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தாள். மாலை ஆறு மணியளவில் காந்தன் கண்விழித்தான் "மம்மா , பாப்பா முழிச்சிட்டார்" என்று சாரா கத்தினாள். உதயா மருத்துவரை ஓடிப் போய் கூட்டி வந்தாள். அவர் பார்த்து விட்டு "இன்றிருந்து விட்டு நாளைக்கே வீட்டுக்குப் போகலாம்; கொஞ்ச நாட்கள் ஓய்வு எடுத்தால் நல்லதுஎன்று சொல்லி விட்டுப் போய் விட்டார். காந்தன் உதயாவின் முகத்தைப் பார்க்க முடியாது தலையைத் திருப்பிக் கொண்டான். இரவு எட்டு மணியாகி விட்டதால் நாளைக்கு வருவதாகச் சொல்லி விட்டு குழந்தையுடன் உதயா வீடு வந்து சேர்ந்தாள்.
 அடுத்த நாள் மாலை வீட்டுக்கு காந்தன் வந்து சேர்ந்து விட்டான். சாரா அருகிலேயே அப்பாவுடன் நாள் முழுக்க ஒட்டிக் கொண்டிருந்தாள். இரவுச்சாப்பாடு முடிந்து சாராவும் தூங்கி விட்டாள். உதயாவுக்கு என்ன பேசுவது என்று யோசனையாக இருந்தது. ஆனால் காந்தனே முதலில் தொடங்கினான். " என்னை மன்னித்துக் கொள்ளும்,எல்லாம் என்னால் தான் வந்தது. அண்டைக்கு இரவு நான் கொஞ்சன் குடிச்சிருந்தனான் தான். இரண்டு கறுவல்கள் தான் என்னை மறிச்சு களவுக்காக அடிச்சவங்கள். ஐயாயிரம் பிரான்க் காசும் போயிட்டுது." உதயா மெதுவாக "பொருட்களைத் தொலைத்தால் பிறகு சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் நல்ல வாழ்க்கைத் தொலைத்தால் பெறலாமா?" அவன் தலை குனிந்தான். அவள் தொடர்ந்தாள் " எமக்கு மேலே இருப்பவர்களைப் பார்த்து ஏங்கி எம் வாழ்வை நாம் அழித்துக் கொள்வதை விட எமக்கும் கீழே இருப்பவர்களைப் பார்ப்பது நல்லது.எம் சொந்த நாட்டிலே எப்படி எல்லாமோ வாழ்ந்தோம். எல்லாம் இழந்து இங்கே புகுந்திருக்கின்றோம். இங்கேயிருந்து கொண்டு எமது சொந்த பந்தங்களைக் கவனிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் எமக்குண்டு. இதில் நாங்கள் சோர்வடைந்தால் எப்படி? அவர்களை வேறு யார்தான் கவனிப்பார்கள்? அவர்கள் கார் வைத்திருக்கிறார்கள், வீடு வைத்திருக்கிறார்கள், கப்பல் வைத்திருக்கிறார்கள் என்று எமக்குள் மாய்ந்து எம் வாழ்வை அழித்துக் கொள்ளவது முட்டாள்த்தனம் இல்லையா? நாங்கள் எங்களுடைய மகிழ்ச்சியான ஒழுங்கமைப்பான, அடுத்தவருக்கு பயன்படும் ஒரு வாழ்க்கை முறையை வாழ்வது எமக்குப் பெருமையும் நன்மையும் அல்லவா?".
 இங்கு வந்த காலத்தில் இருந்தே தொடர்ந்தும் பல கஷ்டங்களை அனுபவித்ததாலும், மற்றவர்களுடன் ஒப்பிட்டு மனம் வெந்து வெதும்பியதும் புரிந்தது. "நான் நடந்து கண்டது பிழை தான். இனி மேல் இம்மாதிரி நடக்க முயற்சிக்க மாட்டேன்" என்றான். "சரி நடந்ததைப் பற்றிக் கதைப்பதில் பயனில்லை. இனி நடப்பவை நன்றாக அமைய முயற்சிப்போம். நாளை மத்தியானம் உயிர்த்த ஞாயிறு பூசை இருப்பது தெரியும் தானே. எல்லாரும் பூசைக்கு ஒன்றாகப் போக வேண்டும். இயேசுவின் உயிர்ப்பு எமது குடும்பத்துக்கு வெளிச்சமாக அமைய வேண்டும் என்று மன்றாடுவோம் ". நீண்ட நாட்களின் பின்னர் இருவரும் அமைதியான மனநிலையில் விரைவில் உறங்கிப் போனார்கள்.

கருத்துகள் இல்லை: