புதன், 25 ஏப்ரல், 2012

மதங்கள் மரணிக்கின்றன


par Alvit Vincent, jeudi 19 avril 2012, 23:26
 

நாட்கள் மாதங்களாகி மாதங்கள் வருடங்களாகி கல்வி உயர்தரப்பரீட்சையில் சித்தியும் பெற்றாயிற்று. பல்கலைக்கழக கனவும்  நனவாயிற்று. வீடு கொண்டாடிற்று. அடுத்த சிக்கல் பெம்பிளைப் பிள்ளையை எப்படித் தனியே ஒவ்வொரு நாளும் போய் வர வைப்பது? சூழ்நிலை பிழைத்திருந்த நேரம் அது. முதல் வருடம் விடுதியில் இடமும் கிடைக்கவில்லை.வீட்டில் தினமும் எனது பேச்சுத்தான். ஒருவாறாக எனது சிறுவயதுத் தோழி ஒருவரின் உறவினர் பல்கலைக்கழகத்திற்கு அருகில் இருப்பது தெரிந்தது. சிநேகிதியும் என்னுடனேயே உயர்கல்வி அனுமதி பெற்றிருந்தார். இருவருமாக அங்கே தங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது.

பல்கலைக்கழகத்தையும் விடுதியையும் ஊடறுத்து தொடருந்துத் தண்டவாளம் நீண்டிருந்த அந்த வீதியின் இரு மருங்கிலும் வீடுகள். மக்களையும் அவர்களைப் பிரித்துப் பார்க்கும் நச்சு வேர்களையும் அவ்வளவாக நான் கணக்கில் கொள்ளாத வயது அது. அவ்வீதியின் சில இடங்களில் எமது seniors லேசாக மறைந்திருந்து தாகசாந்தி செய்வதைப் பார்த்துப் பாராதது போல் நாகரீகமாக கடந்து போயிருக்கின்றோம். அவ்வீதியின் இடதுபுறத்திலே அமைந்திருந்தது அந்த வீடு. நாங்கள் இருவரும் அங்கு ஓர் அறையிலே தங்கினோம். படிப்புத் தொடர்ந்து கொண்டிருந்தது. அவ்வீட்டு மனிதர்கள் மனிதர்களாகவே நடந்து கொண்டார்கள். மின்சாரம் இருட்டடித்த சாமங்களில்   எல்லாம் அவ்வீட்டுச் சிறுபெண் எண்ணெய் விளக்குடன் வாசலிலே சிரித்தபடி நிற்பாள். எமது அறையிலே சுதந்திரமாக இருந்தோம்.

அதே வீதியின் இன்னோர் ஓரத்தில் தினமும் ஓர் ஆடையும் அலங்காரமுமாக வரும் எமது இன்னோர் சிநேகிதியும் அவரது சகோதரியும் (அவர் ஒரு கன்னியாஸ்திரி) வேறொரு வீட்டில் தங்கியிருந்தனர். அவர்களுடைய உறவினர் எமது ஊரிலுள்ள எமது தூரத்து உறவினருடன் திருமணம் செய்ததால் என்னை அடையாளம் கண்டு கொண்டனர். காலையில் வகுப்பு நேரங்களில் அனேகமாக எல்லோரும் ஒன்றாகப் போவது வழக்கம். வெவ்வேறு ஊர்கள், வெவ்வேறு மாவட்டங்கள், வெவ்வேறு பழக்க வழக்கங்களுடையவர்களுடன் ஒத்துப் போவதற்கு என்னைப் பழக்கப்படுத்திக் கொண்டிருந்தேன்.

 அன்றொரு நாள் அந்தக் கன்னியாஸ்திரி என்னிடம்" நீர் எங்கே தங்கியிருக்கின்றீர்" என்று கேட்டார். நான் தங்கியிருந்த வீட்டை அடையாளம் சொன்னேன். அவர் கேட்டார் "உமக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா" என்று. உடனே எனக்குத் தோன்றியது "என் மதம் இக்கன்னியாஸ்திரியால் களங்கப்படுகிறது" என்று.

கருத்துகள் இல்லை: