திங்கள், 23 ஜூலை, 2012

பெண் தேடி.....

பெண் தேடி.....

par Alvit Vincent, samedi 23 juin 2012, 14:41 ·
பிறந்து வளர்ந்த ஊரை விட்டு நாட்டை விட்டு  இதுவரை பார்த்திராத தேசம் ஒன்றை நோக்கி எம் வாழ்வு  அமையும் என்று ஒரு போதும் எதிர்பார்த்திருந்ததில்லை. ஆனால் இந்த எதிர்பாராத நிகழ்வு அநேகத் தமிழருக்கு நடந்தது. உள்ளூர் இடப்பெயர்வுகளின்  சீரழிவும்  அமைதியில்லா வாழ்வும் நிரந்தரமற்ற சூழ்நிலையும் எதிர்காலம் நோக்கிய பயமும்  கூடுதல் தூண்டல் காரணிகளாயிருந்தன,
செல்வியின் மனதில் ஒரு சொல்ல முடியாத உணர்வு பரவிக் கிடந்தது . சினிமாக்களில் வரும் பட்டாம்பூச்சி பறப்பது போன்ற உணர்வல்ல அது; மாறாக உறவுகளின் இழப்பின் வேதனையை அனுபவிக்கத் தயாராகும் ஒரு நிலை. அம்மா மற்றும் இரண்டு தம்பிகளை விட்டுப் பிரிவது இலகுவாகத் தெரியவில்லையோசிக்கும்போது வயிற்றுக்குள் ஏதோ செய்து சத்தி வருமாற்போல் இருந்தது. அம்மா ஆறுதலாகக் கதைத்தார். இத்தனைக்கும் செல்வி ஒன்றும் தனியே வெளிநாட்டுக்குச் செல்ல தயாராகவில்லை. அவளுடைய அண்ணன் சந்திரன் பிரான்சிலிருந்து எல்லா அலுவல்களையும் பார்த்து கூப்பிடுகின்றார். அக்கா மாலினியும் அங்கே குடும்பமாக இருக்கிறா. இருந்தாலும் இங்கேயிருந்து விமானத்தில் தனியே ஏறி பிரான்ஸ் வரைக்கும் போய் சேர வேண்டுமே. நினைக்கவே பயமாக இருந்தது. அண்ணன் இடைக்கிடையில் தொலைபேசியில் சில ஆலோசனைகளைச் சொல்லுவார்.

அம்மாவுடன் கொழும்புக்கு வந்து சேர்ந்து விமானம் ஏறும் நாளும் வந்தது. அன்று முழுதும் பயத்தில் சத்தியுடன் காய்ச்சலும் சேர்ந்து கொண்டது. அம்மா அருகிலிருந்த மருத்துவரிடம் கூட்டிச்சென்று மருந்து வாங்கிக் கொடுத்தார். செல்விக்கு திரும்பி வீட்டுக்குப் போனால் என்ன என்று இருந்தது. ஆனால் சொல்ல முடியவில்லை. திரும்பிப் போயும் தான் என்ன செய்வது? வீடிழந்து, ஊரிழந்து, தொழிலிழந்து வாழும் நிலை வேண்டாம் என்று தான் இந்த முடிவை எடுத்தார்கள். இனிப் பின் நோக்க முடியாது. மத்தியானத்துக்குப் பிறகு காய்ச்சல் குறையத் தொடங்கியதும் அம்மா பெருமூச்சு விட்டா. செல்வி தன்னை ஒருநிலைப்படுத்த முயன்றாள்விமான நிலையத்தில் அம்மாவைத் திரும்பிக் கடைசியாகப் பார்த்துக் கையசைத்தபோது நிறைந்திருந்த கண்களினூடே அம்மா கலங்கலாகத் தெரிந்தா.

விமானம் மேலெழுந்தபோது அடிவயிற்றிலிருந்து நோவு மேலெழுந்து மீண்டும் சத்தி வருமாற்போல் இருந்தது. கையிலே தயாராக ஒரு பிளாஸ்டிக் பையை வைத்திருந்தாள். ஆனால் எதுவுமே வெளியே வரவில்லை. அண்ணா சொன்னபடி காதை அடைத்திருந்தாள். வெளியே நகரம் சிறுத்துக் கொண்டு வந்தது. அம்மா இந்நேரம்  அழுது கொண்டிருப்பா. அத்துடன் தெரிந்த எல்லாக் கடவுள்களிடமும்  பிரச்சனையின்றிப் போய்ச் சேர வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருப்பா. அம்மா பாவம். விமானம் பூமியை உதறி விட்டு முகில் கூட்டங்களுக்கிடையில் சீராகப் பயணிக்கத் தொடங்க அழகான விமான சேவைப் பெண்கள் சிரித்தபடி பயணிகளின் தேவைகளைக் கவனிக்கத் தொடங்கினர். சாப்பிடப் பிடிக்கவில்லை. ஒரு தேநீர் கேட்டு வாங்கிப் பருகிக் கொண்டாள். கையிலே கொண்டு வந்திருந்த கண்ணதாசனின் வாழ்க்கை அனுபவங்களை படிக்கத் தொடங்கினாள் , (அது எத்தனையாவது தடவை என்று ஞாபகம் இல்லை). ஒவ்வொரு தடவையும் அதை வாசிக்கும் போது  எத்தனை பேரால் இப்படி தமது  வாழ்வைத் திறந்த வெளியில் தூக்கிப் போட முடியும் என்று எண்ணிக் கொள்ளுவாள். அதன் பின் எத்தனை விமர்சனங்களைத்தான்  எதிர்கொள்ள நேரிடுகின்றது? ஒருவர் தான் பட்ட துன்பங்களை அடுத்தவர் படக்கூடாது என்று எண்ணிச் சொல்லும் விடையமே இங்கே ஆய்வுக்குள்ளாக்கப்படுகின்றது. இதிலே எமது சமூகக் கட்டமைப்பிலே உள்ள திருத்தப்படவேண்டிய சில குறைபாடுகளை நிவர்த்தி செய்தாலன்றி சில நல்ல விடையங்களை ஏற்றுக் கொள்ளுவது சிரமம் என்று எண்ணிக் கொண்டாள் செல்வி. யோசித்துக் கொண்டே தூங்கியும் விட்டாள்.

யாரோ காதுக்குள் பேசுமாப்போல் உணர்வு ஏற்பட திடுக்கிட்டு எழுந்து கொண்டாள். அது விமானம் தரையிறங்குவதற்கான அறிவுப்பு. எழுந்துசென்று முகத்தைக் கழுவிக் கொண்டு தயார்ப்படுத்தி கைப்பையை சரிபார்த்துக் கொண்டாள் செல்வி. ஒரு தேநீர் குடித்தால் நல்லது போலத் தோன்ற சிரித்துக் கொண்டு நிற்கும் பெண்ணைக் கூப்பிட்டு ஒரு தேநீர் தர முடியுமா என்று கெஞ்சிக் கேட்டு வாங்கிக் குடித்தவுடன் கொஞ்சம் தெம்பு வந்தாற்போல் தோன்றியது. சுற்றிப் பார்த்துக் கொண்டாள். அருகிலிருந்தவர் இன்னும் நித்திரையிலிருந்தார். பலர் தரையிறங்கும் அவாவில் தங்களுடைய பொருட்களை ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்தனர். யன்னல் வழியே பார்த்தபோது பூமி வெளிச்சங்கள் நட்சத்திரங்களாய் அழகாகத் தெரிந்தன. சிறிது நேரத்தில் விமான இருக்கைக்கான பட்டியை போடும்படி அறிவிப்பு வர எல்லோரும் கீழ்ப்படிந்தனர். செல்விக்கு மனதுக்குள் லேசான பயம் எட்டிப் பார்த்தது; அண்ணா வந்து நிற்பாரா? அண்ணாவின் தொலைபேசி இலக்கம் இருக்கிறதா என்று மீண்டும் சரி பார்த்துக் கொண்டாள். விமானம் தரை தொட்ட நேரம் அதிகாலைப் பொழுது. ஐரோப்பாவின் ஒளிவெள்ளம் அதிசயிக்க வைத்தது. விமான நிலைய சடங்குகள் முடிந்து வெளியே வர அண்ணா தூரத்திலிருந்தே மகிழ்ச்சியாகக் கையை அசைத்தார். நிம்மதியாயிருந்தது.

ண்ணாவின் பி எம் டபிள்யு அவளுக்குப் பிடித்திருந்தது. விமானநிலையத்திலிருந்து வீட்டுக்குப் போகும் வழி வரை பாரிசின்  அதிகாலைப் பொழுது அமைதியாய் ஆனால் கவர்ச்சியாய் இருந்தது. மக்கள் இன்னும் போர்வைக்குள்தான் இருந்திருக்க வேண்டும். வீதி அகலமாய் வழுக்கிக் கொண்டு போனது. ஒரு நாள் சுன்னாகத்திலிருந்து பண்டத்தரிப்புக்குப் போகும் வழியில் செல்வி சென்றுகொண்டிருந்த உந்துருளி முழுக் கவனத்தையும் ஒருங்கிணைத்து பள்ளம் பார்த்து ஒட்டியும் தவிர்க்க முடியாமல் ஒரு பள்ளத்தில் விழுந்து அப்படியே பக்கத்திலிருந்த வயலுக்குள் தூக்கி எறியப்பட்டதை நினைத்துக் கொண்டாள். பளிச்சென்று வரிசையாக எரிந்து கொண்டிருந்த தெரு விளக்குகள், தெருவோரங்களில் இருந்த கடைகளின் பல வண்ண மின் பெயர்கள், உயர்ந்து நிற்கும் கட்டிடங்களின் மேலே பளிச்சிடும் விளம்பரங்கள் என்பவை பாரிசை  சொர்க்கமாகக் காட்டின. தெருவில் இறங்கி நடக்கவேண்டும் போல இருந்தது. பாரிசில் இருப்பது பெருமையாய்த் தெரிந்தது.

வீடு வந்து விட்டது என்று அண்ணா சொன்னார்  பி எம் டபிள்யு ஐ தெரு ஓரத்திலே நிறுத்தி விட்டு  பொதிகளைத் தூக்கிக் கொண்டு முன்னே நடந்தார். செல்வி நின்று சுற்றிலும் பார்த்தாள்ஐந்து பாரிய கட்டிடங்கள் பத்துப் பன்னிரண்டு மாடிகளாயிருக்கலாம் சேர்ந்தாற்போல் அமைந்திருந்தது. அதிகாலை வேலைக்குப் போபவர்கள் அக்கட்டிடங்களிலிருந்து அங்கொன்று இங்கொன்றாகப்  புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களைக்  கடந்தவர்கள் அண்ணாவுக்கு வணக்கம் சொன்னார்கள். எட்டாவது மாடியிலே அண்ணாவினது வீடு அமைந்திருந்தது. மின்னுயர்த்தி இருந்தது. இது வேலை செய்யாவிட்டால் நடந்தா ஏறுவீங்கள்? என்று செல்வி கேட்டாள். அது இடைக்கிடையிலே நடக்கும் என்று அண்ணா சிரித்துக் கொண்டு  பதில் சொன்னார். அவளுக்கு பயமாக இருந்தது. வீட்டுக்குளே காலடி எடுத்து வைத்தாள் செல்வி. உள்ளே ஒரு சிறு நடை பாதை இருந்தது. வலது பக்கம் திரும்பினால் சமையலறை. அண்ணா மோசமாக இல்லை. எதிர்பார்த்ததை விட சமையலறை சுத்தமாகவே இருந்தது. திரும்பி இடதுபுறம் நடந்தால் மூன்று மீற்றர் இடைவெளியில் ஒரு படுக்கையறையும் அதை ஒட்டினாற்போல் இன்னொரு படுக்கையறையும் வாசலுக்கு நேரே நடுப்பகுதியில் வரவேற்பறையும் வலது பக்கத்தில் குளியலறையும் இருந்தன. அளவான வீடு. பிடித்திருந்தது

இரவு நித்திரை இல்லாமல் இருந்ததால் குளித்துவிட்டுப் படுத்தால் நல்லது போலத் தோன்றியது. குளித்து விட்டு வர அண்ணா புட்டும் மீன் குழம்பும் தந்தார். அண்ணா நன்றாகச் சமைக்கப் பழகியிருந்தார். அண்ணா அக்காவுக்குக் கிட்ட இருந்திருக்கலாம், ஏன் இரண்டு பேருக்கும் ஒத்து வரவில்லை என்று நினைத்துக் கொண்டாள். சாப்பிட்டு விட்டு அம்மா அண்ணாவுக்காக ஆசையாகக் கொடுத்து விட்டிருந்த எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக எடுத்துக் கொடுத்து விட்டு போய்ப் படுத்து விட்டாள். செல்வி அக்கா தன்னுடைய வரவை எதிர்பார்த்து அண்ணா வீட்டுக்கு வந்திருப்பா என்று வழியிலே நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் ஏமாற்றமாயிருந்தது. காலையில் அண்ணாவிடம் இதுபற்றிப் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டே நித்திரையாகிப் போனாள்.

முதுகு வலிக்குமாற்போல் உணர்வு தோன்ற விழித்துக் கொண்டாள் செல்வி. ஒரு தடுமாற்றம் தோன்றி  எங்கே இருக்கிறோம் என்று விளங்க சில நிமிடங்கள் பிடித்தது. எழும்பியவுடன் கேட்கும் அம்மாவின் குரலும் தம்பிகளின் சண்டையும் இல்லாத முதற் காலைப் பொழுதாயிருந்தது அன்றைய காலை. நேரம் காலை பத்து மணியைத் தாண்டியிருந்தது. அறைக்கு வெளியே வந்து  பார்த்தபோது அண்ணா ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்து "தேநீர் போட்டுத் தரவா"? என்று கேட்டார். "இல்லை அண்ணா, இனிமேல் நான்தான் எல்லாம் செய்வேன். இவ்வளவு நாளும் நீங்க தனிய கஷ்டப்பட்டது காணாதா?" சொல்லி விட்டு செல்வி குளியலறைக்குள்  சென்று  ஒரு மின்னல் வேகக் குளியல் போட்டு விட்டு வந்து தேநீர் போட்டு அண்ணாவுக்கும் கொடுத்து தானும்  குடிக்கத் தொடங்கினாள். அண்ணா அவளது  வருகையை ஒட்டி இரண்டு நாட்கள் வேலைக்கு விடுப்பு எடுத்திருந்தார். கடந்த தடவை ஊருக்கு வந்தபோது பார்த்ததை விட கொஞ்சம் பெருத்திருந்தார். சாப்பாட்டில் கவனம் எடுக்க நேரம் இருப்பதில்லை என்று சொன்னார். மனதுக்குக் கஷ்டமாக இருந்தது. சமையலறைக்குள் சென்று நோட்டம் விட்டாள் செல்விதயார்ப் படுத்தப்பட்ட உணவுப் பண்டங்களை  அதிகளவில் உள்வாங்கியிருந்த அளவான குளிர் பதனப் பெட்டி ஒன்று கதவை ஒட்டினாற்போல் இருந்தது. மின்னடுப்புடன் வெளியே பொருட்களை பரத்தி வைக்க வேண்டிய அவசியமேற்படாத அளவில் மேலும் கீழுமாக அலமாரிகள் அமைந்திருந்தன. வெளியே வந்து அக்காவைப் பற்றிக் கேட்க இதுதான் சமையம் என்றெண்ணி
"அக்கா ஏன் என்னைப் பார்க்க வரவில்லை" என்றாள்.
 "யாருக்குத்  தெரியும்? உன்னுடைய அக்கா அதுக்கும் ஏதாவது வியாக்கியானம் வைச்சிருப்பா" ....
"ஏனண்ணா அக்கா ஊரில இருக்கேக்க நல்லாத்தானே இருந்தா".
"அது ஊரில செல்வி. இஞ்ச கனக்க விஷயங்கள்  மாறிப் போச்சுது". ம்ம்ம்ம் ....
"ஏனிப்பிடி?"
"பிள்ளைஅக்காவுக்கு என்னால எவ்வளவு செய்ய ஏலுமோ அதை விட நல்லாவே செய்திட்டன். அக்காவுக்கு இன்னும் ஆசை தீரேல்லை."
செல்விக்கு என்ன சொல்லுவதென்று தெரியவில்லை. அக்காவை  பார்த்துக் கதைத்தால் நல்லது என்று தோன்றியது.
"அண்ணா நான் அக்காவோடை கதைக்கலாமா?"
"பிரச்சனையில்லைதாராளமாய்க் கதை பிள்ளை. உனக்கு அவள் அக்கா எனக்கு  தங்கச்சி. ஆனால் வம்பை விலைக்கு வாங்காமல் இருந்தால் சரி செல்வி. சரி பிள்ளை, நீ நித்திரையாய் இருந்த நேரம் நான் அம்மாவோடை கதைச்சிட்டன் ; நீ கதைக்கிறதெண்டால் இதில ஒரு கார்ட் இருக்கு அதில கதை ; நான் ஒருக்கால் வெளியில போக வேணும்",
 என்று சொல்லி கார்ட் எப்பிடிப் பயன்படுத்துவது என்று விளங்கப் படுத்தினார். அம்மாவோடு கொஞ்ச நேரம் பேசி விட்டு மதியச் சமையலை பொருட்களைத் தேடித்  தேடி ஒருவாறு செய்து முடித்தாள்அக்காவோடு பேச வேண்டும். அக்கா அண்ணாவின் வீட்டிலிருந்து ஏறக்குறைய நாற்பது கிலோமீற்றர் தூரத்தில் வசித்து வருகிறாள் என்று கேள்விப்பட்டேன். தொலைபேசியில் இரண்டு தடவை கிடைக்காமல் மாலை ஆறு மணியளவில் அக்கா கிடைத்தாள். "அக்கா நான் செல்வி ....
" செல்வியோ? எப்ப பிள்ளை வந்தனீ? நேற்று வந்து சேந்திருக்க வேணும் போல...."
"ஓமக்கா, நேற்று இரவு போல வந்து சேந்தனான்"
"அப்பா இப்ப தான் அவன் டெலிபோன் அடிக்க விட்டவனாக்கும்"..... அக்கா கயிறு திரிக்க ஒரு நூல் தேடுவது தெரிந்தது.
"அக்கா, நீங்கள் ஏயர்போர்டுக்கு வருவீங்கள் எண்டு எதிர்பாத்தனான். சரி அங்கை இல்லை எண்டவுடன என்னைப் பாக்க இஞ்சஎண்டாலும் வருவீங்கள் எண்டா  நீங்கள் இஞ்சையும் இல்லை" செல்வியும் விடாமல் பதில் கொடுத்தாள். "நான் அவன்ர வீட்டுப் படி மிதிக்க மாட்டன் நான்தான் உன்னைக் கூப்பிடவேண்டு இருந்தனான் அதுக்கிடையில அவன் எனக்குச் சொல்லாமல் தான் அலுவல் பாத்து உன்னை எடுத்திட்டான். அவனை உன்னை இஞ்சை  கொண்டுவந்து விட்டிட்டுப் போகச் சொல்லி நீ கேளன்" இதற்கு மேல் அக்காவுடன் கதைக்க முடியாது என்று தெரிய ஓம்  நான்  அண்ணாவோட கதைக்கிறன் என்று சொல்லி விட்டு தொலை பேசியை நிறுத்தினாள் செல்வி.

அக்காவின் பேச்சும் தொனியும் ஊரிலே  தெரிந்திருந்த அக்காவாக இல்லை. அக்கா  இங்கு வந்து மாறி விட்டாவா அல்லது முன்பே இயல்பாயிருந்த இக்குணம் எம் சமூகச் சூழல் காரணத்தால் வெளிப்படாதிருந்ததா? அண்ணா அக்காவை இங்கே கூப்பிட்டு திருமணம் செய்து வைத்து அவவுக்குத் தேவையான அனைத்தையுமே கொடுத்து முடித்திருந்தார். அனால் அக்காவுக்கு அது இன்னும் போதவில்லை. அண்ணாவை அடிக்கடி நச்சரித்து தனக்குத் தேவையானதைப் பெற்றுக் கொண்டிருந்தா. ஆனால் ஒரு எல்லைக்கு மேல் அவராலும் பாவம் முடியவில்லை ஊரிலே மற்றவர்களையும் பார்க்கவேண்டுமல்லவா,அக்கா கேட்பதை அண்ணா மறுக்க அக்கா கண்டபடி பேசத் தொடங்க அண்ணா பேசாமல் தானாகவே விலத்திக் கொண்டு விட்டார்.

செல்விக்கு சகோதரங்கள் இப்படிப் பிரிந்து கிடப்பது பிடிக்கவில்லை.ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து சகித்துக் கொண்டு வாழ்ந்தால் வெளியே உள்ளவர்களின் சிரிப்புக்கு ஆளாகாமல் இருக்கலாமே என்று நினைத்தாள். அண்ணா வைத்திருந்த தமிழ் நாட்காட்டியிலிருந்து  இதழ்கள் மிக வேகமாக உதிர்ந்துகொண்டிருந்தன. செல்வி அக்காவுடன் இடையிடையே பேசிக் கொள்ளுவாள். ஒரு நாள் அக்கா வழமையை விட மகிழ்ச்சியாகப் பேசி இறுதியாக ஒரு நல்ல செய்தியைச் சொல்லி முடித்தாள்.வீட்டுக்கு  ஒரு சிறு இளவரசியோ அல்லது இளவரசனோ கிடைக்கப் போகின்றான்(றாள்). அண்ணா மிகவும் மகிழ்வடைந்தார். ஊரிலே ஒரே கொண்டாட்டம்.அக்கா சந்தர்ப்பம் பார்த்திருந்து காயை நகர்த்தினா. தன்னுடைய நிலைமையை சொல்லியழுது செல்வியை தன்னுடனே சேர்த்துக் கொண்டாள். அண்ணாவுக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. குழந்தை பிறக்கு மட்டும்தான் செல்வி அங்கே இருப்பாள் என்ற ஒப்பந்தத்துடன் செல்வி அக்காவுடன் போய்ச் சேர்ந்தாள். அக்கா இதுவரை தூரவே இருந்தபடியால் கண்டு கொள்ளாமுடியாமலிருந்த அனைத்தையும் செல்வியால் அக்காவுடன் சேர்ந்திருந்த காலப் பகுதியில் கண்டு கொள்ளக் கூடியதாக இருந்தது. அண்ணாவுக்கு முப்பத்தி ஆறு  வயது முடிந்துவிட்டிருந்தது. இதுவரை அவருடைய திருமணத்தைப் பற்றி யாருமே அக்கறை எடுத்ததாகத் தெரியவில்லை அம்மாவைத் தவிர. இதனிடையில் அக்காவும் அண்ணாவும் ஒன்றாக இருந்த காலத்தில் அக்காவுக்குத் தெரிந்த ஒரு பெண் வீட்டுக்கு வந்தபோது அண்ணாவுக்கு அந்தப் பெண்ணைப் பிடித்திருந்தது. அந்தப் பெண்ணுக்கும் கூட. ஆனால் அக்கா அதை குழப்பியடித்திருந்தா. அண்ணா திருமணம் செய்து விட்டால் பிடுங்குவது சிரமமாகி விடுமே! அண்ணாவும் தன்னுடைய திருமணத்தைப் பற்றித் தானே கதைப்பது அவமானம் என்று நினைத்தோ என்னவோ பேசாமலேயே இருந்து விட்டார்.

இதையெல்லாம் அறிந்த  செல்விக்கு மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. எப்படி எல்லாம் தனிமனித சுயநலச் சிந்தனைகள் எமது சமுதாயத்தில் ஒருவரை அழுத்தி வைத்திருக்கின்றன. இவற்றிலிருந்து நாமாகவே விடுபட்டால் சரி இல்லையென்றால் அப்படியே அமுங்கிச் சாக வேண்டியதுதான்.ஏறி மிதிக்கும் குணமுடையவர்கள் எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம் என்ற வகையில் கிடைக்கிறதை சுருட்டிக் கொண்டு போய்க் கொண்டே இருப்பார்கள். ஆனால் அவர்களைக் கேட்டால் இவர்களுக்குக் கெட்டித்தனம் இல்லை; வாழத் தெரியாதவர்கள் என்று தங்களுடைய கோணல் புத்திப்படி வியாக்கியானம் சொல்லுவார்கள். அக்கா இந்த விடையத்தில் மிகக் மோசமாயிருந்தாள். ஆட்களுக்கேற்றாற்போல் பேசி காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தாள்.
செல்வியைக் கொண்டு நன்றாகவே வேலை வாங்கினாள். செல்வி பிறக்கப் போகும் குழந்தையை நினைத்து பல்லை கடித்துக் கொண்டிருந்தாள். ஆனால் போகப் போக அக்காமேல் இருந்த அன்பு வெறுப்பாக மாறுவதை தவிர்க்க முடியவில்லை. அன்பு ஒன்றும் கேட்டுப் பெறுவதில்லையே! தானாக வர வேண்டும் அவரவர் செயல்களால் அது நிலைக்க வேண்டும். அக்கா அதைக் குடும்பத்திலிருந்து இழந்து கொண்டிருந்தாள். குழந்தையும் பிறந்தது. பெண் குழந்தை. அண்ணா அக்கா சொல்லாமலேயே வந்தார் ஒரு சங்கிலியை குழந்தையின் கழுத்திலே போட்டு விட்டுப் போய் விட்டார். அக்காவுக்கு வாயோடு கண்ணும் சேர்ந்து சிரித்தது.

அண்ணா போன பின்பு செல்வி அண்ணாவின் திருமணப் பேச்சை எடுத்தாள்.
"அண்ணாவின்ர வயதை ஒத்த ஆட்கள் எல்லாம் கலியாணம் செய்து குடும்பம் பிள்ளைகளோட இருக்க அண்ணா மட்டும் தனியாக இருக்கிறார். அவருக்கு ஆசை இருக்காதே?"
"இருக்கும் தான். ஆனால் இப்ப நீயும் வந்து விட்டாய். உனக்கு ஒரு கலியாணம் செய்யாமல் என்னண்டு அவர் செய்யிறது? பிறகு  உன்ரை கலியாணப் பிரச்னையை ஆர் பாக்கிறது? வாறவள் எங்கடை குடும்பத்தைப் பாக்க ஒத்து வராவிட்டால் என்ன செய்யிறது?" ஊரில இருக்கிற தம்பி தங்கச்சியை ஆர் பாக்கிறது?"
செல்விக்கு கோபம் உச்சிக்கேறியது.
"அப்ப அண்ணா என்ன மெஷினோஆர் பாக்கிறது ஆர் பாக்கிறது எண்டு கேக்கிறாய்? ஏன் நீ வேற ஆளோ? நீ பாக்க மாட்டியோ? நீ குடும்பத்தில ஒரு ஆள் இல்லையோ?"  செல்வியின் குரல் உயர்ந்தே இருந்தது.

அக்கா இதை எதிர்பார்க்கவில்லை என்பது பார்வையிலேயே தெரிந்தது. இருந்தாலும் அவள் அனுபவசாலி. விட்டுக் கொடுக்காமல்,
"ஆம்பிளைதானே வீட்டைப் பாக்க வேணும். நான் பெம்பிளை என்ன செய்யிறது? எங்கடை செலவுகளையே சமாளிக்க ஏலாமல் இருக்கு. இதுக்கிடையில இவற்றை குடும்பத்தையும் பாக்க வேணும்....."
உன்னால ஒண்டும் செய்யேலாது. அண்ணாவால மட்டும் எல்லாம் செய்ய ஏலும் அப்பிடித்தானே?
"நான் அப்பிடிச் சொன்னனானே ? இன்னும் கொஞ்சம் பொறுப்போம் எண்டுதான் சொல்லுறன்."
"இப்பவே வழுக்கை விழத் தொடக்கி விட்டுது, இன்னும் என்ன பொறுக்கிறது?
செல்வி இனி அங்கே இருப்பதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டாள்.
"அக்கா எனக்கு இஞ்ச இருக்க ஏலாது நான் அண்ணாட்டப் போகப் போகிறேன். அங்கை அவர் சாப்பாட்டையும் கவனிக்காமல் வேலை வேலை எண்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பார்".

அக்கா இதை எதிர்பார்க்கவேயில்லை.
"நீ இப்பிடி திடீரெண்டு வெளிக்கிட்டா நான் என்ன செய்யிறது செல்வி? அடுத்த மாதம் நான் வேலை தொடங்கலாம் எண்டு இருக்கிறன். நீ இருந்தால் பிள்ளையைக் கவனிக்கலாம்; இல்லாட்டால் அதுக்கு காசு கட்ட வேணும். அண்ணா இவ்வளவு நாளும் தனிய சமாளிச்சவர் தானே. அவர் பாத்துக் கொள்ளுவார். நீ இஞ்ச இரு."
செல்வி கோபத்தில் வார்த்தைகளைச் சிதற விடாமலிருக்க கஷ்டப்பட்டு வார்த்தைகளை தேடினாள்.
"பாத்தியா நீ இந்த ஜென்மத்திலை திருந்த மாட்டாய்.எப்பவும் உன்னுடைய பிரச்சனைகளை மட்டும்தான் கவனிச்சுக் கொண்டிருப்பாய். மற்றவை எக்கேடு கேட்டால் என்ன எண்ட எண்ணம் உனக்கு. நீ எப்பிடி எண்டாலும் இரு ஆனால் என்னால உன்னை மாதிரி இருக்க ஏலாது நான் அண்ணாவிட்டை போறன்"
சொல்லிக் கொண்டே கைப் பையைத் தூக்கிக் கொண்டு "நான் பிறகு அண்ணாவோட வந்து மிச்சச் சாமான்களை எடுக்கிறன்" என்று சொல்லியபடி இறங்கி தெருவுக்கு வந்தாள்.
மாலை மங்கி இருள் கவிந்திருந்தது. வீடுகளுக்குள் இருண்டிருந்த மனக்களைப் பார்த்ததில் பிரகாசமாய் ஒளிர்ந்து கொண்டிருந்த  தெரு விளக்குகள்  இப்போது ஆச்சரியத்தைத் தரவில்லை செல்விக்கு.

யாராவது பெண்ணிருந்தால் சொல்லுங்களேன்! செல்வி அண்ணாவுக்குப் பெண் பார்க்கிறாள்.

கருத்துகள் இல்லை: