ஞாயிறு, 27 ஜனவரி, 2013

தலைமுறை


திருநாவுக்கரசுக்கு போவது என்று முடிவெடுத்தபின் மனம் லேசாகியது. கடந்த இரண்டு கிழமைகளாக இடுப்பு முறிந்தாற்போல் வேலை. வேலை என்றால் அப்படி ஒரு வேலை. ஊடறுத்தோடும் பாரிஸ் நதிக்கரையோரத்தின் செயின்ட் மிசேல் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் சாண்ட்விச் செய்வதும், பிஸ்ஸா வேக வைப்பதும் அவனுடைய வேலை. தான் இல்லாவிட்டால் முதலாளி கடையை இழுத்து மூடி விடுவான் போன்ற ஒரு பதட்டத்தில் எப்போதும் பாய்ந்து பாய்ந்து வேலை செய்வான். அவசரமாக நின்ற நிலையில் சாப்பிட்டு முடித்து திரும்பவும் வேலைக்குப் பறப்பவர்களுக்கும், மாணவர்களுக்கும் பெரிய வரப்பிரசாதம் இது போன்ற சிறு கடைகள். மறுபுறமாகப் பார்த்தால், எப்போதும் அலைமோதும் கூட்டத்துடன் இருக்கும் இந்த இடங்கள் திருநாவுக்கரசுவின் முதலாளி போன்றவர்களுக்குக் கிடைத்த பாக்கியம். விற்பனைக்கு ஒரு ஆளையும் குசினியில் திருநாவுக்கரசுவையும் தனியாக வைத்து கடையை அமோகமாக நடத்திக் கொண்டிருந்தான் முதலாளி. ஸ்ரீலங்கன் ஆக்கள் நல்லா வேலை செய்வினம், ஒரு சிக்கலும் தர மாட்டினம் என்கின்ற போடப்படாத பதக்கங்களை மட்டுமே தக்க வைக்க உழைக்கும் கூட்டத்தில் ஒருவனாக அவனும் ஓடிக் கொண்டிருந்தான். லீவு கேட்கும் நாட்களில் மட்டும் இடைக்கிடை முறுகல் நிலை வரப் பார்க்கும் அவனுக்கு முதலாளிக்கும். பிறகு இரண்டுபேரும் இருவருக்கும் பாதிப்பில்லாத ஒரு சமரச நிலைக்கு வருவார்கள். முதலாளிக்கு அவன் தேவை அவனுக்கு முதலாளி தேவை. இருந்தாலும் ஒரு பயத்துடனேயே எப்போதும் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். உலகப் பொருளாதாரச் சிக்கல்களால் எல்லா நாடுகளுமே ஆட்டம் கண்டு கொண்டிருக்கும் நிலையில், இருக்கிற வேலையை இறுகப் பற்றிக் கொண்டிருக்க வேண்டிய பயமிருக்கிறது எல்லோரிடமும்.
திருநாவுக்கரசுவின் அண்ணன் முகுந்தன் பரிசின் எல்லைப்புற நகர் ஒன்றில் வசித்து வருகின்றான்.திருநாவுக்கரசுவை முகுந்தன் தான் இங்கே எடுத்து விட்டிருந்தான். வந்து சேர்ந்ததும் அவர்களுடன் சேர்ந்து கொஞ்சக் காலம் இருந்தான். அண்ணன் தம்பியில் நல்ல பாசமாகத்தான் இருந்தான்; அண்ணிதான் கொஞ்சம் அகங்காரமாய் இருந்தா. அவர்களுடைய வீட்டை நினைத்தால் இப்போதும் இவனுக்கு ஆசையாக இருக்கும். ஊரில் இருக்குமாப்போல் தாராளமான காணியோடு சேர்ந்த வீடு. முற்றத்தில் ரோஜாப்பூ செடிகள் இருபுறமும் மஞ்சளும் செஞ்சிவப்புமாய் பூத்து வரவேற்கும். படியேறியவுடன் ஒரு நீண்ட வராந்தா; அதன் இடதுபுறம் ஒரு பெரிய வரவேற்பறை. சுவர்கள் வெண்ணிறம் பூசப்பட்டு இருக்கும். ஆறு மின்குமிழ்கள் பொருத்தக்கூடிய தொங்கு விளக்கு வரவேற்பறைக்கு மெருகூட்டும். வெள்ளை நிறத்திலான யன்னல் மறைப்புக்களுடனும் அதே நிறத்திலேயான இருக்கைகளுடனும் அதிகமில்லாத அளவான ஆனால் பெறுமதி மிக்க அலங்காரப் பொருட்களுடனும் வரவேற்பறை ஜொலிக்கும். கைகளால் எங்காவது தொட்டுத் தடவிப் பார்த்தாலும் ஒரு தூசு கிடைக்காது. அப்படி வீட்டை வைத்திருந்தா அண்ணி. வரவேற்பறையை தொடர்ந்து பெரிய மரத்தினாலான மேசையுடனும் சுற்றி வர வைத்து அதற்கேற்ற இருக்கைகளுடனும் கூடிய பளிச்சென்ற உணவருந்தும் பகுதி. அவன் வந்த ஆரம்பகாலங்களில், சாப்பிட இருக்கும்போது மேசையில் தன்னுடைய முகத்தைப் பார்த்து மேசையின் தரத்தை எண்ணி வியந்திருக்கிறான். வராந்தாவின் வலது பக்கம் சமையலறை அமைத்திருந்தது. அப்படியே வராந்தாவைப் பின் தொடர்ந்தால் ஒரு குளியலறை இருக்கும். அதனிடையே முதலாம் மாடிக்கான படிக்கட்டுக்கள் அமைந்திருக்கும். மாடியிலே இரண்டு அறைகளும், ஒரு அலுவலக அறையும், குளியலறையும் இரண்டு பக்கங்களிலும் அமைந்திருக்கும். ஒவ்வொரு அறையும் வெவ்வேறு வகையில் அலங்கரிக்கப் பட்டு கண்களைப் பறிக்கும். வீடு மட்டுமில்லை அண்ணி வெளிக்கிட்டு வெளியே போனால்கூட கடந்து போகிறவர்கள் ஒருதரம் திரும்பிப் பார்த்துவிட்டுத்தான் போவார்கள். அப்படி அசத்தலாக இருப்பா அண்ணி. வீடு மட்டுமில்லை அண்ணி வெளிக்கிட்டு வெளியே போனால்கூட கடந்து போகிறவர்கள் ஒருதரம் திரும்பிப் பார்த்துவிட்டுத்தான் போவார்கள். அப்படி அசத்தலாக இருப்பா அண்ணி. நல்ல வசதியான குடும்பத்தில் ஒரு குறையுமில்லாமல் வளர்ந்து வந்ததால் கர்வம் கூடவேயிருந்தது.
திருநாவுக்கரசு பிரான்சுக்கு வந்தபோது அவனுக்கு இருபத்தெட்டு வயதாயிருந்தது. மொழி படிக்கக் கொஞ்சக் காலம் போனான். பிறகு அப்பிடியே தொழிற் கற்கைக்கூடாக உணவகம் ஒன்றில் வேலை செய்யத் தொடங்கினான். படிக்கும் பயிற்சிக் காலத்தில் படித்த ஒரு பெண்ணின்மேல் (தமிழ்ப்பெண்தான்) காதல் வர அதை வீட்டில் சொல்ல அண்ணி துள்ளிக் குதித்தா. அப்போதுதான் தெரியும் அவனுக்கு அண்ணி தனது சொந்தக்காரப் பிள்ளை ஒன்றுக்கு அவனைக் கலியாணம் செய்து வைக்க நினைத்துக் கொண்டிருந்தவ என்று. அவனுக்கு தன்னை நம்பிய பிள்ளையைக் கை விட விருப்பமில்லை. இனிமேல் அண்ணனின் வீட்டில் இருப்பது சாத்தியமில்லை என்றும் உணர்ந்து கொண்டான். அந்தப் பிள்ளையின் பெற்றோருடைய சம்மதத்தோடு திருமணத்தை முடித்து தனியே போய் விட்டான். அன்றிலிருந்து இன்றுவரை அண்ணன் குடும்பத்தாருடன் எந்தப் பேச்சுவார்த்தையுமில்லை. இருபது வருடங்களாகி விட்டது. அண்ணனை நினைக்கும்போது கவலையாக இருக்கும். அவர் நல்லவர்தான். குடும்பம் ஒழுங்காகப் போக வேணுமென்றால் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்துப் போகத்தானே வேணும்.
இப்ப திடீரென்று இரண்டு கிழமைக்கு முதல் ஒரு தொலைபேசி அழைப்பு வீட்டுக்கு வந்ததும் கொஞ்சம் அதிசயித்துப் போனான் திருநாவுக்கரசு. அண்ணன்தான் எடுத்திருந்தார். குரல் கொஞ்சம் மாறிப் போயிருந்தது. செரினுக்கு கலியாணம் பேசி முடிச்சிருக்கிறம் வார மாதம் பத்தாம் திகதி கலியாணம் நீ குடும்பத்தோட வா! என்றார் அண்ணன். ஆர் செரின் என்று கேட்க வாயெடுத்து பிறகு கேள்வியை மாத்தி மூத்தவளோ என்று கேட்டான். "ஓம்" என்று பதில் வந்தது. பிறகு என்ன கதைக்கிறது என்று தெரியவில்லை. அவர் என்ன நினைத்தாரோ "டெலிபோனில சொன்னாச் சரியோ அல்லது நேர்ல வந்து சொல்ல வேணுமோ" என்றார். அவன் திடுக்கிட்டு "இல்லை இல்லை , நீங்கள் விலாசத்தை அனுப்புங்கோ" என்றான் . தாலிகட்டு பத்து மணிக்கு, நீ அதுக்கு முதல் வீட்டை வா எல்லாரும் சேர்ந்து போகலாம்; அப்ப சரி நான் வைக்கிறன்" வைத்து விட்டார் அண்ணன். அவர் கதைத்த நாளில இருந்து அவனுக்கு ஒரே யோசனை. என்ன நடந்தது இவையளுக்கு? இவ்வளவு காலமும் இல்லாமல் இப்ப என்னெண்டு திடீரென்று, அதுவும் கலியாணத்துக்குக் கூப்பிடுகினம். அவனுடைய மனைவிக்கு இது பெரிய சிக்கலாகத் தெரியவில்லை. அவை எங்களை மதிச்சுக் கூப்பிட்டால் நாங்களும் போய் எங்கடை கடமையைச் செய்து போட்டு வருவோம்; இதுக்கு ஏன் மண்டையைப் பிக்கிறீங்கள் எண்டு தெரியேல்லை என்று சிரித்தாள். "அண்ணன் சிலவேளை அண்ணிக்குத் தெரியாமல் கூப்பிடுறாரோ?" இருக்காதப்பா, அவையின்ர பிள்ளையின்ர வீட்டு கலியாணத்தில அவையே குழப்பம் வரச் செய்வினமே? இப்பிடி மாறி மாறி யோசிச்சு கடைசியில போய்ப் பாக்கிறது என்று முடிவாயிற்று.
ஒரு மாதிரி லீவும் எடுத்து போகிற நாள் வந்தபோது கொஞ்சம் மனதுக்குள் குறுகுறுத்தது. இருபது வருசத்துக்குப் பிறகு அண்ணன் வீட்டு உறவுகளை எதிர்கொள்ளும் நிலை சங்கடமாகத் தோன்றியது. பிள்ளைகள் பெரியவர்களாகி விட்டதால் அவர்களுடனான அறிமுகம் எப்படி இருக்கும் என்று நினைக்க முடியவில்லை. எல்லாவற்றுக்கும் மேலே அண்ணியை எதிர்கொள்வது மிகக் கடினமாகத் தெரிந்தது. மனைவியிடம் நேற்றிரவே சொல்லி விட்டான் "எங்கடை அண்ணியைப் பற்றி உனக்கு வடிவாத் தெரியும், அதுக்கேற்றமாதிரி வெளிக்கிட்டுக் கொண்டு வா" என்று.
வீட்டை அடைந்து உள்ளே போனபோது, அண்ணன் வாகனத்தில் பொருட்கள் ஏற்றிக் கொண்டிருந்தார். இவனை மனைவி பிள்ளைகளுடன் கண்டதும் அவருடைய முகம் மகிழ்ச்சிக்கு மாறியது. வேலையை விட்டு விட்டு வாங்கோ உள்ள வாங்கோ என்று அழைத்தார். வரவேற்பறை முன்பு போலவே அழகாயிருந்தது. அண்ணி உள்ளேயிருந்து வந்து வாங்கோ உள்ள என்றா. அவனுக்கு அண்ணியைப் பார்க்க இது அண்ணிதானா என்று அதிசயமாக இருந்தது. ஆள் மெலிந்து முன்பு குரலிலிருந்த கர்வம் காணாமல் போயிருந்தது. காலம் எவ்வளவு மாயங்கள் செய்கிறது? செரின் மேலே யிருந்து அரைகுறை தலைமுடி அலங்காரத்துடன் ஓடி வந்து சித்தப்பா வாங்கோ என்று அவனுடைய கைகளைப் பிடித்துக் கொண்டாள். சித்தி எப்பிடி இருக்கிறீங்கள் என்று அவனுடைய மனைவியையும் இழுத்து, ஏன் நிக்கிறீங்கள் இருங்கோ என்று அவர்களை இருத்தினாள். அண்ணி அவளைப் பார்த்து பிள்ளை நேரம் போகுது நான் அவையளைக் கவனிக்கிறான் நீ போய் வெளிக்கிட்டு முடி என்றாள். "ஓமம்மா! சித்தப்பா சித்திக்கு ஏதாவது சாப்பிடக் குடுங்கோ! நான் இவை பிள்ளைகளை என்னோட கூட்டிக் கொண்டு போறன், என்னோட அவை கதைச்சுக் கொண்டிருப்பினம்" சொல்லி விட்டு அவர்களைக் கூட்டிக் கொண்டு மேலே போய் விட்டாள். திருநாவுக்கரசுவுக்கு கண்ணீர் வருமாப்போல் இருந்தது. செரின் ஐந்து வயதாயிருந்தபோது அவன் இந்த வீட்டை விட்டுப் போயிருந்தான். அதற்குப் பிறகு தன் வாழ்க்கையுண்டு என்று இருந்து விட்டான். அந்தக் குழந்தை இன்று வளர்ந்து தான் கூட இருந்து வளர்த்த குழந்தை போல சித்தப்பா என்று அரவணைக்கிறதே! இது எப்படி? கொஞ்சக் காலமாக செரின்தான் தன்ர கலியாணத்துக்கு எல்லாச் சொந்தங்களையும் கூப்பிட்டு செய்ய வேணும் எண்டு கதைச்சுக் கொண்டிருக்கிறவள். நீ எங்களோடை இல்லாட்டாலும் அவள் அடிக்கடி சொந்தங்களைப் பற்றிக் கேட்டுத் தெரிஞ்சு கொண்டிருக்கிறவள். சும்மா சின்னச் சின்னப் பிரச்சனைகளுக்கெல்லாம் வருசக் கணக்கில எப்பிடிக் கதைக்காமல் இருக்கிறனீங்கள் எண்டு எங்களோட சண்டை பிடிப்பாள்.
கொஞ்சக் காலமாக செரின்தான் தன்ர கலியாணத்துக்கு எல்லாச் சொந்தங்களையும் கூப்பிட்டு செய்ய வேணும் எண்டு கதைச்சுக் கொண்டிருக்கிறவள். நீ எங்களோடை இல்லாட்டாலும் அவள் அடிக்கடி சொந்தங்களைப் பற்றிக் கேட்டுத் தெரிஞ்சு கொண்டிருக்கிறவள். சும்மா சின்னச் சின்னப் பிரச்சனைகளுக்கெல்லாம் வருசக் கணக்கில எப்பிடிக் கதைக்காமல் இருக்கிறனீங்கள் எண்டு எங்களோட சண்டை பிடிப்பாள்.
"இந்தப் பிள்ளையளுக்கு இருக்கிற யோசனை பெரியாக்கள் எங்களுக்கு இருக்கிறேல்லை" என்றார் அண்ணன். திருநாவுக்கரசு கதைக்க வழியின்றி தலை குனிந்திருந்தான். எங்கடை தலைமுறை எங்களை வழிநடத்தும் என்று தனக்குள் நினைத்துக் கொண்டான்.




கருத்துகள் இல்லை: