வெள்ளி, 21 செப்டம்பர், 2012

தளம்பல்.

கல்யாணிக்குக் கலியாணம் ஆனதே ஒரு தனிக் கதை. சொந்த மாமி மகன் அத்தான் அனந்தன் இவளைக் கண்டால் சுத்திச் சுத்தி வருவான். சின்ன வயதிலே காற்றென்ன மழையென்ன குளிரென்ன வெயிலென்ன இவளுக்கு என்ன தேவை என்றாலும் தேடிக் கொண்டு வந்து முன்னால் நிற்பான். அவளும் என்னவென்றாலும் அத்தான் ஆனந்தனிடம்தான் கேட்பாள் கிடைக்குமென்று தெரிந்து. அவளுக்காகப் பள்ளிக்கூடத்தில் சண்டை போட்டு, அடி வாங்கி, சின்ன வயதுச் சிநேகிதர்களைப் பிரிந்து என்று இப்படிப் பல; அதற்குள் அம்மாவிடம் "கண்டறியாத ஒரு மச்சாள்" என்ற திட்டும் அடக்கம். கொஞ்சம் வளர கல்யாணி வீட்டுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக அடைபட்டுக் கொண்டாள். பொம்பிளைப் பிள்ளை அடக்கம் வேணுமாம்.ஆனந்தனுக்கு சரியான ஆத்திரம்; வீட்டுக்குப் போனால் மாமியும் "தம்பி பெம்பிளைப் பிள்ளை இருக்கிற வீட்டுக்கு அடிக்கடி வராத, அயலட்டையிலை வேற மாதிரிக் கதைக்கப் பாப்பினம்" என்றா. அவனுக்கு அதைக் கேக்க இன்னும் ஆத்திரம். அம்மாவிடம் முறையிட்டான். அம்மா " கல்யாணி உனக்குத் தான், ஆனால் நீ அவளைத் தேடாமல் இப்ப படிக்கிற வழியைப் பார்" என்றா. அவனுக்கு வெட்கமாகப் போய் விட்டது.
உயர்தரம் படிக்கும் போது அம்மாவிடம் காசு வாங்கி நல்லூர் திருவிழாவில் ஐஸ்  கிறீமும் காப்புகளும்  வாங்கி தோழி மூலம் கொடுத்தனுப்ப காப்புகளைப் போட்டுக் கொண்டு  ஐஸ்கிறீமை வழிய வழிய சாப்பிட்ட படியே கைகளை லேசாக குலுக்கிக் காட்டியபடியே அவனைத் தள்ளுமாற்போல் கிட்ட வந்து போனாள். அவனுக்கு அன்றிரவு நித்திரை பறந்து போனது; வீடு முழுக்க காப்புச் சத்தம் கேட்டது.
காலம் பறந்தோட கல்யாணி கண்ணும் கருத்துமாய்ப்  படித்து பல்கலைக் கழகம் ஏற, கனவு கண்டு கொண்டிருந்த ஆனந்தன் கோட்டை விட்டு விட்டு வீட்டில் வாங்கிக் கட்டிக் கொண்டான். கல்யாணி சொன்னாள் "பரவாயில்லை அடுத்த முறை ட்ரை பண்ணுங்கோ" என்று. அவனுக்கு ரோசம் வந்தது. ஆனாலும் கல்யாணி சொன்னதற்காக பரீட்சை எடுத்தான்.ஆனால் அடுத்த முறையும் அதே நிலைதான். அம்மாவும் அப்பாவும் அவனுக்குப் புத்திமதி சொல்லி லண்டனில் உள்ள சித்தப்பாவிடம் அவனை அனுப்பி விட்டார்கள். அவனுக்கும் முடியாது என்று சொல்ல முடியாத நிலை; அவள் கம்பசுக்குப் போக அவன் வீட்டிலே இருக்க அவமானமாக இருந்தது. லண்டனுக்கு வந்து சேர்ந்து விட்டான்.
கல்யாணியிடமிருந்து ஆரம்பத்தில் கடிதங்கள் வந்தன. பிறகு குறையத் தொடங்கியது. அம்மாவிடம் கேட்டு எழுதினான். அம்மா நாசூக்காக சில விடையங்களைத் தவிர்த்தது போலத் தோன்றியது. இவன் வற்புறுத்திக் கேட்டதில் கல்யாணி அவளோடு படிக்கும் ஒரு பெடியனோடு திரியிறாள், அவனைத்தான் கட்டுவாளாம்  எண்டு கதைக்கினம் என்றும் சொல்லி முடித்தாள். அவன் இதை உறுதிப் படுத்த கல்யாணிக்கு எழுதிய கடிதங்கள் ஒன்றுக்கும் பதில் வரவில்லை. லண்டன் வீதிகளில் விசரன்  மாதிரித் திரிந்தான். ஆனால் ஊரிலோ நிலைமை வேறு மாதிரி இருந்தது. மாமா (கல்யாணியின் அப்பா) நாலு சாத்துச் சாத்தி வீட்டுக்குள்ள அவளை இருத்தினார். "அவன் அங்கை நீ வருவாய், அல்லது இஞ்சை எண்டாலும் வந்து கட்டுவான் எண்டு நாங்கள் நினைச்சுக் கொண்டிருக்கிறம், நீ சேட்டை விட்டுக் கொண்டிருக்கிறாய்; அவன் வாங்கித் தந்ததை எல்லாம் வாங்கி அனுபவிச்சுப் போட்டு இப்ப வேற மாப்பிள்ளை பாக்கிறியோ" என்று திட்டித் தள்ளி விட்டு, தாமதிக்காமல் காசைக் கட்டி, விமானம் ஏத்தி விட்டார் செல்ல மகளை.
சித்தப்பா தலைமையில் கல்யாணிக்கும் ஆனந்தனுக்கும் திருமணம் நடந்தேறியது. அனந்தன் மிகக் கவனமாக அவளுடன் பேசிக் கொண்டான். கடந்த காலங்களை மீட்பதில் அவனுக்கு உடன்பாடு இல்லை. காலம் கரைந்தோட இரண்டு குழந்தைகளும் பிறந்து, பத்தும், எட்டும்  வயதாகியிருந்தனர். ஆனந்தன் அவளை பூ மாதிரிப் பார்த்தான் என்று தான் சொல்ல வேண்டும். வீட்டிலேயே இருந்து குழந்தைகளைப் பார்த்துக் கொண்டாள்.
வேக வேகமான தொழில் நுட்ப வளர்ச்சி அவளுக்கு பயனாய் இருந்தது. அவளுக்கு வீட்டுக்குளே இருந்த  பொழுது போக்குகள் தொலைக் காட்சியும், இணையத் தளமும்தான். அம்மாவோடு அடிக்கடி  ஸ்கைப்பில் பேசிக் கொள்ளுவாள். ஆரம்பத்தில் இணையத்தை திரைப் படங்களைப் பார்க்கவும், பாடல்களைக் கேட்கவும், செய்திகளை வாசிக்கவும் என்று பயன் படுத்தியவள், மிக விரைவில் சமூகத் தளமான முக பக்கத்துக்குள்  புகுந்து கொண்டாள். ஒருவர் மூலம் ஒருவராக நண்பர்கள் சேரத் தொடங்கினர். சிறு வயதுத் தோழிகள் பலர் தற்செயலாகக் கிடைத்தனர். பல்கலைக் கழக நண்பிகள் சிலரும் கிடைத்தனர்.  அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. காலையில் எழுந்து பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பியவுடன் கணினியைத் திறந்தால் இரவு வரை தொடரும். பின்னூட்டங்களை வாசிப்பதும்  இடுவதும், தெரிந்தவர்களுடன் அரட்டை அடிப்பதுமாக நாளின் பெரும் பகுதியை முகப் பக்கம் விழுங்கத் தொடங்கியது. ஒரு நாள் அதனைத் திறந்து பார்க்காவிட்டாலும் எத்தனையோ இழந்த மாதிரித் தெரிந்தது. ஏறக் குறைய ஒரு வித போதையாய்த் தெரிந்தது.
ஒருநாள் காலையில் முகப் பக்கத்தைத் திறந்தவுடன் இருவர் நண்பர்களாகக் கேட்டிருந்தனர். கல்யாணி நண்பர்களாக இணைக்க முன்னர் அவர்களைப் பற்றித் தெரிந்து கொண்டே இணைப்பது வழக்கம். அந்த வழக்கத்தில் இணைக்கக் கேட்டிருந்த ஒருவருடைய விபரத்தைப் பார்த்தபோது நெஞ்சு படபடக்கத் தொடங்கியது. உடனேயே எல்லாவற்றையும் துண்டித்து விட்டு வந்து வீட்டு வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினாள். ஆனால் வேலையில் கவனம் சென்றால் தானே. கணினி வா வா என்று இழுக்க திரும்ப முகப் புத்தகத்தைத் திறந்து பார்த்தாள். இந்தத் தடவை ஒரு செய்தி வந்திருந்தது அவளுடன் பேச மிக ஆவலாய் இருப்பதாக அவளுடைய பழைய காதலன். அவள் அந்த அழைப்பை மறுத்து விட்டு வேறு விடையங்களைப் பார்க்கத் தொடங்கினாள். ஆனால் அவனோ விடாமல் செய்திகளை அனுப்பிக் கொண்டிருந்தான்.நாட்கள் கடந்து கொண்டு போக, அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதுபோல அவன் பொறுக்கியெடுத்து வார்த்தைகளைத் தொடுத்து அனுப்ப என்னதான் சொல்லுகிறான் எண்டு கேப்பம்   என்று எண்ணிக் கொண்டு அவனை இணைத்துக் கொண்டாள். அவன் மரியாதையாகவே பேசினான்; அவளது வாழ்க்கை எப்பிடிப் போகிறது என்று கேட்டான். இவள் தனது அழகான குடும்பத்தைப் பற்றிச் சொல்ல சில நிமிடம் மவுனமாக இருந்து விட்டு, தனது நொந்து போன வாழ்க்கைச் சொல்லி அழத் தொடங்கினான். பிடிக்காத மனைவியைப் பற்றியும், கஷ்டமான வெளிநாட்டு வாழ்க்கையைப் பற்றியும் புலம்பினான்; வீட்டிலே நிம்மதி இல்லை என்றான். கல்யாணிக்குக் கேட்கக் கஷ்டமாக இருந்தது.என்ன சொல்லுவதென்று தெரியவில்லை. என்ன செய்யிறது ஏற்றுக் கொண்ட வாழ்க்கையை சந்தோஷமாக வாழ முயற்சி செய்ய வேணும் என்று சொல்லி விட்டு தொடர்பைத் துண்டித்து விட்டாள். அவன் எனக்கு ஏன் இதெல்லாவற்றையும்  சொல்லுகிறான் என்று அவளுக்கு விளங்கவில்லை. இவனுடன் கவனமாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.  நினைத்தது  மட்டும்தான்;அடுத்த நாளும் உரையாடல் தொடர்ந்தது. அதற்கடுத்தநாளும் தொடர்ந்தது. பேச்சு கடந்த காலத்தை நோக்கித் திரும்பி  மீட்கத் தொடங்கியது. கல்யாணி அவளை அறியாமலேயே அவன் விரித்த வலைக்குள் வீழத் தொடங்கியிருந்தாள்.
இப்போதெல்லாம் கணினி திறப்பதே அவனுடன் பேசுவதற்கு மட்டும்தான் என்றாகியிருந்தது. மற்ற நண்பர்கள் இணைக்கும் விடையங்களும் செய்திகளும் வீணாகத் தெரிந்தன. மணித்தியாலக் கணக்காகப் பேசிக் கொண்டேயிருந்தார்கள் கருத்தில்லாமல். நாங்கள் சேர்ந்து இருந்திருந்தால் எப்படி எல்லாம் வாழ்ந்திருந்திருப்போம் என்றான். பாவம் அவனை தான் கஷ்டப்பட வைத்து விட்டேன் என்று எண்ணிக் கொண்டாள் அந்தப் பேதைப் பெண்.
அன்று காலை பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி விட்டு சில உடுப்புக்களை எடுத்து பையில் வைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டாள் கல்யாணி.

கணவன் அனந்தன் அதிகாலையிலேயே வேலைக்குப் புறப்பட்டுப் போய்  விட்டான் அன்று மாலையில் வரவிருக்கும் அதிர்ச்சி தெரியாமலேயே.

கருத்துகள் இல்லை: