வெள்ளி, 27 ஏப்ரல், 2012

என் மண்

என்னுயிர் மண்ணே! என் முதல் பிறந்தநாளின்போது கருஞ்சிவப்பு நிற சட்டையுடன் தோழியருடன் விளையாடி கிணற்றுக்குள் விழுந்து ஊரவர்  தூக்கி என் உயிர் காத்த மண்ணே!
காலை எழுந்து  சமையலறைப் பக்க கதவைத்திறந்தவுடன் பாதியான வானத்தில் கிழக்குத் திசையில் இளஞ்சூரியன் தகதகத்தெழ கரை தொட்டுச் செல்லும் அலைகள் காலப் பிரமாணத்துடன் செவிவந்து தழுவ எனை எழுப்பிய மண்ணே!
நான் பார்த்திருந்த போதே மெதுமெதுவாய்  மேலெழுந்ததும்  மாலை  மேற்கிலே மறுபாதிக் கடலில் அமிழ்ந்ததும் என்றினிப் பார்ப்பேன்?
முற்றத்தில் தென்னை! ஒவ்வொன்றுக்கும் எம்  ஒவ்வொருவரின் பெயர்; அக்கா ஆசையாய் நட்ட அழகான மாதுழை; இரு பெரிய வேம்புகள்; மாலையானால் ஊரைக்கூட்டும் மல்லிகைப் பந்தல்; முல்லைப்பந்தல்; வித விதமான அழகு நிறச் செடிகள்; பெரிய செவ்வரத்தை, தூங்கு  செவ்வரத்தைகள்; இப்படி பசுமையனைத்தையும் கொட்டிக் கொடுத்த என் மண்ணே!
வீட்டுக்கு வெளியே கோவிலின் வெட்டையில் ஈருந்து பழகுகையில் விழுந்தெழுந்து காயம் தந்த என் மண்ணே!
வெட்டையின் வலப்புறத்தில் என் (எம்) அறிவை வளர்த்த வாசிகசாலையும் மகிழ்வும் தந்த மண்ணே!
மாமரங்கள் சூழ நிமிர்ந்து நின்ற ஆலயமும் அதை சுற்றி நாம் செய்த விளையாட்டுக்களும் நீ மறக்க மாட்டாய்; சதி செய்தோர் துரத்தியதால் தூர தேசம் நாம் ஓடினோம்; எமைப் பழி வாங்கத்தானோ நீ ஒழியிழந்து, களையிழந்து, காடாகிப் போனாய். என் பிறப்பிலும், வளர்ப்பிலும், மகிழ்விலும், துக்கத்திலும் பங்கு போட்ட என் மண்ணே!
என் மனமின்று வலிக்கிறது.

கருத்துகள் இல்லை: