ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

இரகசியக் கண்ணீர்.

இரகசியக் கண்ணீர்.

போரொன்று வந்து முன்னால் 
வேரறுப்பேனென்று சொல்ல
போகவழி ஏதுமின்றி
காற்றிலாடும் சருகுபோல
கால் போன வழியெங்கும் 
அலைந்ததுவும் அக்காலமதே.

அறிவொன்று சொல்லி நிற்க 
மனமொன்றை விரும்பிச் செல்ல
ஒத்துவரா மாடுகளை ஒருவண்டியிற்
பூட்டியதில் சீரென்று சொல்லாத
நெடியதொரு பயணத்தை 
நெடுமூச்சொடு தொடங்கி வைத்தோம்.

உயிரொன்று பெரிதன்றோ! அதன்
வாழ்வும் அதின் மேலன்றோ!
கண்டங்கள் தாண்டியவிடத்தில்
உடலெங்கோ தங்கி நிற்க 
மனமெங்கோ அலைக்கழிய
இரட்டை வாழ்க்கை மட்டும்
இருளாய் மூடிப்போச்சே.

“பத்திரமாய் போய்வா” என்றன்றைய
அவசரத்தில் அனுப்பிவைத்த அம்மாவின் 
பயங்குவிந்த தொண்டை இன்றோ
பேச சக்தியற்று வரண்டு கிடக்கிறது.
“கதையுங்கோ அம்மா” என்ற கேள்விக்கு
பதில் சொல்ல இயலாமையில்
முதுமையின் பயம் அங்கே விக்கித்து நிற்கிறது.

சுகமாய் இருப்பேனோ இல்லை சோர்ந்து மடிவேனோ?
படுக்கையில் வீழ்வேனோ இல்லை பார்ப்பாரற்றுக் கிடப்பேனோ?
சொட்டுத் தண்ணிதர யார்தான் வருவாரோ?
சொர்க்கமென்று பெற்ற மக்கள் வந்து சேருவரோ?
சாகும் வேளைதனில் யார்மடி கிட்டுமோ?
யார் முகம் பார்த்து கண்ணை மூடுவேனோ?

ஆயிரம் குமுறல்கள் உள்ளேயிருப்பினும்
கண்டம் விட்டு வந்தவருடன் காட்ட முடியுமோ?
சொற்களெல்லாம் அமுங்கிவிட
இரகசியமாய்….
இரண்டு சொட்டுத்துளிகள்
முதுமைக் கண்களின் கடையோரத்தில்…

ஒரு வருடம் ஓடியுழைத்து
உறவு காண வேண்டுமென்று
ஒருமாத விடுமுறையில் ஓடிவந்த பிள்ளைகளும்
மூட்டையைக் கட்டுகின்றனர் மூக்கைச் சிந்தியபடி.

மீண்டும்..மீண்டும்..
உடலெங்கோ தங்க……
மனமெங்கோ அலைய….

இரகசியமாய்
கண்களில் கண்ணீர்த் துளிகள்.

வி. அல்விற் 

13/08/2018

கருத்துகள் இல்லை: