வெள்ளி, 28 செப்டம்பர், 2012

தங்கமக்கா!!

மணி அண்ணன் பிரான்சுக்கு வந்ததிலிருந்து அவரது பொழுதுபோக்கே வேலை செய்வதுதான். ஓடி ஓடி காலை, மதியம், இரவு என்று கிடைத்த நேரம் எல்லாம் பகுதி  பகுதியாய் வேலை செய்துகொண்டேயிருப்பார். இடையில் வக்கன்ஸ் எடுப்பார்; ஆனால் அந்த நேரத்திலேயும் வேரை யாராவது வக்கன்ஸ் எடுத்த ஆட்களின் வேலையை செய்து கொடுப்பார். இப்பிடியே ஓடிக் கொண்டேயிருப்பார். ஆனால்  ஞாயிற்றுக் கிழமை மட்டும் வேலை செய்ய மாட்டார். அந்த நாள் அவருக்கு நல்ல பங்கு இறைச்சி வாங்கி மனைவி தங்கம்  சமைத்துக் கொடுக்க ஒரு பிடி பிடித்து விட்டு ஏப்பம் விட்டுப் பிறகு தண்ணிப் பாட்டியோட முடிக்க வேண்டும். இது தவிர  ஒரு நாளைக்கு ஒரு பக்கெற் ஊதுபத்தி. அவருக்கு சாப்பாட்டில் ஒரு குறையும் இருக்கக் கூடாது; மாமிச வகையில் என்னவெல்லாம் எப்படியெல்லாம் வகை வகையாகச் செய்து சாப்பிட  முடியுமோ அவ்வளவும் தங்கம் பார்த்துப் பார்த்துச் செய்து கொடுப்பாள். கஷ்டப்பட்டு உழைக்கிறவர் நல்லாச் சாப்பிட வேண்டும் என்று அடிக்கடி சொல்லிக் கொள்ளுவாள்.
தங்கம்  எப்போதுமே வேலைக்குப் போனதில்லை; ஏன் வெளி வேலைகள் எதுவுமே செய்யத் தெரியாது என்பதுதான் உண்மை. இரண்டு பிள்ளைகள் ; மூத்தவனுக்குப் பன்னிரண்டு வயது, மகளுக்கு எட்டு வயது. மணி அண்ணன் வேலை முடிந்து வரும் போது வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருவார். வீட்டிலே தங்கத்துக்கு சமைப்பதும் பிள்ளைகளைக் கவனிப்பதும் கூட்டித் துடைப்பதும் தான் பொழுதுபோக்கு. யாராவது தெரிந்தவர்கள் ஏன் மனிசியை வேலைக்கு அனுப்பலாம்தானே என்று கேட்டால், "மனிசிமாரை வேலைக்கு அனுப்புறவங்கள் எல்லாம் ஆம்பிளையளே.... என்று அவரது விளக்கம் நீடிக்கும். கேட்பவர்களுக்கு ஏன்தான் வாயைத் திறந்தோம் என்று இருக்கும். இவ்வளவுதான் மணி அண்ணனின் வாழ்க்கை.
 தபால் நிலையம் தெரியாது, வங்கி தெரியாது, வங்கி அட்டை பாவிக்கத் தெரியாது, தனியே கடைக்குப் போகத் தெரியாது, வாகனம் ஓட்டத் தெரியாது,பிள்ளைகளின் ஆசிரியர்களைத் தெரியாது.  இப்படி நிறையத் தெரியாதவற்றோடு தங்கம்  ஒரு குழந்தையின் வாழ்க்கையை  வாழ்ந்து கொண்டிருந்தாள். அதுவே பழக்கப் பட்டு இலகுவாயும் போனது அவளுக்கு.
காலம் யாருக்காகவும் காத்து நிற்பதில்லைதானே. ஓடிய வேகத்தில் மணி அண்ணனுக்கு இப்போதெல்லாம் மூச்சிரைக்கத் தொடங்கியிருந்தது. "டொக்டரிட்டைப் போயிட்டு வாங்கோவன்" என்றாள் தங்கம் . "இல்லை இது இந்தக் கிளைமேற்றுக்கு; ஒரு நல்ல சூப்  போட்டுக் குடிச்சால் சரியாயிடும்; நாளைக்கு நான் வேலையால வரேக்க எல்லாம் வாங்கிக் கொண்டு வாறன் சூப்புக்கு" என்றார் மணி அண்ணன். ஆனால் அவருடைய அந்த சூப்பு  வைத்தியம் சரிப்படாமல் போகவே அவருக்கு லேசாக யோசனை தட்டியது. அத்தோடு அன்றிரவு லேசாக நெஞ்ச நோவும் தொடங்க "நாளைக்கு ஒருக்கா டொக்டரிட்டைப் போகத்தான் வேணும்" என்று சொல்லி படுத்தவர் அடுத்தநாள் காலையில் எழுந்திருக்கவே இல்லை.
இருக்கும் வரைக்கும் எதையுமே  மனைவியோடு பகிர்ந்தும் கொள்ளாமல், செய்யவும் விடாமல் தனியாக தானே எல்லாவற்றையும் செய்து முடித்துக் கண்களை மூடிய போது தங்கத்துக்கு கண்களைக் கட்டிக் காட்டில் விட்டால் போல் இருந்தது. கணவனை இழந்ததை  நினைத்து அவள் அழுததை விட, தான் இனி என்ன செய்யப் போகிறேன் என்பதை நினைத்தே கதறி அழுதாள் என்பதுவே உண்மை. சுற்றங்கள் எத்தனை நாட்களுக்கு சுற்றி நிற்பார் இங்கே? அவரவர்களுக்கு அவரவர் வேலை. உதவி செய்ய முடிந்தவற்றுக்கு உதவி செய்யலாம். மிகுதியை அவளே தானே செய்ய வேண்டும். உதவி செய்ய வந்தவர்கள் கூட மணி அண்ணனைத் திட்டிக் கொண்டே செய்து கொடுத்தார்கள். அது அவளுக்கு இன்னும் மன வேதனையைக் கொடுத்தது.
கணவனின் இழப்பிலிருந்து மீழ முடியாமலேயே இருந்த அந்த நாட்களில் ஒரு நாள் ஒரு கடிதம் வந்திருந்தது. அதை எடுத்து மகனிடம் கொடுத்து வாசித்து விளங்கப் படுத்தச் சொல்லிக் கேட்டாள். நாங்கள் வீட்டு வரி கட்ட வேண்டும் எண்டு எழுதியிருக்கு என்று சொன்னான். விலாசத்தை எழுதி எடுத்துக் கொண்டு அடுத்த நாள் காலையில் தனியே வெளியே சென்று பேருந்து நிலையத்தை அடைவதற்குள் அவளுக்கு தலை சுற்றுமாப்  போல் இருந்தது. கணவன் இருந்த போது வீட்டு வாசலில் காருக்குள் ஏறினால் போக வேண்டிய இடத்தில் போய் இறங்குவதும் திரும்ப ஏறி வீட்டு  வாசலில் வந்து இறங்குவதுமாய் இருந்தது அவளது வாழ்க்கை.  அவளது வாழ்க்கையில்  எப்போதுமே பேருந்திலோ  தொடருந்திலோ  ஏறியதில்லை. இந்த நிலையில் பேருந்து தரிப்பு இடத்துக்கு வந்து நின்றவளுக்கு அடுத்த பிரச்சனை வந்தது. மற்ற ஆக்களை உதவிக்கு கூப்பிடக் கூடாது என்று நினைத்து வந்தவளுக்கு எந்த இலக்க பேருந்து எடுப்பது என்றே தெரியவில்லை. பேருந்துகள் ஒன்றுக்குப் பின்னால் அவளைத் தாண்டிப் ஒன்று  போய்க் கொண்டிருந்தன. தன்னிரக்கம் பெருக அழுகை முட்டிக் கொண்டு வந்தது. அவளைக் கடந்து சென்றவர்கள் அவளை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டுச் சென்றார்கள். யாரிடமாவது கேட்கலாம் என்றால் என்ன மொழியில் கேட்பது? சுற்றிப் பார்த்தாள் எல்லோருமே அவசர அவசரமாக தங்கள் தங்கள் வேலையாகப் போய்க் கொண்டிருந்தார்கள். தான் மட்டுமே வீட்டுக்குள்ளே முடமாய் இருந்தது முதல் தடவையாக நெருப்பாய் சுட்டது. அழுகை ஆத்திரமாகி தன்னையே திட்டிக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் கடைசியாக, கணவரின் அக்காவின் மகனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவன் கத்தினான் "எந்த பஸ் எடுக்கிறதெண்டு  தெரியாமல் ஏன் வெளியில போனனீங்கள்? இப்ப நீங்கள் வீட்டை போங்கோ நான் அடுத்த கிழமை வந்து கூட்டிக் கொண்டு போறன்".
இயலாமையால் வார்த்தைகள் வெளிவர மறுக்க தொடர்பைத் துண்டித்து விட்டு திரும்பி வீட்டை  நோக்கி நடக்கத் தொடங்கியவளுக்கு தலைலேசாக சுற்றுமாப்போல் தோன்ற அருகிலிருந்த கம்பத்தை பற்றிக் கொள்ள, கைகள் வழுக்கிக் கொண்டு தான் கீழே சரிவதை உணரும்போது, யாரோ சத்தமிட்டுக் கொண்டு அவளருகில் ஓடி வரும் ஒலி மிகத் தொலைவில் கேட்டது.

கருத்துகள் இல்லை: