சனி, 1 செப்டம்பர், 2012

ஊருக்குபதேசம்!

வீடு ஒரே அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. சங்கரி கத்திக் கொண்டிருந்தாள். "இவளுக்குப் படிச்சுப் படிச்சுச் சொன்னனான்; கவனமாயிரு இப்பிடியான பிரச்சனைகள் எல்லாம் வரப் பாக்கும் எண்டு. பார் இப்ப என்ன மாதிரியான வில்லங்கத்தை வாங்கிக் கொண்டு வந்து நிக்கிறாள்; நாங்கள் சொன்னதெல்லாத்தையும் ஒரு காதால கேட்டு மற்றக் காதால விட்டிட்டு இப்ப முழிசிக் கொண்டு நிக்கிறாள்" கோபத்தில் கழுவிக் கொண்டிருந்த பாத்திரத்தை ஓங்கி அடித்து வைத்தாள். மகள் வேணி ஒன்றும் பேசாமல் விரல் நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தாள். திரும்பிப் பார்த்த சங்கரிக்கு கோபம் உச்சிவரை ஏறியது. "உதில மரம் மாதிரி நிண்டு என்ர கோபத்தைக் கிளறாமல் எங்களுக்கு இண்டைக்கு ஒரு முடிவு சொல்ல வேணும்; நீ என்ன சொல்லுறது நாங்கள் சொல்லுறதை நீ கேக்க வேணும், அவ்வளவுதான்"
வேணி தாயை நிமிர்ந்து பார்த்தாள். "என்னடி முறைக்கிறாய்? இதெல்லாம் என்னட்டைச் சரி வராது, சொல்லிப் போட்டன்......
"ஏன் சும்மா பாக்கவும் கூடாதோ?"
" சும்மா பாக்கிற மாதிரியே கிடக்குது? எத்தினை வருஷமா இதுக்குள்ளை கிடந்தது சேவை(???) செய்து மாயுறம்; எங்களுக்கென்ன விசரே இப்பிடியெல்லாம் செய்ய? எங்கட செல்வாக்கால உன்னையும் அதுக்குள்ளால வளத்து விடலாம் எண்டு நாங்கள் நினைச்சுக் கொண்டு இருக்க நீ என்ன வேலை பாத்துக் கொண்டு நிக்கிறாய்? சரி லவ் பண்ணினதுதான் பண்ணினாய் ஒரு தராதரம் பாத்துச் செய்திருக்கக் கூடாதோ?"....
"உங்கடை தராதரம் எண்டா என்ன எண்டு சொல்லுங்கோ முதல்ல. உங்கட தராதரம், உயரம், நீளம், அகலம் எல்லாம் பாத்து அது வாறேல்லை"
மகளின் பேச்சைக் கேட்டு சங்கரி திகைத்து நிற்க, கணவன் மனோ அறைக்குள்ளிருந்து வெளியே பாய்ந்து வந்து கைகளால் மகளுக்கு விளாசத் தொடங்கினான். திகைத்துப் போய் நின்றிருந்த சங்கரி நிலைமையை உணர்ந்து ஓடி வந்து கணவனைப் பிடித்து இழுத்துப் பிரித்தாள். அவனுக்கு மூச்சு வாங்கியது. அடி வாங்கின மகளோ கண்கள் கலங்கினதே தவிர நின்ற இடத்தை விட்டு அசையாமல் நின்றாள். " பார் அவளை அடி வாங்கியும் கல்லு மாதிரி நிக்கிறாள். கொழுப்பு.. நாங்கள் பாத்துப் பாத்து வளத்துவிட ஆரோ ஊர் பேர் தெரியாதவனை எங்களுக்கு காட்டுறாள்... உன்ர படிப்பை எண்டாலும் நினைச்சனியே! படிப்பு முடிச்சு வேலைக்குப் போகப் போறாய் நீ அவன் அங்கை பத்தாம் வகுப்புப் படிச்சுப் போட்டு இஞ்சை வந்து விசாவுக்குப் பாத்துக் கொண்டிருக்கிறான். உது சரி வருமே? கொஞ்சமெண்டாலும் உன்ரை எதிர்காலம் எப்பிடி இருக்கும் எண்டு நினைச்சுப் பார்த்தனியே? வார கோவத்துக்கு உன்னை வெட்டிப் போடா வேணும் போல கிடக்கு. செய்யிறதையும் செய்து போட்டுக் கதைக்கிறாள் கதை......
"நீங்க உள்ளுக்க போங்கோப்பா நான் அவளோட கதைக்கிறன்என்ற சங்கரிக்கு அவன் திரும்பவும் மகளை அடித்து விடுவானோ என்று பயமாக இருந்தது. அதனால் வேணியின் வைராக்கியம் கூடி விடக் கூடிய நிலைமையையும் உணர்ந்திருந்ததால் கணவனை மகளை நெருங்க விடாமல் இடையில் நின்று கொண்டாள்.
மனோவுக்கும் சங்கரிக்கும் ஒரே மகள் வேணி. எல்லாமே தங்கள் சார்பாக இயங்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் கணவனுக்கேற்ற மனைவி மனைவிக்கேற்ற கணவன். சுயநலத்துக்காய் பொதுநலத்துக்குள் ஓடித்திரிபவர்கள். இலவச ஆலோசனைகளை அள்ளி அள்ளித் தேவைப்படுவோருக்கு வழங்குபவர்கள். ஆனால் வீட்டுக்குள்ளே சிக்கல் வந்த பொது "ஊருக்குத்தான் உபதேசம் உனக்கல்லடி பெண்ணே" என்றதை மகளால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
வேணிக்கு பொதுப் பணியிலே தன்னை இணைத்துக் கொண்ட யுவன்சனை ஏனோ பிடித்துப் போய் விட்டது.காதலுக்கு மனம் மட்டும் போதுமே! கலியானத்துக்குத்தானே மண்டையைப் போட்டுப் பிய்க்க வேண்டி உள்ளது. எதையும் (எதிர்) பாராது மனங்கள் விரும்பி, பேசி, நெருக்கமாக முதலில் வெளியே புகைந்து பின் அனலாகி வீட்டுக்குள்ளே கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. வெட்டிப் பிரித்து மகளைக் கட்டிப் போட்டனர்.கூட இருந்து துணை போனவர்களெல்லாம் வசவுகளுக்கு உள்ளானார்கள். யுவன்சனுக்கோ எதுவும் செய்ய முடியாத நிலை. விசா வேறு இல்லை. காலம் நல்ல பதில் சொல்லும் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தான். ஆனால் ஆனால் மறுபக்கத்தில் வேணியை எப்படியெல்லாம் சொல்லி மனம் மாற்ற முடியுமோ அப்படி மாற்றிக் கொண்டிருந்தனர் அவளுடைய பெற்றோர். இரண்டு மாதங்களில் அவசர அவசரமாக ஒரு மாப்பிள்ளையை லண்டனில் பொறுக்கி எடுத்தனர். படத்தைக் காட்டினர்;
அவள் "நான் செத்துப் போவேன்" என்றாள்.
 " நாங்கள் முதல் செத்துப் போறோம், அதுக்குப் பிறகு நீ ஆரோடஎண்டாலும் ஓடிப்போ" என்றார் தந்தை.  
அவள் தலையில் அடித்துக் கொண்டு நாள் முழுக்க அழுதாள். யாரும் கண்டு கொள்ளவில்லை.அதற்கு மேல் அவளிடமிருந்து ஒன்றும் கேட்காமல் திருமண நாள் குறித்து பொறுக்கி எடுத்த மாப்பிள்ளையைக் கொண்டு சகல பாதுகாப்போடு தாலி கட்டுவித்தார்கள். தங்கள் தராதரத்தோடு கூடிய லண்டன் இன்ஜினியர் மாப்பிள்ளையோடு லண்டனில் வாழ மகளை அனுப்பி விட்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
 வேணிக்கு மனம் எதிலும் ஒட்டவில்லை; மாமியார் அன்பாயிருந்தார்; கணவன் சாதாரணமாய்ப் பேசினான். அவர்களுக்கு தனது பிரச்சனை தெரியுமா தெரியாதா என்று கூட அவளுக்கு விளங்கவில்லை. மனம் ஒரு நிலையில் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது. இரண்டு கிழமைகள் இப்படியே யுகமாய்க் கழிந்தன. ஒரு நாள் கணவன் வீட்டுக்கு வர நேரமாகி விட்டது. பார்த்துப் பார்த்து இருந்தவள் கண்கள் கனக்க அப்படியே நித்திரையாகிப் போனவள் ஏதோ சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழும்ப கணவன் வந்து விட்டிருந்தான்இரவு பத்தரையைத் தாண்டியிருந்தது. "என்ன நல்ல கனவைக் குழப்பீட்டன் போல இருக்கு"...... என்றான். "இல்லை உங்களைப் பாத்துக் கொண்டிருந்தனான் அப்பிடியே நித்திரையாப் போனன்" என்றாள் அப்பாவியாக. "ஓமோம்! நித்திரை வரும் நல்லா. அங்கை இரவு பகலா நீங்கள் போட்ட ஆட்டத்துக்குப் பிறகு இப்ப நல்ல நித்திரை வரும் தானே" என்று நக்கலாகச் சொன்னவன், "எல்லாரும் நித்திரை கொள்ள எனக்கெல்லோ இப்ப நித்திரை துலைஞ்சிட்டுது" என்று சொல்லியபடியே குளிக்கப் போய் விட்டான். வேணி பேசாமல் சாப்பாட்டை எடுத்துச் சூடு பண்ணத் தொடங்கினாள். தனது வாழ்வின் இரண்டாவது அத்தியாயம் தொடங்கப் போவது தெரிந்தது.

தாய்க்கு தொலைபேசி எடுப்பதில்லை என்ற முடிவோடு இருந்தவள் மனச் சஞ்சலத்தில் தொலைபேசி எடுத்தாள். எடுத்தது அம்மாதான் "பிள்ளையே! நான் எடுக்க வேணும் எண்டு இருக்க நீ எடுக்கிறாய்; எப்பிடி இருக்கிறாய் பிள்ளை? அரும் பொட்டிலை தப்பினாய், இப்ப பாத்தியே எப்பிடி ஒரு அருமையான வாழ்க்கை உனக்குக் கிடைச்சிருக்கு? நான் கும்பிட்ட தெய்வங்கள் என்னைக் கை விடேல்லை. கொஞ்சம் பொறு பிள்ளை அப்பாட்டைக் குடுக்கிறன், கதை. நான் பிறகு உனக்கு எடுத்துக் கதைக்கிறன். இஞ்ச எங்களுக்குத் தெரிஞ்ச ஒரு குடும்பம் ஒரு சிக்கலில இருக்குது, ஒருக்கா அதைப் பாக்க வேணும் வந்திருக்கினம் வீட்டு தேடி பாவங்கள் ......மகளைப் பேச விடாமல் தானே கதைத்துக் கொண்டிருந்தவள் கணவனைக் கூப்பிட்டு "அப்பா இந்தாங்கோப்பா  பிள்ளை லைனில நிக்கிறாள் கதையுங்கோ..."என்று தொலைபேசியை கொடுத்தபோது வேணி தொடர்பைத் துண்டித்தாள்.


 

கருத்துகள் இல்லை: