வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

Pão de santo Antonio!

Pão de santo Antonio!

அண்மையில் போர்த்துக்கலுக்கு விடுமுறைப் பயணத்தை மேற்கொள்ள முடிந்தது. போர்த்துக்கல் என்றாலே எல்லோருக்கும் ஞாபகத்துக்கு வருவது Fatima அன்னையின் ஆலயமே.
நாங்கள் லிஸ்பொனுக்கே நமது பயணத்தை மேற்கொண்டிருந்தோம். பார்க்க வேண்டியிருந்த பல இடங்களையும் முன்னரே திட்டமிட்டிருந்ததால் போய்ச்சேர்ந்தவுடன் அதற்கேற்றபடி உலாவத் தொடங்கியிருந்தோம். பிரான்சோடு ஒப்பிடும்போது போக்குவரத்துச் செலவுகள் கொஞ்சம் குறைவாகவே இருந்தன. தூரத்துக்குச் செல்ல வேண்டியிருந்தால் மட்டுமே பயணச்சீட்டை எடுத்துக்கொண்டு இறங்க வேண்டிய இடத்தில் இறங்கி பின்னர் நாள் முழுக்க நடந்து கொண்டேயிருந்தோம். நடந்து போகும்போது நாம் அறியாத இடங்களையும் அறிய முடிந்திருந்தது.
எமது பயணத்தில் ஒருநாளை நமது புனித அந்தோனியாருக்காகவும் ஒதுக்கியிருந்தோம். அப்பயணம் பற்றிய விடயங்களை என்னுடன் பணிபுரியும் போர்த்துக்கலைச் சேர்ந்த நண்பர்களிடம் கேட்டறிந்துகொண்டு சென்றது நல்ல பயனையும் அலைச்சலின்மையையும் கொடுத்தது.
புனித அந்தோனியாரின் வரலாறு அனேகர் அறிந்ததே. அவரது இயற்பெயர் Fernando Martins de Bulhões. (Bulhões என்பது குடும்பப்பெயர்). 1195 இல் போர்த்துக்கலிலுள்ள லிஸ்பொன் நகரத்தில் வசதியான ஒரு குடும்பத்திலேயே பிறந்த இவர் இளமையிலேயே நல்ல புத்திசாலியாகவும், இரக்க மனம் கொண்டவராகவும் இருந்தவராக அறியப்படுகிறது. வசதியான குடும்பத்திலே பிறந்தவராகையால் இளமைக்கால கல்வியை அவரது தேவைக்கேற்ற இடங்களில் கற்றுக்கொள்ளத் தடையிருக்கவில்லை. அவரது காலத்திலே நடைபெற்ற மதயுத்தங்களும் மரணங்களும் அனேகரைப்போல இவரையும் பாதித்தது.
அதன் தொடர்ச்சியாக தனது குருத்துவக் கல்வியை முடித்துக்கொண்டு குருவாகியதும் Santa 
Cruz Monastery யிலே பொறுப்பேற்றுக் கொண்டார். இதனிடையில் Fransican சபையிலும் 
தன்னை இணைத்துக்கொண்டார்.      

நல்ல பேச்சு வன்மை கொண்ட புனித. அந்தோனியார் பலராலும் அறியப்பட இத்தாலி, பிரான்ஸ் 
போன்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்டார். 1230 இல் பாப்பாண்டவர்  ஒன்பதாவது கிரகரிக்கு ஆலோசகராக ரோமுக்கு அனுப்பப்பட்டார்.
ஓயாத அலைச்சல்களினால் நோய்வாய்ப்பட்டவர் இத்தாலியிலே Padoue க்குத் திரும்பும் வழியிலே தனது இறுதிக்காலத்தை மரக்கிளைகளால் கட்டப்பட்ட ஒரு குடிலுக்குள் செபிப்பதிலும்படிப்பதிலுமாக காலத்தைச் செலவிட்டார்.
1231 இல் Poor Clare monastery at Arcella ( இத்தாலியிலுள்ள Padoue இன் ஒரு பகுதி)  எனுமிடத்தில் மரணமடைந்தார்.
புனித அந்தோனியார் பல அற்புதங்களைப் புரிந்தமையாலும் அவர் இறப்பதற்கு சில காலத்துக்கு முன்னர் குழந்தை யேசுவைக் கையிலேந்திய பெரும் வரத்தைப் பெற்றமையாலும் அவரது புகழ் மேலோங்கியிருந்தது.
“Pao de santo Antonio” அதாவது “அந்தோனியாரின் பாண், அல்லது அப்பம்” என்பதற்கும் ஒரு வரலாறுண்டு.
சின்னத் தோமசின் கதை.
ஒரு நாள் ஒரு தாய், தோமஸ் என்ற பெயருடைய தனது இருபது மாதக் குழந்தையை வீட்டிலே விட்டுவிட்டு வெளியே சென்று திரும்பியபோது , அக்குழந்தை வாளி நிரம்பிய தண்ணீருக்குள் மூழ்கி இறந்து கிடந்தது. கதறியழுத தாய் குழந்தை தோமசின் உயிரை மீட்டுத்தருமாறும், குழந்தையின் எடையையொத்த பாணை பசியால் வாடுவோருக்கு தான் அளிப்பதாகவும் உரத்துச்சொல்லி புனிதரை நோக்கி இரந்து மன்றாட குழந்தை உயிர் பெற்றது. இவ்வரலாறே அந்தோனியாரின்  பெயரினால் இன்றுவரை இயங்கும் உதவி அமைப்புக்களின் தோற்றத்துக்கு வழி சமைத்திருக்கிறது.
இன்றைக்கும் இந்தப் ‘பாண்’ ஆசீர்வதிக்கப்பட்டு போர்த்துக்கலிலுள்ள அந்தோனியார் பிறந்து வளர்ந்த இடத்திலுள்ள ஆலயத்தில் விற்கப்படுகிறது. ஒரு பாண் 0,30€ தேதான். ஆனால் அது பல குழந்தைகளின் பசியாற்ற உதவுகின்றது. (கீழே படங்களை இணைக்கிறேன்) அந்தோனியாரின் பெயரால் அப்பம் கொடுக்கும் நமது வழக்கமும் இதிலிருந்தே தொடங்கியிருக்க வேண்டும்.
லிஸ்பொனில் பிறந்து இத்தாலியிலுள்ள பதுவா என்னும் நகரத்தில் 13 யூன் 1231 இல்மரணமடைந்த புனிதரின் 35 ஆண்டுகளை மட்டுமே கொண்ட வாழ்க்கை வரலாறு இவ்வாறு 
சிறப்பாக அமைந்திருக்கிறது.    
நமக்கும் புனிதர் பிறந்து வளர்ந்த இடங்களைப் பார்வையிட்டு வந்ததில் மிகுந்த மகிழ்ச்சி.


“பாதுவா நகரிலே உதித்த முனிவரே!
பாமாலை சூடினோம் பணிவாய் ஏற்பீரே!


என்ற பாடலை யார் எழுதினார்கள் என்று தெரியவில்லை. பாதுவா என்ற நகரில் புனிதர் உதிக்கவில்லை; இறந்திருக்கிறார்.

வி. அல்விற்.
25.08.2017.


ஆலயத்தின்  வெளித்தோற்றம்

 






 
 ஆலயத்தின் உட்பகுதி.













 
புனிதர் பிறந்த இடம்.  ஆலயத்தின் உட்பகுதியின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ளது.  











"அந்தோனியாரின் பாண்"  pão de santa antonio















































































கருத்துகள் இல்லை: