புதன், 15 அக்டோபர், 2014

உடன்பாடும் மறுதலிப்பும்.

உடன்பாடும் மறுதலிப்பும்.

எனது பகுத்தறிவுக் கேள்விகளுக்கு
உனது தொன்மொழி பதிலாயில்லை
ஆமெனும் மறுதலிப்பும் 
இல்லையெனும் உடன்பாடும்
முட்டுப்படுகின்றன பெருஞ்சினத்துடன்
தாங்குமொழியைத் தூக்கி
என் முதுகெலும்புகள் நலிந்து விட்டன
இளந்தசைகள் நைந்திறுகிக் கிடக்கின்றன
எழ விடாமல்
தங்குமொழியிலிருந்து
விலகிவிட நான் முனைவது
உனக்கேன் புரியவில்லை
நம்ப மாட்டேன்
புரியவில்லை என்பது பொய்மொழி
பழகாமொழி என்பதுதான் உண்மை
கற்றுக் கொள் சுற்றிப் பார்த்து
நான் விரும்பும் மனிதனாயிருக்க
நீ ஏன் எத்தனிக்க மறுக்கிறாய்
ஊர்ந்து கொண்டிருக்கும் நாட்கள்
பிரிவுமொழியாகி விடாதிருக்க
மீளவும் எத்தனிக்கிறேன்
சமூகத்தின் பெயரால்
நீயுணரா வலியுடன்
உன் புஜபலத்தை கொஞ்சம்
தளர்த்திக் கொள்ள மாட்டாயா
யாசிக்கவில்லை
வாழ்வின் பெயரால்
யோசிக்கக் கேட்கிறேன்
மிச்சமுள்ள நாட்களாவது
சத்தமின்றிக் கரைவதற்காய்.
வி. அல்விற்.
14.10.2014.

கருத்துகள் இல்லை: