திங்கள், 23 ஜூலை, 2012

பதில்??

கண்கள் திறந்துள்ளன
 எதிலும் லயிக்காமல்
பார்க்கின்றன பார்வை
எதிலும் பதியாமல்
சிந்தனை வெறுமையாய்க்
கிடக்கின்றது
சிந்திக்கவும் முடியாமல்
எங்கேயோ சுழன்று
செல்கின்றது
மனமும் உடம்பும் சேர்ந்தே
வெறுத்துப் போகின்றது
காலுக்கடியில் நின்ற
போது அமுங்கிப் போயும் என்
முன்னே நீண்டு வளர்ந்து
எனக்கு முன் நடந்த போது
உன் கால்களுக்கு
நான் அடிமையில்லை எனவும்
என் நிழலும் என்னைப்
பரிகாசிக்கின்றது
இரவுத் தூக்கம்
துக்கத்தில் கரைந்து
பகல் சூனியமாய்த் தெரிய
பிரபஞ்சங்களில் வேறுபட்டு
தனித்தே பயணிக்கின்றேன்
ஆறுதல் தேடவில்லை
பதில் தேட முனைகின்றேன்
கிடைக்குமாப் போல்
தெரியவுமில்லை
மானிட சிந்தனைகளுக்குட்பட்டு
தேடுவதால் சுற்றியும்
தொடக்கத்துக்கே வந்து
சேரத்தான் முடிகின்றது
இயலாமையால் அருகில்
உறுமும் குறட்டைச் சத்தம்
நாராசமாய் காதைச் சுட
எட்டி உதைக்க
மனம் ஏவுகின்றது
சிரிப்பொலிகள்
கோபப்படுத்துகின்றன
வயிறு வெறுமனே
சத்தமின்றி இருக்கப்
பழகி விட்டது
செய்யப்படும் செயல்களில்
குற்றம் காணத் துடிக்கின்றது
வார்த்தைகள்
பிழைக்கப் பார்க்கின்றன
முகம் திருப்பி
நடிக்க முயல்கின்றேன்
என் இயல்புத் தன்மையை
நிரூபிக்க ஆனாலும்
எனக்குள்ளே மருகிச்
சுருண்டு போவதை
தடுக்க முடியவில்லை
 
அமைதி எனக்குள்ளே என்றால்
அதைத் தடுப்பது எது
எதிர்பார்ப்பது தவறென்றால்
மகிழ்வு எங்கே
கிடைப்பதை ஏற்பதெனின்
அது ஒப்பந்தமாகாதா
ஆசைகளின் தோற்றம்
அவலத்தின் மூலமெனின்
மானிட வளர்ச்சி
நிகழ்வதெப்படி
காரியத்தின் காரணத்தை
காணாமல் நல்
தீர்வு எப்படி
பதில் இல்லை
மீண்டும் தொடக்கத்துக்கே..

கருத்துகள் இல்லை: