செவ்வாய், 31 ஜூலை, 2012

நானும் சூரியனும்


எம்மை என்றும் சுற்றிச் சூழ்ந்து ஆக்கிரமித்து சிரிக்கவும் சிந்திக்கவும் கலங்கவும் ஏங்கவும் வைத்துக் கொண்டிருப்பவை எமது கடந்த கால நினைவுகளே! சிலர் பேசத் தொடங்கும்போதே "அது ஒரு காலமப்பா" என்று தொடங்கி விடுவார்கள். இது நிழலைத் தொடர்ந்து வரும்; நில் என்றாலும்  நிற்காது; போ என்றாலும் போகாது. மிகப் பெரிய பாரமாய் அழுத்திக் கொண்டிருந்து அடிக்கடி மேலெழுந்து வலி கொடுக்கும். பிறந்த மண்ணையும் அதன் வளமையையும் புலம் பெயர்ந்து வந்த பின்னரே பலரால் உணர முடிந்திருந்தது. எமது வீட்டையும் அது அமைந்திருந்த அழகையும் எமது வாழ்க்கை முறையையும் நான் அங்கேயே தினமும் இரசித்து மகிழ்ந்திருக்கிறேன்.
எமது வீடு திறந்த விறாந்தையையும் (hall ?)மூன்று படுக்கையறைகளையும் ஒரு சமையலறையையும் ஒரு சாப்பாட்டறையையும் கொண்டதுஒரு பெரிய முற்றத்துடன் கூடிய கிணறு காணியின் முன் வலது பக்கத்தில் வீட்டுக்கு நேரே நீண்டு லேசாக இடதுபுறம் திரும்பினால் கேட். கேட்டுக்கு முன்னால் வரிசையாக  தென்னை மரங்கள். கிணற்றைச் சுற்றி மறைப்புக்கு மதில் எழுப்பத் தேவையின்றி  முன்னால் குரோட்டன்ஸ் நெருக்கமாக வரிசைகட்டி நின்றன. அதனிடையே நின்ற சண்டியிலை மரத்திலிருந்து அடிக்கடி இலைகளை பிடுங்கி வறை செய்து சாப்பிடுவோம். முற்றம் நிறைய பூமரங்கள் எத்தனை விதமான செவ்வரத்தைகள்!! முல்லைப் பந்தல் மல்லிகைப் பந்தல்! பின்னேரங்களில் மல்லிகை மொட்டவிழும் நேரம் மாலை கவியத் தொடங்கியிருக்கும். இருள் இலேசாகக் குவிய நிலவு தன் ஒளியால்  அதை விரட்ட முயற்சிக்கும் அந்நேரம் உண்மையிலேயே மதி மயங்கும்.
நான் படிக்கும் காலத்தில் இரவு எவ்வளவு நேரமானாலும் கண் விழித்துப் படிப்பேன். ஆனால் காலையில்  வேளைக்கு எழும்புவது என்பது முடியாத காரியம். பின் தூங்கி பின் எழும் பெண் நான். (இன்று வரை) காலையில் என்னை வேளைக்கு எழுந்திருக்க வைக்க அம்மா எவ்வளவோ முயற்சி செய்து பார்த்து விட்டா. எதுவும் சரி வரவில்லை. காலையில் எல்லோருக்கும் தேநீர் கொடுக்கும் போது எனக்கும் வரும் எனக்குத் தேநீரை விட எனது நித்திரை முக்கியமாகப் படும். மிகக் கஷ்டப் பட்டு பல் விளக்கி தேநீரைக் கையில் எடுத்துக் கொண்டு சமையலறையை அண்டியுள்ள சாப்பாட்டறைப் பக்கமாக வந்து விடுவேன்.
கதவைத் திறந்தால் கண்ணில் படுவது எல்லாமே அற்புதம். காதில் கேட்பது எல்லாமே நாதம். நான் தேநீரைக் குடிக்கத் தொடங்கவும் என்னைத்தான்  பார்த்திருந்தது போல நேரே கீழ் வானிலிருந்து இளஞ்சூரியன் செஞ்சிவப்பு என்று சொல்லலாமா? ஒரேஞ்சு நிறம் எனலாமா? என்ன நிறமது!!!!வர்ணிக்க முடியாது.மெதுவாக தகதகத்து மேலேறிவரும். முதலில் கால்வாசி அரைவாசியாகி முக்காலாகி முழுதாகி மேலெழும் போது என் முகமும் சூடாகியிருப்பதை  உணர்வேன்இந்த அலைகளுக்கென்ன வந்தது? நான் கதிரவனைக்  கண்டு மயங்கி நிற்பது பிடிக்காதது போல என் காதில் அறையுமாப்போல் சோ வென்ற இரைச்சலுடன் கரையை அறைந்து செல்லும், ஒவ்வொரு அலையாக வந்து கரையைத்தொட்டு பின் ஒரு கன்னியின் வெட்கத்துடன் திரும்பி மிக லேசான சலசலப்புடன் நெளிந்து ஓடிப் போய்விடும். அதிலிருந்து கண்களைக் கொஞ்சம் சற்றுத் தூர ஓடவிட்டால் சிறு வள்ளங்களில்  மீன் பிடிக்கச் சென்றிருந்தவர்கள் புள்ளி புள்ளியாய்த் திரும்பிக் கொண்டிருக்க அந்த ஆண்களை வரவேற்க ஆயத்தமாகும் பெண்கள்; அந்தப் பொன் வினாடிகள் இருபது வருடங்களாக தொடர்ந்து எனக்குக் கிடைத்த பாக்கியம்; வரம், கொடுப்பனவு எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளுங்கள்.
எமது கேற்றோடு சேர்ந்து ஒரு ஒழுங்கை காங்கேசன்துறை-பருத்தித்துறை பிரதான வீதியிலிருந்து கடற்கரை வரை அழைத்துச் செல்லும். அதையண்டி எமது வீட்டுக்கு வலது புறம் ஒரு நல்ல தொடர்புடைய ஒரு முக்கியமானவரின் வீடு அமைந்திருந்தது. பிரதான வீதியைக் கடந்தால் எமது ஆலயம் பெரிய "வெட்டை" என்று அழைக்கப்படும் வெளியுடன் அமைந்திருக்கும். மாலையில் காற்பந்து, கைப் பந்து விளையாட எமது அன்றைய இளைஞர்களுக்கு பெரிய பொதுவிடமாக அமைந்திருந்தது. "வெட்டை"யின் வலப்புறத்தில் ஒரு ஆரம்பப் பாடசாலையும் சற்று முன்தள்ளி ஒரு வாசிகசாலை திரு. அண்ணாத்துரை, ஜான் கென்னெடி, எமது ஊர் திரு. ரோமன் மாஸ்டர் அவர்களின் படங்களுடன் உள்ளே தினசரிப் பத்திரிகைகளான ஈழநாடு, வீரகேசரி, தினகரன், மித்திரன் மற்றும் ஒரு சில ஆங்கிலப் பத்திரிகைகளும் கல்கி, கல்கண்டு போன்ற சில சஞ்சிகைகளும் ஆண்களின் அறிவை வளர்க்க உதவின (பெண்கள் போனால் ஒரு மாதிரிப் பார்ப்பார்கள்; ஆனாலும் நான் நேரம் கிடைத்தபோது பயன்படுத்தியிருக்கிறேன்) என்று சொல்லலாம்ஆண்கள் வாசிகசாலையின் உள்ளே இருந்து வாசித்ததை  விட அவர்கள் வெளியே இருந்து விமர்சனங்களில் ஈடுபட்டதையே அதிகம் பார்த்திருக்கின்றோம்.
ஆனாலும் ஊர் சனசமூக நிலையத்தினூடாக கொழும்பிலிருந்து வரும் கப்பலிலிருந்து பொருட்களை இறக்குவதும், பின்னர் சீமேந்துகளை ஏற்றி அனுப்புவதுமான  கனமான பொறுப்புக்களை எடுத்து திறம்படச் செய்து பொருள் ஈட்டியதையும் சீமெந்துத் தொழிற்சாலைக்கு ஆட்களை எடுத்துக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டதையும் அதன் வருமானத்தை ஊர் மேம்பாட்டுக்கே திருப்பியதையும் மறக்க முடியாது.பெண்களும் ஒரு பக்கத்தால் மகளிர் அமைப்பு,வலைப்பந்தாட்டக் கழகம் போன்றவற்றை ஒழுங்குபடுத்தி முன்னேறிக் கொண்டிருந்தனர். இந்தத் துடிப்பும் இந்த உழைப்பும் ஒன்று சேர்ந்து ஒரு புதிய ஆலயம் கட்ட வலுச் சேர்த்தது. ஆலயம் மக்களுடைய உழைப்பிலேயே மேலெழும்பத் தொடங்கியது. ஆலயம் மேலெழ மக்கள் அடிக்கடி வெளியேறி வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படத் தொடங்கியது. இந்த இடைவெளியில் வெளிநாட்டில் வாழும் எமது சகோதரிக்கு ஒரு வீடு கட்டத் தொடங்கினோம். அப்போது கூட ஊரை விட்டு நிரந்தரமாகப் பிரிவோம் என்று நினைக்க முடியவில்லை. உயர்தரப் பரீட்சை சித்தியடைந்து பல்கலைக் கழகத்துக்கு தெரிவானபோது எனது  காலை நேர காட்சி நேரம் குறைவடையத் தொடங்கியது இருந்தாலும் கிடைத்த நேரத்தைப் பற்றிக் கொள்ளுவேன். எமது வீட்டு வேலிகள் எல்லாம் பிரிக்கப்பட்டு ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்குத் தடங்கலின்றி போகும் பாதைகளை கனமான சப்பாத்துக்கள் பலாலியிலிருந்து காங்கேசன்துறை வரை  உருவாக்கிக் கொண்டன. யாரும் எதுவும் பேசவில்லை. வீடுகளில் சமைப்பதும் சாப்பாட்டை எடுத்துக்  கொண்டு ஓடுவதுமாக மக்கள் அவலப் படத் தொடங்கினர். கொஞ்சம் யோசனை தட்டியது. அக்காவின் வீடு அத்திவாரம் போட்டு கொஞ்சம் உயர்த்தியபடி மிகுதி முடிக்க கல்லறுத்து வைத்திருந்தோம். அந்தக் காணிக்குள் குழாய்க் கிணறும் அடித்திருந்தோம். ஒரு நாள் அதைப் பார்க்கவென்று போய் நின்றபோது சைக்கிளில் இரண்டு பேர் வணக்கம் சொல்லிக் கொண்டு போனார்கள். அறுக்கப்பட்ட கற்கள் அங்கே இருக்காது என்று எண்ணிக் கொண்டேன். அடுத்த நாள் நாங்கள் நினைத்தது போல கற்கள் மாயமாய் மறைந்திருந்தன. பலாலியில் பங்கர் கட்ட என்றறிந்தோம். நாலு நாளில் பலாலியும் கை விடப்பட்டது. இப்போது கல்லுமில்லை பங்கருமில்லை,

ஒரு மாதிரியாக பல்கலைக்கழக வளாகத்துள் நடந்த அயல் நாட்டு வானூர்திகளின் அடிக்கடித் தரையிறங்கல்களுடன் இழுத்துப் பறித்து இறுதியாண்டுப் பரீட்சை முடித்துப் பட்டம் என்ற ஒன்று கையில் கிடைத்து விட்டது. கொஞ்ச நாள் வேலை செய்து பார்த்தேன். சயிக்கிளிலேயே ஊரிலிருந்து இளவாலை ஹென்றியரசர் பாடசாலைக்கு சென்று வந்து கொண்டிருந்தேன். காலையில் பிள்ளைகளோடு சேர்ந்து செல்லுவேன் பயத்தில். அப்படியிருந்தும் கீரிமலையில் மறிப்பார்கள். "பசங்களுக்கு நல்ல பாடம் சொல்லிக் கொடுங்க, புலிப் பாடம் சொல்லிக் கொடுக்காதீங்க" என்று சொல்லுவார்கள். திரும்பி வரும்போது சிலவேளைகளில் தனியே மாட்டிக் கொள்ளுவேன். மந்தி மரத்திலிருந்து தாவுவது போல கீரிமலைக் கோவிலின் மதிலிலிருந்து குதிப்பார்கள். எங்கே போய் விட்டு வருகிறாய் என்று அர்த்தமில்லாமல் கேட்பார்கள். அவர்களுக்குப் பதில் சொல்லி சைக்கிளை மிதிக்கும் போது கொஞ்சம்  தூரத்திலிருந்து வீடுகளுக்குள்ளால்  விடுப்புப் பார்த்தவர்கள் தங்கள் பங்குக்கு மறித்து "என்னவாம் பிள்ளை என்ன கேட்டவங்கள்என்று மேலதிகமாகக் கிளற ஏற்கனவே வேர்த்து விறுவிறுத்துக் கொண்டிருக்கும் எனக்கு கோபம் உச்சிவரை ஏறும். இவற்றைத் தவிர்க்க இளவாலையிலிருந்து  எமது ஊர் வரையுள்ள குச்சு ஒழுங்கைகள் எல்லாம் தேடிப் பிடிக்க வேண்டியிருந்தது.   மனதுக்குள், செயல்களில்  சுதந்திரமின்றி இருந்தது.
பதட்டமான காலங்களாய் இருந்தன அவை எல்லோருக்குமே. வந்தவர்கள் வந்த பதட்டத்துடனேயே வெறுப்பாய்த் திரும்பினர்.
ஆனால் எமது ஓட்டம் நிற்கவில்லை. யாரோ தெரிந்தவர்களுடைய வீட்டில் போய் அடைக்கலமானோம். தண்ணீர் இறைக்கும் பம்ப் செட் உட்பட முக்கியமாக எடுக்க முடிந்த அனைத்துடனும் வெளியேறியிருந்தோம். நான் ரசித்த கடலும் சூரியனும் தூரமாய்ப் போயின.இருக்குமிடமும் நிரந்தரமாய்த் தெரியவில்லை.எதிர்கால நலன் மிக விரும்பும் ஒரு சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட எங்களுக்கு  அடுத்து என்ன செய்வது என்ற எண்ணம் மேலோங்கத் தொடங்கியது. ஒரு கட்டமைப்பான எல்லோராலும் விரும்பப்பட்ட  உருவாக்கம் இருந்தாலும் கூட அதற்குள் கலக்கும் எண்ணம் எனக்கு எப்போதும்  இருந்ததில்லை. அவர்கள் கைகளில் வைத்திருந்ததும் கழுத்துகளில் கட்டியிருந்ததும் எனக்குள் ஒரு விதமான அசௌகரியத் தன்மையைக் காணும்போது ஏற்படுத்தியிருந்தது. ஆனாலும் விரும்பப்பட்டவர்கள். அவர்களால் துணிந்த செயல்களை எங்களில் அநேகமானோர் அவர்களை ஒரு மேம்பாட்டான நிலையில் வைத்துப் பிரித்துப் பார்த்துக் கொள்ளவே முடிந்திருந்தது. அவர்களுக்கான ஒரு தனி உலகத்தை மக்களாகவே உருவாக்கிக் கொடுத்திருந்தார்கள் என்று எண்ணுகின்றேன்.

எனவே எதிர்காலம் கருதி எனது சகோதரிகள் பிரான்சிலிருந்து என்னையும் எமது மூத்த சகோதரியின் மகனையும் அழைத்துக் கொண்டார்கள்.
நானும் எனது கடலும் இன்னும் மிகத் தூரமாகிப் போனோம்.எனது வீடு முகடின்றி இருக்கிறது என்று சொல்லுகின்றார்கள்; புற்கள் முளைக்க முடியாத நிலம் கொண்ட எனது  முற்றம் எமது காலடியின்றி காடாகிக் கிடக்கின்றது என்று சொல்லுகிறார்கள்; நாம் புரண்டெழுந்த மணல் பரப்பு வெறிச்சோடிக் கொண்டிருக்கும்; கடல் அலைகள் கொண்டு வந்து சேர்த்திருக்கும் கழிவுகளால் அப்பிரதேசமே நாற்றமெடுத்துக் கொண்டிருக்கும்; மொத்தத்தில் நெய்தல் நைந்திருக்கும்; நான் இரசித்த  சூரியன் இன்னும் எழுவான் நான் வருவேன் என்ற எதிர்பார்ப்புடன். ஆனால் நான்தான் முடங்கி விட்டேன்,,,,,,,



கருத்துகள் இல்லை: