ஞாயிறு, 27 ஜனவரி, 2013

யாருக்கெடுத்துரைப்போம்


காதலனைத் தேடியோடும்
காதலி விழிகளாய்
காத்திருப்புக்கள் நீண்டு
காண்திசை எங்கும்
வெறுமை மிஞ்சிக் கிடக்கிறதே
ஆற்றாமை தீர்க்க
அவதார மேதுமுண்டோ
அலைக்கழிந்து திரியுதோர் இனம் - இதை
யார்க்கெடுத்துரைப்போம் 

வீழாத மூத்த குடி வீழ்த்தப்பட்டு
படுகுழிக்குள் தாண்டு போனதே
பார்த்திருக்க அகிலம்
அகலவாய் திறந்தாழி போல்
முழுதாய் விழுங்கியதே
பிணவாடை பல
நாசியுள் நுழையவில்லை
எழும்பிக் கூடுகள்
குத்திக் கிளிக்கவுமில்லை
மூடப்பட்ட குழிகளின் மேல்
பலவண்ணக் கொடிகள் சூழ
ஊர்வலம் நடந்தது
அவரவர் வீட்டில் அதது நலமே-இதை 
யாருக்கெடுத்துரைப்போம்
யாரெவர் உணர்ந்து கொள்வர்

ஆண்டாண் டாண்ட பரம்பரை
இன்றதைத் தேடித் திரியுதே
ஏதில்லை எம்மிடம்
என் றிறுமாப்புற்றிருந்த தேசம்
ஏதுமின்றி இன்றே திலியாய்
கையேந்தி நிற்குதே
கட்டுண்டு இருட்டுள்வீழ்ந்து கிடக்குதே - இதை
யாருக்கெடுத்துரைப்போம்
யாரெவர் உணர்ந்து கொள்வர்

கட்டத விழுமோ
கனவுகள் பலிக்குமோ
எட்டப்பர் கூட்டம்
எட்டியே நிற்குமோ
பட்டதை யுணர்ந்து
பாதையொன் றமையுமோ
எட்டிலும் சிதறியோர்
எட்டுவரோ ஒரிணக்கம் - இதை
யாருக்கெடுத்துரைப்போம்
யாரெவர் உணர்ந்து கொள்வர்

வி.அல்விற்.
21.01.2013

கருத்துகள் இல்லை: