ஞாயிறு, 27 ஜனவரி, 2013

பொங்கலோ பொங்கல்!


பொங்கலோ பொங்கல் 
பொங்கலோ பொங்கல்!


இருள் கருக்கி ஒளி பாய்ச்சி
பகலெனும் உருக்கொடுத்த
கதிரொளிப்பிறப்பில்
அகம் பொங்கி மலர்ந்திட 
இல்லம் பொங்கி மகிழ்வுற
உறவு பொங்கி ஒன்றிணைய
பொங்கலோ பொங்கல் 
பொங்கலோ பொங்கல்..... 

கதிரறுத்த எம் காணியில் 
கால் வைக்க துணிவில்லை 
கோலமிட்ட முற்றம்
பானை வைக்க இடமின்றிப் 
பத்தையாய்க் கிடக்கிறது 
மாத்தின்ன எறும்புளும் 
இருக்கின்றனவோ தெரியவில்லை 
இருந்தாலும் எங்களுக்கு....
பொங்கலோ பொங்கல் 
பொங்கலோ பொங்கல்...... 

பால் தரும் அன்னமக்கா 
வந்து எடு என்கிறாள்
சுள்ளி பொறுக்க ஒழுங்கையால் 
போய்வர முடியவில்லை
கருக்கலில் தலை காட்ட 
வெளியே விருப்பமும் இல்லை 
இருந்தாலும் எங்களுக்கு 
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்........ 

உற்சாகம் பொங்கிவர 
பாய்ந்தோடிப் போனவர்கள் 
உள்ள இடம் தெரியவில்லை 
உருப்படியாய் எதுவுமில்லை 
விழி எல்லைக் கோட்டில் 
இருள் கவிந்து கிடக்கிறது 
பொங்கல் பானை அடுப்பேற்ற
 பொங்குது துக்க மெனினும் 
பொங்கலோ பொங்கல் 
பொங்கலோ பொங்கல்....

பெட்டியிலே வாங்கி 
சட்டியிலே ஊற்றி 
மின் அடுப்பைக் கூட்டி விட்டு 
பொங்கி வரும் நேரமதில் 
ஓடி வாங்கோ இஞ்ச
பாருங்கோ பொங்கிறதை 
வழி பிறக்கும் எங்களுக்கினி
என குதூகலிக்கும் எமக்கு 
பொங்கலோ பொங்கல் 
பொங்கலோ பொங்கல்........... 

புது நெல்லுக் கையிலில்லை 
கரும்பு வெட்ட ஆளில்லை
ஈரவிறகும் எரியுதில்லை 
என்றிருக்க முடியவில்லை 
காலம் கொண்ட கனவோடு 
அடுப்பேற்ற முனைகிறோம் 
தமிழ் மட்டும் தனியாய்த் 
துணிவாய் நிற்கிறது!
அது பொங்கி வழியும் 
அகிலமெலாம் பரவும்
நம்பிக்கையாய் கூவுவோம் 
பொங்கலோ பொங்கல் 
பொங்கலோ பொங்கல்!

வி.அல்விற்.
11.01.2013.

கருத்துகள் இல்லை: