திங்கள், 23 ஜூலை, 2012

ஏக்கம்

ஏங்குதே மனம் ஏங்குதே எம்மை
ஏற்றி வளர்த்த தாய் நிலம் நாடி
ஏங்குதே ஏங்குதே மனம் ஏங்குதே
ஏதிலி எம் மனம் ஏங்குதே

கரையேறி வளை யோடும் வெண் நண்டு
கரை புரண்டோடி கால் தொட்டு விலகும் அலை
இழுத்தணைத்துக் குளிப்பாட்டும்    
பாதம் புதைய நீண்ட வெண்மணல் பரப்பு
குதித்ததில் விளையாடியது எத்தனை
கண் எல்லைக் கடங்கா நீள் வானம்
எண்ணச் சொன்ன தாரகைகள்
கோடை தந்த விளை மீனும் 
மாரிக் கடல் தந்த  வாளையும்
கொட்டிச் செழிக்க வைத்த ஆழியம்மா
கண்களில் ஆடும் நினைவம்மா
கதைகள் பேச வைக்கும் என் ஊரம்மா இன்னும்
கதைகள் பேச வைக்கும் ஊரம்மா

கண் முன் ஊரவர் இணையவோ
புனிதரே மையத்தில் வீற்றிருந்தீரோ உம்
கண்ணசைவில் எம் குறை தீர்ந்தோம்
களிப்பால் விழா எடுத்திருந்தோம்
அலங்காரப் பவனியும் அழகாய் ஊர்ந்ததுவே
கூத்துக்களும் விடியலை தொட்டிடுமே
திருக்கோவில் திருத்திடவும்
திரண்டெழுந்து பணி செய்திருந்தோமே
திரும்புமா அந்நாட்கள் வெட்டையிலே
கழித்த புதுமையான நாட்கள் 
நினைவாய் மட்டும் போய்விடுமா
கதையாய் காற்றில்  கலந்திடுமா
நினைவாய் மட்டும் போய்விடுமா

ஊறணி பெற்றெடுத்த செல்வர்கள் நாமறிவோம்
மண்ணினை மீட்க தன்
மானத் தமிழ் காக்க
தாய் மண்ணினை முத்தமிட்ட - இவர்
கதைகளை நாமறிவோம்
அவர் இறுதி மூச்சுக் காற்று- இன்று
எம் சுவாசக் காற்றாக
நேற்று வரை இவர் சுமந்த கனவுகள்
நாளை நம் நனவாக
இம் மறவரை நாம் மறவோம்
வாழ்வோம் என்றும் இவர் நினைவாய் 

கருத்துகள் இல்லை: