வெள்ளி, 27 ஜூன், 2014

நீ விரும்பினால்.

நீ விரும்பினால்.

உன்னை ஏந்தியுள்ள பூமி 
உனக்காகப் பரந்தே கிடக்கிறது 
நீ விரும்பினால் 
வழி நெடுக விதைத்துச் செல்ல முடியும் 
உன் கேள்விகளுக்கான விதைகளை 
முளை விடும் ஒவ்வொரு விதைகளும் 
உன் சுதந்திரத்தைப் பறை சாற்றும்

பாதையில் மேலெழும் புகழ்ப் பூக்களில்
மயங்கி நின்றிடும் நேரங்களைக்
கண்டு கொள்ள முடிகிறதா உன்னால்
அச்சமயம் எழும் நச்சு வாசனையில்
நோய் கவ்விக் கொள்ளுகிறதுன்னை

உன் ஆழுமையை அழித்தொழிக்கும் நோயது
சிந்தையை மழுங்கடித்து
சீர் குலைக்கும் நோயது
பிரித்தறிய முடியா பேதமைக்குள்
விழுத்தாட்டி
தொலைந்து போக வைக்கும் நோயது
உன் தொலைதலில்
அகங்காரங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன
கைதட்டி ஆரவாரம் செய்கின்றன

கட்டுக்குள் இருந்து கவியெழுத முடியுமா
பெண்ணே!
உன் கைகளை சுதந்திரமாக வீசிக் கொள்
அற்புத வார்த்தைகளுக்குள்
அடிமைப் பட்டுக் கொள்ளாதே

உன்னை ஏந்தியுள்ள பூமி
உனக்காகப் பரந்தே கிடக்கிறது
நீ விரும்பினால்.....

வி.அல்விற்.
21.06.2014.

கருத்துகள் இல்லை: