சனி, 30 மே, 2015

மன்னிப்பு.

மன்னிப்பு.

எதையிட்டாக இருக்க வேண்டும் 
உங்கள் மீதான
எனது மன்னிப்பு 
என்று எதிர்பார்க்கிறீர்கள்.

கொடுவதை புரியும்
உங்கள் வார்த்தை மீதா
வார்த்தைகள் தரும் 
கசப்பின் மீதா
அவை கிழிக்கும் 
கோடுகள் மீதா

எதுவென்று சொல்ல

நாகரீகத்தின் உச்சியில் நின்றபடி 
அசிங்கமாக காறி உமிழ்கிறீர்கள்
மறைக்க முடியாத 
உங்கள் உள் முகங்களை
உள்ளிழுத்தபடியே.

ஓடவெழும் என் கால்களை 
அழுத்தமாக தரைபதித்து
நிமிர்கிறேன்
உங்கள் நாற்றமெடுத்த சிந்தனைகள் 
நாணம் கொள்ளும்படி.

பச்சையிரை தின்ன அவாவுறும்
உங்கள் வாய்களை
மன்னித்து இரையாகும்படி
கேட்க விரும்புகிறீர்களா

எனது வார்த்தைகளுக்கு 
விலங்கிட்டு 
வெளியே வராத 
ஆயுள் கைதியாய்
மறைத்துவிடும் 
உங்கள் களவாணித்தனங்களுக்கு
மன்னிப்பளித்து மாண்டு விட 
இன்னும் முடியாதிருக்கிறது

உங்கள் பலங்களெனும்
சீரறுப்புக்களை
இறக்கி வைப்பதற்கான 
பேரிடம் எனதுடலென
கையெழுத்திடப்படாத சட்டம் 
எழுதி வைத்தது யார்

மன்னிப்புக்களை 
மாறாட்டத்துடன் மிதித்து விட்டு
மதத்துக் கிடப்போரே
மந்தாரம் விலக்கி 
மனிதராய் பாருங்கள் 

எதையிட்டு 
உங்களை மன்னிக்க முடியும்?

வி.அல்விற்.
29.03.2015.


(இது மார்ச் மாதம் ஒரு சிற்றிதழுக்காக எழுதி அனுப்பாதது).

கருத்துகள் இல்லை: