புதன், 25 ஏப்ரல், 2012

சுமைகள்


par Alvit Vincent, mercredi 18 avril 2012, 22:15 ·
 
எமது ஊரை விட்டு நாங்கள் ஓடிய நாட்கள் எத்தனை என்று எண்ண? ஒவ்வொரு தடவையும் "வாறாங்கள்" என்ற அறிவிப்புக் கேட்டு கைகளில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு ஓடுவதும் பின்னர் திரும்பி வருவதுமாகக் கழிந்த நாட்கள் . கொஞ்சம் உக்கிரமான பொழுது எடுக்கக் கூடியவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு கொஞ்சம் தள்ளியுள்ள கிராமத்துக்கு அகதியானோம். வான வேடிக்கைகள் பலமாயிருந்தது.

"நாங்கள் படித்திருக்கின்றோம்" என்பதை உறுதிப்படுத்தும் அத்தாட்சிகளை ஒரு இடத்திலும் அதன் பிரதியை கைப் பையிலும் மறு பிரதியை பல்கலைக்கழக வதிவிடத்திலுமாக வைத்திருந்தேன். மூன்றில் ஏதாவது ஒன்றாவது இருந்து நானும் உயிருடன் இருந்தால் அவை பயன்படும் என்று எண்ணிய நேரம் அது. அன்று பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருக்க மனமின்றி இருந்தது. வீட்டுக்குப் போய் அம்மாவையும் குடும்பத்தையும் பார்த்தால் நல்லது என்று தோன்றியது. புறப்பட்டு விட்டேன். குடும்பத்தார் நான் எண்ணியது போன்றே ஊரை விட்டு அருகிலிருந்த இன்னோர் ஊருக்கு போயிருந்தனர். அவர்களைத் தேடித் பிடித்துக் கண்டதும் ஆறுதலாயிருந்தது. அக்கா ஓடும் போது கட்டிக் கொண்டு வந்திருந்த சோறும் மீன் குழம்பும் எனக்குச் சாப்பிடத் தந்தார். அத்தார் "ஏன் பிள்ளை வந்தனீர்? நான் வந்து பார்த்திருப்பேன் தானே" என்றார். நான் ஏதும் பேசவில்லை.
அன்றிரவு பல்கலைக்கழகமும் நாங்கள் தங்கியிருந்த விடுதிகளும் குதறப்பட்டது. அதன் சுற்றாடல் விறைத்துப் போனது என் மனமும் கூட. திரும்பிப் போய் விடுதியைப் பார்த்தபோது வெறுமையும் அலங்கோலங்களும் வரவேற்றன. சில சக மாணவியர் படிப்பைக் கை விடலாமா என்று அழுது அரற்றுவது கேட்டது. அங்கே நிற்கப் பிடிக்காது ஊருக்குத் திரும்பினேன்.
தற்காலிகமாக தங்கியிருந்த கிராமமும் பெயர வேண்டியதாயிற்று. கொஞ்சம் தூரவுள்ள ஊருக்கு மாறினோம். இருந்தாலும் சில அமைதியான நேரம் பார்த்து சிலர் ஊருக்குப் போய் இன்னும் எடுக்க முடிந்த பொருட்களை எடுத்துவர முற்பட்டனர். அந்த ஒருசிலரோடு நானும் எமது வீட்டை நோக்கிப் புறப்பட்டேன். ஊரை அடைந்ததும் அதன் மயானம் மனத்தைக் கலங்கடித்தது. ஏன் வந்தோம் என்றாயிற்று.

நாம் விட்டு விட்டு வந்தவற்றுள் ஒன்று நாங்கள் வளர்த்த எமது நாய். என்னைக் கண்டதும் என் காலைச் சுற்றி வந்தது. அது சாப்பிட்டு எத்தனை நாளோ என்று நினைத்தேன். நான் சென்றதோ மிதியுந்தில். நாயோ பெரியது .என்னால் அதை தூக்கி வைத்துக் கொண்டு ஓட முடியாது. மிதியுந்தில் ஏறி அதனை பின்னால் அழைத்தபடி மெதுவாகச் செல்லத் தொடங்கினேன். என்னுடன் சேர்ந்து ஓடத் தொடங்கியது நாம் வளர்த்த நாய். வானத்திலிருந்தும் கடலிலிருந்தும் பொழிவுகள் இடைவிடாது தொடரத் தொடங்கின. பல இடங்களிலே நின்று மரங்களின் கீழே மறைந்து மறைந்து செல்ல வேண்டியதாயிற்று. நாங்கள் வளர்த்தது மிகவும் களைத்துப் போய் விட்டது தெரிந்தது. எப்படியும் நாங்கள் இருக்கும் இடத்திற்குக் கூட்டிக் கொண்டு போய்ச் சேர்த்து விடுவேன் என்று எண்ணினேன். ஆனால் ஒரு கட்டத்தில் நாங்கள் ஒரு திசையில் ஓட அதுவும் வேறு திசையில் ஓடிவிட்டதோ என்னவோ எங்கே எப்படிப் போனது என்று என்னால் கண்டு பிடிக்க முடியாமல் போய் விட்டது. மனம் வலிக்க வீட்டிலிருந்து கிடைத்த சில பொருட்களோடு மட்டும் திரும்பினேன்.
24 வருடச் சுமை இன்னும் இறங்கவில்லை.

வி. அல்விற்

கருத்துகள் இல்லை: