வியாழன், 19 ஜூலை, 2012

"துரத்தப்பட்டவர்களின் மீள் பயணம்"


எத்தனையோ காலச் சிக்கல்களுக்குப் பிறகு நிம்மதியாக(?) நாட்டுக்குச் சொந்த பந்தங்களைப் பார்க்கவென்று போன நிறையப் பேரில் செல்வாவும் அடக்கம். முன்பு நிலைமை லேசான இறுக்கத்தில் இருந்த போது மாமா மோசம் போன செய்தி கிடைத்ததும் மனதுக்குள் குறுகுறுக்க கடினமான பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தாள் கணவனுடன். பிள்ளைகள் கேள்விப்பட்ட விடையங்களை வைத்துக் கொண்டு வரவே முடியாது என்று சொல்லி விட்டதால் கணவனும் மனைவியும் தனியே சென்றிருந்தார்கள். போன இடமெல்லாம் பயத்தில் கண் முழி பிதுங்கப் பிதுங்க பார்த்துப் பார்த்து மூச்சை இறுக்கிப்  பிடித்துக் கொண்டு இங்கே வந்து சேர்ந்ததும் தான் ஒழுங்காக விட முடிந்திருந்தது.
அது ஒரு கனாக் காலம் போல, அதுவும் கடந்து போக, சோதனைகள் எதுவுமே இல்லையாம் . அவங்கள் நல்லாக் கவனிக்கிறாங்களாம்.சந்தோசமாகப் போய் இதுவரை பார்க்காத இடங்களெல்லாம் பார்த்துக் கொண்டு வரலாம் என்கின்ற விளம்பரங்களோடு எம் மக்கள் தாம் பிறந்த நாட்டை நோக்கி டூரிஸ்ட் ஆக  இலகுவாக மிக இலகுவாக ஆறு மாதங்களுக்கு முன்பே பயணச் சீட்டுக்களை முன்பதிவு செய்யத் தொடங்கிய காலப்பகுதிகளில், செல்வாவும் "அம்மாவும் அப்பாவும் பிள்ளையளைப் பாக்கேல்லை" என்கின்ற முக்கிய காரணத்தை மையப்படுத்தி பயணச் சீட்டுக்களைப் பதிவு செய்து விட்டாள்.
பதிவு செய்த நாளிலிருந்து பயண நாள் வரை ஒரு ஈரோ கடையிலிருந்து  பல கடைகள் வரை ஏறி இறங்கி பொருட்கள் வாங்கிச் சேர்த்தாயிற்று. உடுப்புக்கள், உணவுப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள், மணிக்கூடுகள், இன்னும் என்னென்னவோ எல்லாம் குடும்பத்தினர், சொந்த பந்தங்கள், தெரிந்தவர்கள், அறிந்தவர்கள், எல்லாரையும் மனதில் வைத்து வாங்கியாயிற்று. எதிர்பார்த்ததை விட பணம்  எகிறுவது தெரிந்தது. கடன் அட்டை  கை கொடுத்தது. பரவாயில்லை பிறகு வந்து சமாளித்துக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டாள்.
செல்வாவின் கணவன் குமரன் முதலிலேயே சொல்லி விட்டான் "இஞ்சயிருந்து அள்ளிக் கட்டிக் கொண்டு போய் பிறகு அங்கயும் செலவழிச்சு அள்ளிக் கட்ட நான்  சம்மதிக்க விட மாட்டன்" என்று. செல்வா மனதுக்குள் ஓம், அங்கை போய்ப் பாப்பம் என்று  நினைத்துக் கொண்டாள் . ஆனால் சொல்லவில்லை. இப்பவே ஏதாவது கதைத்து எல்லாத்தையும் ஏன் குழப்புவான் என்று நினைத்து வாயை இறுக்கி  மூடிக் கொண்டாள். ஆனால் மனதுக்குள் அங்கே வாங்கப் போகும் பொருட்களின் பட்டியல் நீண்டிருந்தது. ஒரு வழியாக பயணப் பொதிகளை எல்லாம் (வேறு தெரிந்தவர்களால் தரப்பட்ட பொருட்கள் உட்பட) கட்டி முடித்து அப்பாடா என்று சாப்பிட இருந்த நேரத்தில் ஒரு மதியத்தில் மூத்தக்கா தொலைபேசி எடுத்தா. " பிள்ளை நீங்கள் வரேக்க அந்த தையிட்டி காணியின்ர உறுதியைக் கொண்டு வாங்கோவன்"!!நீங்கள் வரேக்கை எழுதிவிட்டால் நல்லது !! செல்வாவுக்கு என்ன சொல்லுவதென்று  உடனே எதுவும் தோன்றவில்லை. 1989 களில்சொந்த ஊரை விட்டு வெளிக்கிட்டிருந்தார்கள். 2011 இல் எல்லாருக்கும் அந்த இடங்கள் தேவைப்படுகின்றன. என்னவோ தெளிவில்லாதது போல் தெரிந்தது. போய்ப் பாப்போம் என்று நினைத்து "நான் இவரோடை கதைக்கிறன்" என்று அக்காவுக்குப் பதில் சொல்லி முடித்தாள்.
பயணத்தின்போது செல்வா நினைத்துக் கொண்டாள். அந்த முற்றத்து மாமரநிழலில் மணித்தியாலக்கணக்காக சுகமாக நல்ல நித்திரை கொள்ள வேண்டும். பயணத்தின் எதிர்பார்ப்புகளில் இதுவுமொன்று. அடுத்தது அம்மியில் அரைத்து நல்ல மீன் கறி சமைத்துச் சாப்பிட வேண்டும். அம்மா பாவம் ஏலாது தன்னால் அம்மியில் அரைக்க முடியும் என்று எண்ணினாள். எதிர்பார்த்திருந்த அந்தப் பொன் நாளில் ஊருக்குப் போய் இறங்கினார்கள். வரவேற்புப் பலமாகவிருந்தது. குமரனின் தங்கையின் கணவர் அவர்கள் கொண்டு போகும் பொருட்களின் கனம் அறிந்தது போல் வானுடன் காத்திருந்தார். வசதியாக ஏறிப் போய்  குமரனின் பெற்றோர் வீட்டில் இறங்கினார்கள். குமரனின் அண்ணன், தங்கைகளின் குடும்பம் வீட்டிலே இவர்களை எதிர்பார்த்துக் குழுமியிருந்தது. பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது; சொந்த பந்தங்களின் ஆரவாரம் கண்ணீரை வரவழைத்தது. அன்று இரவுப் பொழுது பிள்ளைகளின் அறிமுகங்களும், பேரன் பேர்த்திகளின் அன்புப் பேச்சுமாக கழிந்தது.
அடுத்த நாள் காலையில் ஒருவராலேயும் எழுந்திருக்க முடியவில்லை பயணக் களைப்பால். குமரனின் தங்கை அவர்கள் படுத்திருந்த அறைக் கதவைத் தட்டிய சத்தத்தில் எழுந்து கொண்டாள் செல்வா. கணவனையும் தட்டி விட்டாள். நேரம் பத்தைத் தாண்டியிருந்தது. வெளியே வந்து பளிச்சென்ற வெய்யிலைப் பார்த்தபோது மனதுக்குள் உற்சாகம் எழுந்தது. சூடான தேநீருடன் இரண்டு துண்டுப் பாணையும் சாப்பிட்டுக் காலை உணவை முடித்தபோது, "அண்ணா! மத்தியானம் என்ன சமையல் செய்ய?" என்ற கேள்வி குமரனின் தங்கையிடமிருந்து எழுந்தது. குமரன் வஞ்சகமில்லாமல் " பங்கு  இறைச்சி கிடைச்சால் வாங்கிச் சமையேன். அங்க நாங்கள் எப்பிடிச் சமைச்சாலும் இஞ்சத்தை ருசி வாறேல்லை" என்றான். "அப்ப ஒரு ரெண்டாயிரம் ரூபா தாங்கோ; நான் இவரை விட்டு வாங்குவிக்கிறன்!! இவர் நல்ல இறைச்சி பாத்து வாங்குவார். குமரன் செல்வாவைப் பார்க்க செல்வா பேசாமல் பணத்தை எடுத்துக் கொடுத்தாள்,
தங்கையின் கணவர் உந்துருளியை எடுத்துக் கொண்டு வெளிக்கிடவும், செல்வா அங்கே நின்று கொண்டிருந்தவர்களுக்காகக் கொண்டு போன பொருட்களைப் பிரித்துக் கொடுக்கத் தொடங்கினாள். அரை மணித்தியாலத்துக்கிடையில் அங்கே ஒரு சந்தையே கூடியது போல் தோன்றியது. அவரவர் தங்கள் தங்கள் உடுப்புக்களைப் போட்டு அழகு பார்த்தும் வாசனைத்திரவியங்களை முகர்ந்து பார்த்தும் மகிழ்ந்ததுமன்றி கடைக்கண்களால் அடுத்தவர் பொருட்களை அளவெடுத்தும் கொண்டனர். ஒருவாறு அந்தப் பிரச்சனையை முடித்துக் கொண்டு சமையல் முடித்து சாப்பிட மாலை மூன்று மணியாகி விட்டது.
சாப்பாடு முடித்த கையோடு குமரனின் தங்கை "அண்ணா ஒரு ஆயிரம் ரூபா தாங்கோ! இரவுக்கு  நல்ல விளைமீன் வாங்கி  கறியும் வைச்சு புட்டும் அவிப்போம்; சின்னத்தங்கச்சி நீங்கள் இஞ்ச நிற்குமட்டும் நிண்டிட்டுத்தான் போவா. எல்லாரும் விடுமுறையில நிக்கிறது நல்லதாய்ப் போச்சு..........தொடர்ந்தாள். செல்வாவுக்கு அவள் பேசுவதைக் கேட்க விருப்பமின்றி இருந்தது. பணம் கைமாறியதும் அந்த இடத்தை விட்டு அகன்றாள்.
இப்படியே காலை மத்தியானம் இரவு என்று இவர்கள் பணம் கொடுத்தால் தான் சாப்பாடு என்ற (விடுதி?) நிலை தொடர்ந்தது. இடையில் தங்கையின் மகள் கடை பார்க்கப் போவம் என்று இரண்டு முறை வலம் வந்ததால் மூன்று இலட்சங்கள் அதில் மட்டுமே பறந்தது.
அடுத்து வந்த நாட்களில் இங்கிருந்து போனவர்கள் இடம் பார்க்கவென்று கன்னியாய் வென்நீரூற்றும்  ,மலையகமும் மொத்தமாக பத்தொன்பது பேர் மகிழுந்து ஒன்றை வாடகைக்கு அமர்த்தி சுற்றியதில்  கையிருப்பு கணிசமாகக் குறைந்து பிரான்சிலிருந்து மீண்டும் பணம் எடுப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது அங்கே உள்ளவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. செல்வாவுக்கு மனம் சோர்ந்திருந்தது. இன்னும் கணவனின் குடும்பத்தோடு நிற்பதால் தொடர்ந்தும் பணம் இறைபட்டுக் கொண்டே இருக்க அதைவிட இன்னும் அம்மாவைப் போய் பார்க்க முடியவில்லையே என்கின்ற கவலை அதிகரித்துக் கொண்டிருந்தது. செல்வாவின் அக்கா இதற்கிடையில் இரண்டு தடவை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சி செய்திருந்தா. எதுக்கெடுத்தாலும் அதுக்குக் காசு தாங்கோ அண்ணா, இதுக்குக் காசு தாங்கோ அண்ணி என்று அரித்தெடுத்ததில் அங்கே நிற்கவே விருப்பமின்றி இருந்தது. ஆனாலும் வயது போன காலத்தில் மாமா, மாமியை மனம் நோகச் செய்யக்கூடாது என்பதில் கவனமாக பொறுத்துக் கொண்டாள்.
ஒரு மாதிரி மூன்று கிழமைகளை கடந்து செல்வாவின் பெற்றோர் வீட்டுக்குப் பயணமானார்கள். தாய் வாசலிலேயே வந்து செல்வாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். செல்வா முற்றத்தில் நின்ற மாமரம் இன்னும் நிற்கிறதா என்று பார்த்துக் கொண்டாள். நல்ல வேளை இன்னும் செழிப்பாக நிழல் பரப்பி நின்றது. ஒரு மாதிரி மூன்று கிழமைகளை கடந்து செல்வாவின் பெற்றோர் வீட்டுக்குப் பயணமானார்கள். தாய் வாசலிலேயே வந்து செல்வாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். செல்வா முற்றத்தில் நின்ற மாமரம் இன்னும் நிற்கிறதா என்று பார்த்துக் கொண்டாள். நல்ல வேளை இன்னும் செழிப்பாக நிழல் பரப்பி நின்றது.
அகதிகளாய் அந்தரித்துத் திரிவது கொடுமை! அதிலும் கொடுமை சொந்த நாட்டுக்குள்ளேயே அகதிகளாய் அலைவது! அந்தக் கொடுமையை கொஞ்சக் காலம் அங்கே அனுபவித்ததை செல்வா இன்னும் மறக்கவில்லை.ஒரு கிராமமே ஒரு கிணற்றைப் பாவித்ததையும், ஒரே கழிவறையைப் பாவித்து அது நிரம்பி வழிந்ததையும் எப்படி மறக்க முடியும்? அதைவிட அதுவரை  இடம் பெயர்ந்திராத மக்கள், இடம் பெயர்ந்திருந்த மக்களை காட்சிப் பொருட்களாகப் பார்த்ததும் கண் முன்னே வந்து போயிற்று.   இன்னும் எத்தனையோ சொல்ல முடியாத துன்பங்களை எல்லாம் அனுபவித்து களைத்திருந்தனர் எம் மக்கள். அதன் உச்சமும் எச்சமும் இன்னுமே அங்குள்ள பலரை வதைத்துக் கொண்டிருப்பது உலகறிந்த உண்மை. ஆனாலும் சிலர் அவற்றைக் கடந்து அப்பால் நின்று கொண்டு  அவற்றைப் பற்றி சிந்திக்க விருப்பமின்றி மேலான ஒரு வாழ்வை  விரும்புவது ஒரு அசாதாரணமான விடையமாக செல்வாவுக்கும் குமரனுக்கும் பட்டது. ஆனாலும் அங்கே அதைப் பற்றிப் பேசுவது கடினமாகப் பட்டது. ஏனென்றால் பேசப்படும் பொருள் புலம் பெயர் மண்ணிலிருந்து போகின்றவர்களுக்கேதிராகவே "நீங்கள் அங்கை சுகமாக இருந்து விட்டு வாறீங்கள் எல்லாம் கதைப்பீங்கள்" என்று திருப்பி நஞ்சு பூசிய  அம்பாய்த் தாக்குகின்றதை அங்கு நின்ற கொஞ்ச நாட்களுக்குள்ளேயே புரிந்து கொண்டார்கள். இது ஒரு விதமான அடிப்படையில் அவர்களுக்குண்டான உளவியல் தாக்கம். அதைப் புரிய வைக்க சில வேளை நீண்ட காலம் எடுக்கலாம். புலம் பெயர்ந்து வாழும் மக்களின் நிலைமையையும் வாழ்க்கை முறையையும் கொஞ்சம் புரிந்து ஏற்றுக் கொண்டால் நல்லது என்று செல்வா மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.
இப்போது செல்வாவின் பெற்றோர் வசிக்கும் இடம் அவள் வெளிநாடு வர முன் இடம் பெயர்ந்திருந்த ஒரு வீடு. அந்த வீட்டு மாமரத்தைப் பற்றியே இவ்வளவு நினைத்தாள் என்றால் தனது சொந்தக் கிராமத்து வீட்டுக்குச் சென்றால் எப்படி இருப்பாள் என்று கற்பனை பண்ணிக் கொள்ளலாம். அம்மா அவளுக்கு விரும்பிய மாதிரி அரைச்ச மீன் குழம்பும் மருமகனுக்கு கோழிக்கறியும் சமைத்திருந்தா. நீண்ட காலத்துக்குப் பிறகு அம்மாவின் சாப்பாடு தொண்டைக்குள் இதமாக இறங்கியது. கமலி அக்கா விழுந்து விழுந்து கவனித்தா. தங்கச்சி பிள்ளைகளுடன் அளவளாவிக் கொண்டிருந்தா. சாப்பிட்ட கையோடு மாமரத்துக்குக் கீழே பாய் ஒன்றை விரித்து படுத்து விட்டாள் செல்வா. குமரன் "அம்மா பிளேன்  எடுத்து மாமரத்துக்கு கீழ படுக்க வந்தவா" என்று பிள்ளைகளுடன் பகிடி பண்ணினான். ஆனால் அவள் எதையுமே காதில் வாங்கிக்  கொள்ளாமல் நித்திரையாகிப் போனாள்அந்த நேர அந்த சுகத்தை இழக்க அவள் தயாராக இல்லை.
அன்று இரவு இரண்டாவது சந்தை கடை விரித்தது. குமரன் வீட்டைப் போலல்லாது இங்கே அவளால் சுதந்திரமாகப் பேச முடிந்தது. மூத்தக்காவின் மகளுக்கு ஒரு சங்கிலியும்  இரண்டு சோடித் தோடுகளும் கொண்டு போய்க் கொடுத்தாள்தங்கச்சியின் மகளுக்கு ஒரு சின்ன அட்டியலும் கடைசியாகப் பிறந்தவனுக்கு ஒரு சோடிக் காப்பும் கொடுத்தாள். கொண்டு போன உடுப்புக்களை அவர்களையே பங்கிட்டுக் கொள்ளச் சொல்லி விட்டாள். எல்லோரும் ஏதோ செய்தார்கள், அவள் எதையுமே கண்டு கொள்ள விரும்பவில்லை. அவளுக்கு அவர்களுடைய மகிழ்ச்சியும் அன்புமே வேண்டும். புலம் பெயர்ந்து வாழும் நிலையில் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலேயும் உறவுகள் சொந்தபந்தங்கள் எவ்வளவு தேவை என்று நினைத்து மருகிப் போவது செல்வா மட்டுமல்ல. எனவே அங்கு நிற்கும் நாட்களை மகிழ்வாக ஆக்கிக் கொள்ள முயற்சித்தாள்.
அந்த வீட்டில் சுகமாக நாட்கள் இருக்கப் போகின்றன என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு கிழமை கழித்து மூத்தக்கா செல்வாவைத் தனியே கூட்டிக் கொண்டு போய் " கேட்கிறேன் எண்டு  குறை நினைக்காத பிள்ளைதங்கச்சிக்கு எத்தினை பவுண் நகை குடுத்தநீ?" என்ற போது நெஞ்சிலே வலி எழுந்தது. அடுத்த நாள் பிள்ளைகளுடன் விளையாடிக்  கொண்டிருந்த போது  சொல்லி வைத்தாற் போல் தங்கைச்சியும்  மகனின் கையிலிருந்த காப்பைப் பிடித்துப் பார்த்து " பலப்பில்லாமல்  இருக்கு. வளைஞ்சு போடும் போல......" என்றபோது நின்ற இடம் வெறுத்துப் போனது செல்வாவுக்கு. அன்பு, பாசம் என்பவற்றின் அளவு கோல் என்ன என்ற கேள்வி  எழுந்தது. எங்களிடமிருந்து இவர்கள் எதிர்பார்ப்பது இவ்வளவுதானா? இதற்குமேல் எதுவுமே இல்லையா? வார்த்தைகள் சொந்த உடன் பிறப்புக்களை எப்படிக் காயப்படுத்தும் என்கின்ற உணர்வு எப்படி இல்லாமல் போனது? தூரங்களும் பிரிவும்  எல்லாவற்றையும் தூரத் துரத்தி வெறும் சொல்லாடல்களும் சுயநலங்களும் எதிர்பார்ப்புக்களும் மட்டுமே மிஞ்சிப் போய் நிற்கின்றதாய் தெரிந்தது.
குமரனும் செல்வாவும் அங்கே உதவி தேவைப் படுபவர்களுக்கென்று ஒரு பகுதியை ஒதுக்கியிருந்தார்கள். அதைக்கூடச் செய்வதில் வீட்டிலுள்ளவர்கள் பொறாமையால் இடைஞ்சல் பண்ணினார்கள். துன்பங்களை அனுபவித்தவர்களே அவற்றை மறந்து அது தேவைப் படுபவர்களுக்கு உதவ தயங்கும் மனநிலைக்கு மாறிப் போனது  ஆச்சரியத்தை உண்டாக்கியது. மனம் நொந்திருந்தும் செய்ய வேண்டிய அனைத்தையும் முகம் கோணாமல் செய்து முடித்திருந்தார்கள். அம்மாவும் அப்பாவும் மட்டுமே அம்மா அப்பாவாகவே இருந்தார்கள்.
மூத்தக்கா மறக்காமல் "பிள்ளை அந்த உறுதி கொண்டு வந்தனியே? நீங்கள் இனி இஞ்ச வந்து இருக்க மாட்டியள் தானே! ஆரோ வந்து அபகரிக்க முதல் அதை எங்கட பிள்ளையளின்ர பேருக்கு மாத்தி விடுங்கோ. இது தான் சந்தர்ப்பம். இனி நீங்கள் போனால் எப்ப வருவீங்களோ  தெரியாது!" என்றபோது அங்கிருந்து துரத்தப் பட்டவர்களின் அவசியம் தெரிந்தது. செல்வாவுக்கு கோபம் கோபமாக வந்தது  நாங்கள் வாறதை எங்கட சொந்தச் சகோதரங்களே விரும்பவில்லை ஆனால் வெள்ளைக்காரனுக்கு எலும்பு உருக்கி நாங்கள் அனுப்புற காசு மட்டும் வேணும்.என்ன சகோதரங்கள்....மனதுக்குள் பொங்கினாள். ஆனால் வாய் பேசாது கேட்டதை எடுத்துக் கொடுத்தாள். இவர்களுக்குத்தான் சொந்தங்கள் வேண்டுமே. கொடுக்கும் போது இனிமேல் இஞ்ச திரும்பி வாறேல்லை என்று எண்ணிக் கொண்டாள்.
திரும்பிய நாளில் அம்மா கட்டிப் பிடித்து நீண்ட நேரம் அழுதா. பிள்ளை ஏலுமெண்டால் அம்மாவை அடுத்த வருஷமும் வந்து பார் என்றா அம்மா. அப்பா பிள்ளைகளைத் தடவிக் கொடுத்தார். செல்வா அம்மாவை விட அழுதாள்( எல்லாவற்றையும் நினைத்து). மோர் மிளகாயும், வடகமும் அம்மா தானே செய்து கொடுத்தா.

 துரத்தப்பட்ட நாட்டிலிருந்து ஏற்றுக் கொள்ளப்பட்ட நாட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். பணம் கட்டப்பட வேண்டிய கடிதங்கள் நிறைந்த கடிதப் பெட்டி வரவேற்றது. போய்வந்ததற்கும் சேர்த்து வேகமாக ஓடத் தொடங்கினார்கள் கணவனும் மனைவியும்.
ஒரு வருடம் வேகமாக ஓடிப் போனது. அம்மா அழுதபடி தன்னை வந்து பார்க்கச் சொன்னது அடிக்கடி செல்வாவின் நித்திரையைக் குழப்பியது. கணவனைக் கடிக்கத் தொடங்கி விட்டாள். ஒரு வழியாக அவன் சம்மதிக்க, அம்மாவுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு "அம்மா நான் வாறன் இந்த வருஷம்" என்றபோது அம்மா, நான் மோர் மிளகாய்க்கு ஆயத்தப் படுத்திறன் என்றா மகிழ்ச்சியோடு. செல்வா மீண்டும் கடைகள் பார்க்கத் தொடங்கி விட்டாள்.




2 கருத்துகள்:

Rajaji Rajagopalan சொன்னது…

மிகவும் அழகாகவும் யதார்த்தமாகவும் எழுதியிருக்கிறீர்கள். மனித மனங்களின் சிறுசிறு உணர்வுகளையும் மறவாது படம் பிடித்திருக்கிறீர்கள். "கடைக்கண்களால் அடுத்தவர் பொருட்களை அளவெடுத்தும் கொண்டனர்.." என்ற வரியில் நீங்கள் எவ்வளவு அக்கறையுடன் உலகை அவதானிக்கிறீர்களென்பது புலனாகிறது. இன்னும் எழுதுங்கள். நன்றி

Michaelpillai சொன்னது…

உங்களுடைய கருத்தைக் கவனிக்கத் தாமதமாகியதற்கு மன்னிப்பக் கோருகின்றேன். மிக்க நன்றி உங்களுடைய கருத்துக்கு.