வெள்ளி, 14 செப்டம்பர், 2012

சுத்துமாத்து.


கொஞ்சக் காலமாக அம்மாவினதும் அக்காமாரினதும் நச்சரிப்புத் தாங்க முடியாமல் தொடர, கடைசியாக அரை குறை மனதாக  ஒரு மாதிரி ஓம் என்று சொல்லி விட்டான்  வரதன். இப்போதைக்கு பிரச்சனையில்லாத வேலையாய் இருந்தாலும் அதிலே இன்னும் கொஞ்சம் மேலே போக வேண்டும் என்ற ஆசை. அதை விட பொறுப்புக்கள் என்று ஒன்றும் வேறு  இல்லை. அம்மாவும் அப்பாவும்  ஊரிலே.  வரதன் பிரான்சிலே தன்னுடைய ஒரு  அக்காவுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அக்காவும் அத்தானும் அவனை தங்களுடைய  மகனாகவே பார்க்கின்றனர். இன்னொரு அக்கா கொஞ்சம் தொலைவிலே வாழ்கின்றாள். அவனுடைய வயதை உடையவர்கள் எல்லோரும் அநேகமாக திருமணமாகி  விட, அக்காமாருக்கு  அவனுக்கும் விரைவில் திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்கின்ற ஆவல். ஆக மொத்தத்தில் எல்லோரும் சேர்ந்து அவனை சம்மதிக்க வைத்தாகி விட்டது. கொஞ்சம் கறுப்பு, கொஞ்சம் பொது நிறம், கொஞ்சம் கட்டை, சரியான உயரம் அப்படி இப்படி என்று  கொஞ்சப் பெண்கள் தட்டுப் பட்டுக் கொண்டு போனார்கள். வரதனுக்கு ஊரிலேயே ஒரு படித்த பெண்ணைப் பார்த்தால் நல்லது என்று தோன்ற இறுதியாக ஊரிலேயிருந்து வந்த ஒரு சம்பந்தம் ( பெண்) எல்லாருக்கும் பிடித்துப் போனது. வரதனும் படத்தைப் பார்த்தான். எதிர்பார்த்ததை விட பெண் அழகாகவே இருந்தாள். அக்காவுக்கு மகா சந்தோசம்! அம்மாவுக்குத் தொலைபேசியில் முடிவைச் சொன்னார்கள். அம்மா "எல்லாரும் வடிவா யோசிச்சு முடிவைச் சொல்லுங்கோ" என்று சொன்னார். அக்கா "இஞ்சை எல்லாருக்கும் பிடிச்சிட்டிது உங்களுக்கும் பிடிச்சால் சரி" என்றாள். அம்மா "தம்பிக்கும் உங்களுக்கும் சரி எண்டால் எனக்குச் சரி" என்றாள். வரதன் இந்தியாவுக்குப் போய் திருமணத்தை முடித்து விட்டு வரத் தீர்மானித்தான். அக்காமாரும் அவனுடன் கூடப் புறப்பட்டனர். அம்மாவும் அப்பாவும் இந்தியாவில்  தெரிந்தவர்கள் ஒருவரின் வீட்டில் தங்கியிருக்க ஏற்பாடு செய்து விட்டார்கள். பெண் வீட்டார் தாங்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களுடன் தங்கும்  ஏற்பாட்டைத்  தாங்களே செய்து கொண்டார்கள். வரதனுக்கு வேலையிடத்தில் இரண்டு வார விடுவிப்பே கிடைத்தது. அதற்குள்ளே எல்லாவற்றையும் திட்டமிட்டுச் செய்து முடிக்க வேண்டுமாதலால் முடிந்தவரை தொலைபேசியூடாக அநேகமான ஒழுங்குகளைச் செய்து முடித்திருந்தார்கள். இந்தியாவுக்குப் போய் கூறை எடுக்கலாம் என்று சொல்லி விட்டார்கள் அக்காமார். வரதன் அக்காமார் சூழ இந்தியாவுக்குப் போய்ச் சேர்ந்தான்.தன்னுடைய மனைவியாக வரப் போகிறவளுக்கு ஆசையாக நிறையப் பொருட்களை வாங்கிச் சென்றிருந்தான் வரதன். போய்ச் சேர்ந்ததும் தனது வருங்கால மனைவியைப் பார்த்துப் பேசி பொருட்களைக் கொடுத்து அவளுடைய மகிழ்ச்சியைக் காண அவனுக்கு ஆசை.
போய்ச் சேர்ந்த நான்காம் நாள் அவன் வந்தனாவைச் (அதுதான் அவனது வருங்கால மனைவியின் பெயர்) சந்திக்க அவர்களுடைய வீட்டுக்குச் சென்றான். சின்னக்காவுக்கு அவனுடன் போய்ப் பார்க்க ஆசை. ஆனாலும் அவர்களுக்கிடையே தான் இடைஞ்சலாய் இருப்பேன் என்று எண்ணி அவனைத் தனியே விட்டாள். தாய் வந்து வரவேற்று பயணங்கள் பற்றி விசாரித்தாள். சில நிமிடங்களில் ஒரு பெண் சிரித்தபடியே தேநீர் கொண்டு வந்து கொடுத்தாள். நேரம் கடந்து கொண்டே இருந்தது. வந்தனாவைக் காணவில்லை. தாயும் எதுவும் அதைப் பற்றிப் பேசுமாப்போல் தெரியவில்லை. அவன் கடைசியாக "வந்தனா இல்லையோ? நான் கொஞ்சப் பொருட்கள் கொண்டு வந்தனான், அவவிட்டை நேர குடுத்தால் நல்லது எண்டு நினைக்கிறான்" என்றான். தாய் கொஞ்சம் கலவரப்பட்ட மாதிரித் தெரிந்தது. "இருங்கோ வாறன் தம்பி" என்றவள், உள்ளே போய் சில நிமிடங்களில் திரும்பி வந்து, "வாறா  தம்பி " என்று சொல்லி விட்டு, "நான் உள்ள சமைச்சுக் கொண்டிருக்கிறன், கட்டாயம் நீங்கள் சாப்பிட்டிட்டுத்தான் போக வேணும், ஏதேன் தேவை எண்டால் கூப்பிடுங்கோ" என்று சொல்லி விட்டு உள்ளே போக, முதலில் தேநீர் கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போன பெண் திரும்பி வந்தாள். வரதன் அவளைப்  பார்த்து மெல்லிதாகச் சிரித்தான் மனதுக்குள் எரிச்சலை மறைத்தபடி. கொஞ்ச நிமிடங்கள் மௌனத்தை விழுங்க,...... "ப்ளீஸ், வந்தனாவைக்  கூப்பிடுறீங்களா? எனக்கு வேறை நிறைய வேலையளும்  இருக்கு" என்றான். அந்தப் பெண்ணின் முகம் பயங்கரத்துக்கு மாறியது. "நான்... நான்தான் வந்தனா"........என்றாள் அழுகைக்கு மாறிய குரலுடன். வரதனுக்கு தலைக்குள் கிண்ணென்று ஏதோ சுழர, என்னவோ பிழை என்று உறைத்தது. "என்ன விழையாடுறீங்களா?" என்று ஆத்திரத்தை மறைத்தபடியே  கேட்டுக் கொண்டு இருக்கையை விட்டு எழும்பினாள். அந்தப் பெண் "அம்மா" என்று கத்தி அழுதபடியே உள்ளே ஓடிப் போய் விட்டாள். தாய் வெளியே தயக்கத்துடன் மெதுவாக வந்தாள். வரதன் "என்ன நடக்குது இஞ்ச?" என்றான். " ஏன் தம்பி என்ன பிரச்சனை?"  "நாங்கள் போட்டோவில பாத்த வந்தனா இவவில்ல" என்றான் கோபம் இதற்கிடையில் உச்சத்துக்குப் போயிருந்தது. "இல்லைத்தம்பி, இவவின்ர போட்டோதானே அனுப்பினனாங்கள்? என்றாள் தாய். அவனுக்கு அதற்கு மேல் அங்கே நின்று அந்தப் பெண்களிடம் பேச  விருப்பமில்லாமல் முறைத்துப் பார்த்து விட்டு வெளியே வந்து விட்டான். ஆசையாகக் கொண்டு போன பொருட்கள் அப்படியே கிடந்தன.
அம்மாவும் அக்காமாரும் அவனை ஆவலுடன் பார்த்திருந்தனர். சின்னக்கா "பெம்பிளை நேரிலை எப்பிடி தம்பி"? என்றாள். அவன் நேரே தன்னுடைய அறைக்குள் சென்று வந்தனாவின் படத்தை எடுத்துக் கொண்டு வந்து அம்மாவிடம் காட்டி " சொல்லுங்கோ அம்மா! இது நீங்கள் பாத்த பெம்பிளைதானே?" அம்மா படத்தைப் பார்த்ததும் "ஐயோ கடவுளே! இந்தப் படத்தைப் பாத்தே நீங்கள் எல்லாரும் ஓமெண்டு சொன்ன நீங்கள்?" என்று எல்லாரையும் திருப்பிக் கேட்டா. எல்லாரும் விறைத்து நிற்க "இது நாங்க பாத்த பெம்பிளையின்ர தங்கச்சி" என்று போட்டுடைத்தா. "அப்ப என்னெண்டு எங்களுக்கு இந்தப் போட்டோ வந்தது " என்றான் வரதன். "அப்பாவாலை சுழிபரத்தில இருந்த சாவகச்சேரிக்கு போக ஏலாமல் போனதால, பெம்பிளை பகுதி ஆக்கள் தான் பிரச்சனை இல்லை நீங்கள் விலாசத்தைத் தாங்கோ நாங்கள் போட்டோவை அனுப்பி விடுறம் எண்டு சொல்லி நாங்கள் உன்ர விலாசத்தை குடுத்தனாங்கள்" என்றா அம்மா. "அதுதான் நான் உங்களைத் திரும்பத் திரும்பக் கேட்டனான் பிடிச்சிருக்கோ, வடிவா யோசிச்சு முடிவைச் சொல்லுங்கோ எண்டு, ஆனால் கடவுளே! ஆருக்குத் தெரியும் இப்பிடி போட்டோவை வைச்சு சுத்து மாத்துச் செய்யிற ஆக்கள் எண்டு? பாத்தா நல்ல படிச்ச மனிசரா இருக்கினம் எண்டு தானே நாங்களும் நம்பினாங்கள்" அம்மா புலம்பத் தொடக்கி விட்டா. அக்காமார் என்ன செய்வது  என்று தெரியாமல் குழம்பிப் போய் நின்றனர். அத்தான் இரு நான் போய் கேட்டுக் கொண்டு வாறன் என்ன கேவலமான வேலை இது? இப்பிடி எல்லாம் மனிசர் இருப்பினமோ? என்று கொதித்துக் கொண்டு வெளிக்கிட்டார்.
வரதன் தடுத்து நிறுத்தினான். "இனிமேல் இதப் பற்றிக் கதைச்சுப் பிரயோசனமில்லை; ஆனால் அவை நினைக்கிற மாதிரி இந்தக் கலியாணம் நடக்கப் போறதுமில்லை. எல்லாரும் வந்த மாதிரி திரும்பிப் போவம்" என்றான் நிதானமாக. அம்மா அவனைப் பாத்து "ஐயோ ஒரு பெம்பிளப் பிள்ளையின்ர பாவம் எங்களுக்கு வேண்டாம் தம்பி, தாய் தகப்பன் செய்த பிழைக்கு அந்தப் பிள்ளை என்ன செய்யும்? என்ர ராசா நீ அந்தப் பிள்ளைய செய்" என்றாள் கலக்கமாக. வரதன் அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு, "அம்மா இது ரெண்டு பேரின்ர வாழ்க்கை அம்மா; உங்கடை சொல்லுக்காக நான் இப்ப அந்தப் பிள்ளையை செய்தால் வாழ்க்கை முழுக்க ரெண்டு பேருக்குமே நரகமாத்தான் இருக்கும். நீங்கள் கவலைப்படதயுங்கோ! அந்தப் பிள்ளைக்கும் ஒரு நல்ல விரும்புற வாழ்க்கை கிடைக்கும், எனக்கும் ஒரு நான் விரும்புற வாழ்க்கை கிடைக்கும்" என்ற போது அம்மாவால் பதில் சொல்ல முடியவில்லை.

3 கருத்துகள்:

அ. பசுபதி (தேவமைந்தன்) சொன்னது…

என் மூத்த அண்ணார் வாழ்வில் சுத்து மாத்தாக நடந்தது. அக்கா வெளியேற அண்ணி கழுத்தை நீட்டினார்.( அண்ணி - அன்றைய தங்கை)

அ. பசுபதி (தேவமைந்தன்) சொன்னது…

வெளியில், முகநூலின் கருத்துரைப் பகுதியிலும் ஒன்றுண்டு. கைப்பேசியிலிருந்து பதிந்தது அது.

Michaelpillai சொன்னது…

நன்றி ஐயா.