சனி, 30 மே, 2015

என்றைக்கும்.

அடர்வனத்தில் 
இல்லையெனாத 
பசிய மர நெருக்கம் போல 
நெருங்கியுள்ள
கடந்த கால கசப்புக்கள்
இன்னும் 
இன்னும் 
துளிர்த்தபடியே.

இங்கே பழுத்தல்
நிகழ்வதில்லை 
வீழ்ந்தொழிய.

எப்போதும் கூடவே
பேச்சொலிகள்
தோள் பற்றித் 
தொடருகின்றன

எங்கும் நிறைந்திருப்பதான 
தெருக்களும் 
அடையாளங்கள் உணர்த்தும் 
தடங்களும் 
கனவிலும்
கைபற்றிச் செல்லுகின்றன

நினைவுகள் 
வழி தொலைத்த 
காட்டின் வழி 
ஏதிலியென
பலமுறை தடுமாறியபடியே
பயணிக்கின்றன.

அறியவும் 
அறியப்படவுமாயுள்ள
பிரார்த்தனைகளின் பட்டியல் 
நீளமானதொன்றாயிருக்கிறது

பிரார்த்தனைகளை 
நிறைவேற்றவும் 
நாளைக்கான மணித்துளிகளை
எண்ணவுமென

சமுத்திரமளவுள்ள நம்பிக்கைகள்
இன்னுமிருக்கின்றன.

வி. அல்விற்.

25.05.2015.

கருத்துகள் இல்லை: