திங்கள், 13 அக்டோபர், 2014

ஒரு ஞாயிறு...




ஒரு ஞாயிறு.

எத்தனையோ ஞாயிறுகள் வாழ்விலே வந்து போயிருக்கின்றன. நித்திரையால் எழும்போதே சிரிப்பாய், மகிழ்வாய், சோகமாய், அழுகையாய், ஏக்கமாய், ஏமாற்றமாய், அமைதியாய், தனிமையாய் இப்படிப் பல கடந்திருக்கின்றன.
அரக்கப்பறக்க எழுந்து வேலைக்கோடும் நாட்களிலிருந்து விலகி, கொஞ்சம் ஆறுதலாக எழுந்து, இரசித்து நாளைக் கழிக்கும் வார இறுதி நாட்களுள் ஒன்றான, பிறந்தநாள், சாமத்தியக் கொண்டாட்டம், திருமண விழா, விளையாட்டுக்கள், ஆலோசனைக் கூட்டங்கள், இப்படி இன்னும் பிற காரணங்களுக்காக,பொதுவாக புலம் பெயர்ந்து வாழும் மக்கள் ஒதுக்கிப் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில், நானும் என்னைப்போல சிலரும் துயிலெழுப்போசையில் பாய்ந்தடித்து எழுந்து வேலைக்குப் போக வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
அன்றும் அப்படித்தான் முதல்நாள் மிச்சமிருந்த மகிழ்ச்சியில் கொஞ்சத்தைச் சேர்த்து அள்ளிப் பூட்டிக் கொண்டு வேலைக்குச் சென்றபோது கணவர் குறட்டையிலிருக்க, மகனின் அறையிலிருந்து மெல்லிய மூச்சோசை வந்து கொண்டிருந்தது.
சத்தமின்றி புறப்பட்டு படி இறங்கினேன்.
வேலை முக்கியமல்லவா? எத்தனை துயர் வந்து அமுக்கினும் வேலைக்குப் போகாமல் இருக்க முடியாமல் இருக்கிறதே!
ஊரே தூங்கும்போது எழுந்து வேலைக்குப் போவதென்பது கடினமாயினும், பொதுவாகவே ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை அதிகமாயினும் கெடுபிடிகளற்ற அமைதியான நாட்களாகவே அமைவதுண்டு.
வழமை போலவே பிற்பகல் 14:30 அளவில் வேலையை முடித்து வீட்டிற்குத் திரும்பினேன். எனது நண்பி ஒருவர் குடும்பத்துடன் அன்று மாலை எங்களைச் சந்திக்க வருவதாக ஏற்கனவே சொல்லி இருந்ததால்,அவர்களை எதிர்பார்த்தே திரும்பினேன்.
எதிர்பார்த்தபடியே வீட்டு முற்றத்தில் அவர்களது கார் நிறுத்தியிருக்க, தோழியும் அவர்களின் மகன் ஒருவரும் அருகே நின்றிருந்தார்கள்.
தோழியின் கணவர் பிரபல படப்பிடிப்பாளர் என்பதால் எப்போதும் ஒளிப்படக் கருவியும் கையுமாகவே காண்பதுண்டு. நான் என்னுடைய காரை அவர்களது காருக்குப் பின்னால் நிறுத்தி விட்டு இறங்கவும், அவர் படம் பிடிக்கத் தொடங்க, "என்ன அண்ணை இறங்க முதல் படம் எடுக்கிறீங்கள்?" என்று நானும் வழமைபோலவே பகிடியாகச் சிரிக்க, "என்ன எங்களை வரச் சொல்லி விட்டு நீங்கள் பிந்தி வாறீங்கள்?" என்று கோபிக்கவும், எனது மகன் வெளியே வந்து, என்னைச் சுகம் விசாரித்து விட்டு, கார் விடும் பகுதிக் கதவை முழுமையாகத் திறக்க,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ஒரே நேரத்தில் வாழ்த்துக் குரல்கள் எழும்பின பூக்களை என்மீது அள்ளித் தெளித்தபடி.
ஒரே நேரத்தில் நமக்குப் பிடித்தமான நாற்பது பேரைப் பார்த்தால் எப்படி இருக்கும்?
கண்களில் கண்ணீர் வருவதென்பது நமக்குக் கொஞ்சம் அரிது. ஆனால் அந்நேரம் நான் அழாமலேயே கண்களில் கண்ணீர் வழிந்தது. அதைப் பார்த்த எனது பிள்ளைகளுக்கு தாம் வெற்றி பெற்ற மகிழ்வு.
ஆம்; எனது சகோதரி குடும்பத்தினர், எனது கணவரின் சகோதரர் குடும்பத்தினர் தவிர மிகுதி அனைவருமே என்னிடம் படித்த பிள்ளைகளும் அவர்களது பெற்றோரும்.
என்னை மகிழ்விக்க, நான் வேலைக்குப் போனவுடன் எல்லோரும் வீடுகளில் இருந்து வெளிக்கிட்டு எமது வீட்டுக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள்.
எமது நீண்ட கால நட்பான மேசி என்னும் நண்பி மூன்று நாள் நேரமெடுத்து அழகான கேக்கைச் செய்து முடிக்க, அவருடைய கணவர் செல்வா அலங்காரங்களைக் கவனித்து முடித்திருந்தார் தனது மூன்று பிள்ளைகளின் உதவியுடன்.
அத்துடன் அவர் வேறு தன்னுடைய ஒளிப்படக் கருவியால் என்னுடைய அழுகை அனைத்தையும் சுட்டுத் தள்ளியிருக்கிறார்.
இன்னொரு நட்பான சிம்மக் குரலாள் செல்வி, தன்னுடைய உடல் உபாதைகளை அன்றைக்கு மறந்துவிட்டு எனது கணவரின் நொறுக்குத்தீனி வேலைப்பழுவில் ஒரு பகுதியைக் குறைத்ததுடன் , பதினெட்டு வயதுக்கு இறங்கி, பிள்ளைகளை ஒழுங்கமைக்கும் வேலையைச் செய்திருக்கிறார். அவர்களுடைய மகன் லக்ஸ்மன் தூரவிடத்தில் படித்துக் கொண்டிருக்கிறார். அவர் இத்தனை தூரம் என்னைத் தேடி வந்ததுடன் பாடலும் ஆடலுமாக கலகலப்பாக்கியிருந்தார் அவ்விடத்தை. அவர்களுடைய இரண்டாவது மகன் யுவன்சன் அன்றைக்கு போக்குவரத்து அமைச்சர் பதவியை எடுத்திருந்தார். அவருடைய கணவர் மனோ என்னை உலக அழகி அளவில் படமெடுத்திருக்கிறார். (படங்கள் வந்தால்தானே தெரியும் .
மாணவிகளில் ஒருத்தியான செரின் எல்லோருடனும் தொடர்பாடலை ஏற்படுத்தி அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார். அவரே சிறு உரை ஒன்றையும் நிகழ்த்தி பலருக்கு வேலை காரணமாக வர முடியாமற் போனதற்காக வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டார்.
அதேநேரம் திருமணமாகிப் போயிருந்த ஒரு பழைய மாணவியான பிரேமினி தன்னுடைய கணவருடன் வந்திருந்தது நெகிழ்ச்சியாயிருந்தது. நன்றி பிரேமினி.
ஒரு நாள் எனது வீட்டிலே என்னை அசைய விடாமல் வைத்து, பாட்டும் , ஆட்டமும், மகிழ்ச்சியுமாய் என்னை இராணியாக்கி மகிழ்ந்து தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்திருக்கிறார்கள் எனக்குப் பிடித்தவர்களும் என்னைப் பிடித்தவர்களும்.
தூர இருந்து நான் கற்பித்த பிள்ளைகளைப் பார்த்தபோது, ஆச்சரியமாகவும் பெருமையாகவும் இருந்தது. இந்தப் பெருமையில் பெற்றோரும் சேர்ந்து கொள்ளுகின்றனர். வக்கீல், நிர்வாகத்துறை சார்ந்தவர், மருத்துவத்துறை சார்ந்தவர், தொழிலதிபர், இப்படியாக எல்லோருமே தமக்குப் பிடித்த துறைகளில் முன்னேறியவர்களாயும் பண்பானவர்களாயும் இருக்கிறார்கள்.
இதை விட வேறென்ன நமக்கு வேண்டும்?
எனது மகன் இன்னும் குழந்தையாய் இருக்கிறானே என்று நான் சிலவேளைகளில் யோசிப்பதுண்டு. அம்மாவை மகிழ்விக்க அவர் எடுத்துக் கொண்ட யோசனையும், ஒரு மாதத்துக்கு மேலாக எனக்கு எதுவுமே தெரியாமல் என்னைக் கண்ணைக் கட்டி வைத்து விட்டு இதனை நடாத்தி முடித்திருக்கும் விதமும் ஆச்சரியப்பட வைத்தது. பிழைத்து விடுவான் என் மகன்.
என்ன தவம் செய்தேன் இத்தனை அன்பால் என்னை மூழ்கடிக்க!

நானும் என் பிள்ளைகளும்...




















கருத்துகள் இல்லை: