புதன், 30 ஜனவரி, 2013

அன்பென்ற கிண்ணத்தில்...

வேந்தன் அவளை ஒரு பயிற்சிப் பட்டறையிலே சந்தித்தான். கண்டவுடன் மின்னலடிக்கவில்லை; இதயம் படபடக்கவுமில்லை. எல்லோரையும் போல ஒரு "வணக்கம்", பிறகு வேலை முடிய "நாளைக்குச் சந்திப்போம்". இப்படித்தான் தொடங்கியது. பிறகு காலப் போக்கில் மெதுவாக எல்லாம் மாறத் தொடங்கியது. அவளின் இமைகள் ஒவ்வொரு தடவையும் மூடித்திறக்கையில் பட்டாம்பூச்சிகளின் சிறகடிப்பை உணர்ந்தான். அவள் சிரிக்கும்போது உலகிலுள்ள அழகனைத்தும் அவளில் மட்டுமே கொட்டிக் கிடந்ததாய்  உணர்ந்தான். இவை எல்லாவற்றுக்கும் மேலே அநியாயத்துக்கு மிக நல்லவளாய் இருந்தாள். கோபப்பட, கத்திப்பேச தெரியாத ஒரு புன்னகைப் பதில் நிரந்தரமாய் அவளிடமிருந்தது. இவையெல்லாம் அவன் இரசித்து "காதல்" என்று  உணர்ந்து கொண்டபோது கொஞ்சம் பயம் தலைதூக்க மிகப் பெரிய ஒரு காரணம் மலையாய் முன் எழுந்தது.
வேந்தன் யாழ்ப்பாணத்துக் குடும்பத்தை சேர்ந்தவன். இங்கே வீட்டில் அம்மா, அப்பா, அண்ணா, தங்கையோடு வாழ்ந்து வருகின்றான். அவன் வெளிநாட்டுக்கு வந்து சேர்ந்தபோது ஆறு வயதாயிருந்தது. வீட்டிலே சோறு கறிகள், பலகாரங்கள், சினிமாக்கள், பாட்டுக்கள், கோவில்கள்  என்று எல்லாவற்றிலேயும் தமிழேயிருந்தது. இந்த நிலையில் வீட்டில் போய் "நான் வேலை செய்யிற இடத்தில கண்ட வெள்ளைக்காரப் பெண்ணைக் காதலிக்கிறன்; அவளைத்தான் கலியாணம் செய்யப் போறான்" எண்டால் எப்படி அதை எடுத்துக் கொள்ளுவார்களோ என்று யோசித்தான்.
ஆனால் இது எல்லாவற்றுக்கும் மேலே அந்தப் பெண் அவனை விரும்புகிறாளா என்று தெரிந்து கொள்ள வேண்டுமே??  இரண்டு நாட்களாக நித்திரையை இழந்து யோசித்து, மூன்றாம் நாள் ஒத்திகை பார்த்து அவளை அணுகியபோது, அவனை விட அவள் அவன் மேல் காதலாயிருந்தாள். அதற்கு அவள் சொன்ன காரணங்கள் பல அதிர வைத்தன.
தமிழருடைய ஒழுக்க வாழ்வு பிடிக்கும் என்றாள், பண்பாடு, கலாச்சாரங்கள் பிடிக்கும் என்றாள், பாரத நாட்டியம் பிடிக்கும் என்றாள். காலங்காலமாக நீடித்திருக்கும் குடும்ப உறவு முறைகள் பிடித்திருக்கிறது என்றாள்.  இப்படி நிறைய நல்ல மதிப்பீட்டை  தமிழினத்தில் வைத்திருந்தாள். வேலையிடத்தில் வேந்தனோடு பழகும் போது அவனையும் பிடித்துப் போக தனது வாழ்க்கையை அவனுடன் தொடர  ஆசைப்பட்டாள். இருவருமே நிறையக் கலந்து பேசி முடிவெடுத்து வீட்டாரிடம் தெரிவித்தனர்.

இரண்டு பக்கங்களிலுமிருந்தே கொஞ்சம் அதிர்ச்சி வெளிப்பட்டது. அம்மா "இது உனக்கு ஒத்து வருமா?" என்றாள் . அப்பா, "வெள்ளைக்காரிகள் இந்த நாட்டுக் கிளைமேட் மாதிரி, நல்லா  யோசி" என்றார். அவனுக்கு அப்பாமேல் கோபம் வந்தது. இரண்டுபேருமே தங்களுடைய முடிவில் உறுதியாய் இருக்க, அவர்களுடைய எண்ணப்படியே திருமணத்தை முடித்து வைத்தனர்.

கத்தரினை வீட்டாருக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. எங்கேயாவது கொண்டாட்டங்களுக்குப் போவது என்றால் அம்மா, தங்கையுடன் புடவை கட்டி பொட்டு வைத்து அவர்களுடன் கலகலப்பாக நடந்து போவாள்.

தனியே ஒரு வீடு வாடகைக்கு எடுத்துக் கொண்டு இனிமையான வாழ்க்கைப்  படகு போய்க் கொண்டிருந்தது. படகு என்றாலே ஒரு எதிர்மறையான பயம் எப்போதும் உள்ளே இருக்கும். எப்போது புயல் அடிக்குமோ; எப்போது படகு
ஒட்டையாகுமோ அல்லது எப்போது கவிழுமோ என்ற பயம் அது. ஆனால் இவர்களுடைய பயணம் அலசி ஆராய்ந்து, வேறுபாடுகளை உணர்ந்து, இருவருமே ஏற்றுக்கொண்டு தொடங்கப்பட்டதால், பிகப் பலத்த பாதுகாப்புடன் கட்டப்பட்ட படகினுள் இருப்பதாய் நினைத்துக் கொண்டார்கள்.

வேந்தன் கத்தரினைச் சந்திக்குமுன் வார விடுமுறை நாட்களில் அவனுடைய நண்பர்களுடன் பார்ட்டி வைத்து மகிழ்வதில் அதிக விருப்புக் கொண்டிருந்தவன். அவளைச் சந்தித்த பின் அந்த நட்புக்களை கொஞ்சம் விலத்தியிருந்தான். அவள் தன்னில் வைத்திருக்கும் நம்பிக்கை வீணாகிப் போக விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தான். ஆனால் அவனால் அதிக நாட்கள் தாக்குப் பிடிக்க முடியவில்லை.  திருமணக் கொண்டாட்டங்களிலும், சாமத்தியச் சடங்குகளிலும், பிறந்த நாள் கொண்டாட்டங்களிலும் நண்பர்கள் வளைத்தார்கள்.எங்கள் நாட்டில்தான் மிக அழகாகச் சொல்லுவார்களே; அடிமேல்  அடி வைத்தால் அம்மியும் நகரும் "என்ன மனிசிக்கு இப்பிடிப் பயப்பிடுறாய்?", "கலியாணம் செய்த புதுசில எல்லாரும் இப்பிடித்தான்" போன்ற மிகச் சுலபமான (?) வார்த்தைகள் அவனை நகரச் செய்து விட்டன. முதலில் நண்பர்களிடம் சனிக்கிழமைகளில் மட்டும்தான் அதுவும் பத்தரை மணிக்குமேல் அவர்களுடன்  இருக்க முடியாது என்று சொன்னான்.அவனுடைய நண்பன் ஒருவன் "பாப்பம் பாப்பம்" என்றான் ஒரு கள்ளச் சிரிப்புடன். "இல்லையடா, கத்தேரின் என்னில மட்டுமில்ல எங்கடை ஆக்களிலையும் மரியாதையும் நம்பிக்கையும் வச்சிருக்கிறாள். நான் அதைக் குழப்ப மாட்டேன்" என்றான்.

சனிக்கிழமைகளில் நேரம் பிந்தி வீட்டுக்கு வருவதற்கு காரணங்களைத் தேடிக் கொண்டான். அவள் இவனுடன் ஒன்றாகச் சாப்பிடுவதற்காக காத்திருப்பாள். இவன் தான் குடித்திருப்பதை மறைப்பதற்காக " பசிக்கேல்லை , நீ சாப்பிட்டிட்டுப் படு" என்று விட்டுப் படுத்து விடுவான். அவள் என்ன சிறுபிள்ளையா விளங்காமலிருக்க? தானும் சாப்பிடாமல் படுத்து விடுவாள். வயிற்றில் வளரும் குழந்தையைக் காட்டி சனிக்கிழமைகளில் தன்னோடு அல்லது அவன் தாய் வீட்டில் இருக்கும்படி  செய்ய  முயற்சித்தாள். அவனோ அவற்றுக்கிடையால் பாம்பாய் நெளிந்து வளைந்து குறுக்கறுத்து நண்பர்களுடனான நேரத்தையும் நாட்களையும் கூட்டி மெய்ம்மறந்து படமெடுத்தாடத் தொடங்கினான். அவனுடைய தாய்க்கு அவனுடைய லீலைகள் ஏற்கனவே தெரிந்ததுதான்; இருந்தாலும் கலியாணம் செய்த பிறகு அதையெல்லாம் விட்டு விடுவான் என்று நினைத்திருந்தாள். அதுவும் இப்போது சரிவராமலேயே போனது தெரிந்தது.

இனி இருப்பது குழந்தை மட்டும்தான். அது அவனை மாற்றும் என்று நம்பினாள். குழந்தை பிறந்ததுக்கு விடிய விடிய பார்ட்டி வைத்தான் நண்பர்களுக்கு. அவள் மருத்துவமனையில் அவன் வந்து குழந்தையை மடியில் வைத்துக் கொஞ்சுவான் என்று காத்திருந்தாள். அவனுடைய தாயாருக்குக் கட்டுக் கடங்காத கோபம். அடுத்தநாள் திட்டித் தள்ளி விட்டாள். "டேய்! அந்தப் பிள்ளை உன்னை நம்பி வந்திருக்கு, ஏன்தான் இப்பிடிக் குடிச்சுக் கூத்தடிக்கிறாய்?; எல்லாற்றை மானத்தையும் சேத்து வாங்கிறாய்". அவனுக்கு அவள் கதைத்தது விளங்கிய மாதிரித் தெரியவில்லை. வேறொரு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருப்பதாய்ப் பட்டது. அவனுடையகைகள்  நடுங்கிக் கொண்டிருந்ததைக் கவனித்தாள் . மனதுக்குள் தாய்க்குப்  பயம் வந்தது.

மருமகள் மருத்துவமனையால் வந்ததும் மெதுவாக "அவனைக் கைக்குள் வைத்திருக்கப் பார்" என்றாள். கத்தேரினே கண் கலங்கினாள். குழந்தைகன்மூடிகிடந்த படியே சிரித்தது. வேந்தனுடைய தாய்க்கு மருமகளைப் பார்க்க கவலையா யும் மகனை நினைக்கப்  பயமாகவும் இருந்தது. "வெள்ளைக்காரிகள் இஞ்சத்தை கிளைமேட் மாதிரி" என்ற அப்பா தலையைக் குனிந்து கொண்டிருந்தார்.

வேந்தனோ இவை எதையுமே யோசிக்கும் நிலையிலில்லாமல் மதுவையும் தாண்டி வேறு மோசமான பழக்கங்களுக்கும் அடிமையாகி நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போனான். மிக விரைவில் இவற்றின் பரிசாக வேலை பறி  போனது. அவனை ஒரு மருத்துவரிடம் கூட்டிப் போக எடுத்த முயற்சிகளும் கைகொடுக்கவில்லை . தனியே இருந்து தனக்கு வாய்த்த வாழ்வை எண்ணி நொந்து கொண்டிருந்தாள். சிரிப்பு மறைந்து சோகம் நிரந்தரமாகியது. அவளுக்கிருந்த ஆறுதல் குழந்தையும் வேந்தனின் குடும்பத்தினரின் ஆறுதலும். மாமியார் வேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்தபடியால் குழந்தையை அவர்களிடம் விட்டு விட்டு கத்தரின் வேலைக்குப் போகத் தொடங்கி விட்டிருந்தாள். வேந்தனைத் தேடிப் பிடிப்பதே பெரிய வேலையாகி விட்டிருந்தது.

ஒருநாள் அவள் வேலையிடத்தில் இருந்தபோது வேந்தனின் தாயார் அவளை உடனடியாக வரும்படித் தொலைபேசியில் அழைத்தாள். அவனுடைய மோசமான பழக்கங்கள் உடலை தாராளமாகப் பாதித்திருந்தது. இது கத்தரின்  கூட எதிர்பார்த்ததுதான். பகல் முழுக்க அவனுடனே கூடவிருந்தாள். ஏன் இப்படி என்னை அலைக்கழிக்கிறாய்? என்று மயக்கத்தில் இருந்த அவனுடன் புலம்பினாள். பரிசோதிக்க வந்த மருத்துவர் அவளைப் பரிதாபமாகப் பார்த்தார். அவன் மயக்கம் தெளியும்போதேல்லாம் கத்தி ஆர்ப்பாட்டம் செய்ததால் நிரந்தர மயக்கத்திலேயே வைத்திருந்தனர்.

கத்தரின் வேலைக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு முடிந்தவரை அவனுடைய கைகளைப் பிடித்துக் கொண்டு பக்கத்திலேயே இருந்தாள். இதற்குள் இருந்து மீண்டாவது அவன் முன்புபோல வரமாட்டானா  என்ற ஒரு நப்பாசை  அவளுக்குள் இருந்தது.
ஆனால் அதையெல்லாம் பொய்யாக்கி ஒரு நாள் அதிகாலை அவள் அவன் கைகளைப் பிடித்திருக்காத சமயம் அவன் நிரந்தரமாக கண்களை மூடிக் கொண்டான். அவளைப் பார்க்கத் துணிவில்லாமல் போனதோ என்னவோ!

கத்தரின் அவன் மேல் வைத்திருந்த அன்புக்கும் நம்பிக்கைக்கும் அவன் கொடுத்த பரிசான கைக் குழந்தையுடன் வாழ்வை நம்பிக்கையுடன் தொடர்கிறாள். இப்போது அவனுடைய நண்பர்கள் யாரும் அவளைத் திரும்பிப் பார்ப்பதில்லை.














கருத்துகள் இல்லை: