புதன், 15 ஆகஸ்ட், 2012

wales இல் இந்துக் கோவில்.


ஊட்டி மலைப் பாதையினை ஞாபகமூட்டும் இங்கிலாந்திலுள்ள wales மலைப் பகுதியினை அடைந்த போது அதிகாலை நான்கு நாற்பத்தைந்து ஆகியிருந்தது. அடர்ந்த மரங்கள் சூழ்ந்திருக்கும் மிக அமைதியான பிரதேசம்.
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்தைந்திலே இலங்கையைச் சேர்ந்த ஸ்ரீ சுப்பிரமணியம் என்பவரால் இங்குள்ள கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதலாவதாக அமைந்தது முருகன் கோவில். உள்ளேயும் வெளியேயும் வண்ணப் புடவைகளால் அலங்கரிக்கப்பட்டு அழகாக ஆனால் ஆடம்பரமின்றிக் கோவில் காணப்படுகின்றது. உட்பகுதியில் திருமுருகனின் உருவச் சிலை நாகபடத்தின் பின்னால் வித்தியாசமான கட்டுமான கர்ப்பக்கிரகத்தில் உள்ளது. கோவிலின் உட்புறச் சுவர்களில் இந்து சமயக் கடவுள்களின் உருவங்களைத் தவிர தேவ மாதா, புனித அந்தோனியார், சாய்பாபா போன்ற பல்வேறு கடவுள்களின் உருவச் சிலைகளும் படங்களும் காணப் படுகின்றன.
முதலாவது பூசை காலை ஆறு மணியளவில் தொடங்குகிறது. மக்கள் நிலத்தில் அமர்ந்து பங்குபற்றும் விதத்தில் சில ஆசனங்களும் நிறைய சிறு அணைகளும் (cousins ) கோவிலின் ஒரு பகுதியில் குவிக்கப்பட்டிருக்கின்றன. நீண்ட மண்ணிற அங்கி அணிந்த பெரும்பன்மையினத்தவரான வெள்ளையர்களே பூசை செய்கிறார்கள். ஆண்களும் பெண்களும் இளையோரும் முதியோருமாய் அனைவரும் அத் தொண்டருள் அடக்கம்.  திருமுருகனை நோக்கி "ஓம் ஷண்முகாய  நமக "வில் தொடக்கி புத்த மதத்தினருக்கு "புத்தம் சரணம் கச்சாமி" என்றும், கிறிஸ்தவ மதத்தினருக்கு "our father in heaven " என்றும் மக்களால் ஏற்றுக் கொள்ளப் பட்ட கடவுள்களுக்கு அவரவர் வழியில் பிரார்த்தனைகளச்  செய்து முடிக்கிறார்கள். மதங்களை ஒருங்கிணைத்து சேருமிடத்தை நோக்க வைக்கும் வழிபாடாகப் பட்டது இது. இசைக் கருவிகளுடன் கூடிய பஜனைகள் நெகிழ வைக்கின்றன.
முதலாவது பூசை முடிய அங்கிருந்து ஒற்றையடிப் பாதையால் இன்னும் கொஞ்சம் மேலேறிப் போக அங்கே அமைந்துள்ள காளி கோவிலில் அடுத்த பூசை ஆரம்பமாகிறது.
பெரிய காளி சிலையுடன் கூடிய சிறிய கோவில் இரண்டாவதாகக் கட்டப்பட்டிருக்கிறது. பின்னர் இடப் பற்றாக்குறையால் இரண்டாவது பகுதி ஒன்று அதனுடன் இணைத்துக் கட்டப்பட்டு காளியை மக்கள் தரிசிக்கும் விதமாக ஒரு காட்சிப் பெட்டி வைக்கப் பட்டு பூசை ஒளி பரப்பப்படுகிறது. கோவிலை விட்டு வெளியேறி நீண்ட நேரத்தின் பின்னும் "ஓம் ஷக்தி ஓம் ஷக்தி ஓம் ஷக்தி ஓம் " என்ற இசைக் கருவிகளுடன் கூடிய பஜனை தாளம் போட வைக்கின்றன.
அந்தப் பூசை முடிந்ததும் மீண்டும் கீழிறங்க, வந்திருப்பவர்களுக்கு உணவு பரிமாறப் படுகின்றது.பின்னர் மூன்றாவது பூசை ஸ்ரீ ரங்கநாதருக்கு தொடங்குகின்றது. இது 1996 இல் அமைக்கப்பட்டுள்ளது. குளத்தின் நடுவிலே கிருஷ்ண பகவான் மிக அழகாக வீற்றிருக்கின்றார். கோவில் என்று சொல்ல முடியாமல் திறந்த வெளியிலே அமைக்கப்பட்டுள்ளது இதன் விசேடமாகின்றது. கண்ணாடிக் கதவுகளால் சுற்றி வர அடைக்கப்பட்டுள்ளது. பூசை செய்பவர் முழங்கால் அளவு காலணியுடன் குளத்தினுள் இறங்கிச் சென்று கிருஷ்ணனுக்குப் பூசை செய்கின்றார். அதன் அருகில் ஒரு சிறு காளி சிலையும் பக்கத்திலேயே மீன்கள் நிறைந்த குளமும் அழகூட்டுகின்றன.
இயற்கையையும் அமைதியையும் மிக விரும்பும் ஒருவராலேயே இப்படியான ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்திருக்க முடியும். மலைப் பிரதேசம்; செடிகளும், கொடிகளும், பூக்களும், குளமும் அதைச் சுற்றி  சிறிய அளவிலான வெவ்வேறு மூன்று  கோவில்கள் என்று மிக அழகான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  ஆரம்பத்திலே வெறும் வயல் நிலங்களாயிருந்த இடத்திலே ஆன்மீகத் தேடல் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியம் என்பவரால் 1975 இல் உருவாக்கப் பட்டு பின்னர் மெதுவாக மாற்றமடைந்துள்ளது. அங்குள்ள தொண்டர்கள் சிறு பயிர் வகைகளைச் செய்கிறார்கள். எமது கற்பனைகளுக்குட்படும் தியானசாலை அல்லது ஞானிகள்  வாழும் இடம் எப்படியோ அப்படி அமைந்துள்ளது அவ்விடம். கோவிலுக்குப்  போக விரும்புபவர்கள் மூன்று நாட்களுக்கு முன்னே மாமிசம் தவிர்க்கக்  கேட்டுக் கொள்ளப் படுகின்றது. வேறு கட்டணங்கள் ஏதும் இல்லை. தூர இருந்து செல்பவர்கள் முன்பதிவு செய்தால் அதற்கேற்ப வசதி செய்து கொடுக்கப் படுகின்றது.

இயற்கை, தனிமை,தியானம், அமைதி விரும்புபவர்கள் போய் அனுபவித்து வரக் கூடிய இடம் இது!

கருத்துகள் இல்லை: