வெள்ளி, 27 ஜூன், 2014

போதை.

போதை.

அத்தனை இலகுவானதாயில்லை 
படிகளில் ஏறுவது 
விழுந்து முறிந்து 
வலிகளில் வாழ்ந்து 
கசப்புக்களை மருந்துகளாக்கி 
எழுந்து வருகையில் 

இரட்டைக் குதிரை பூட்டிய 
இரதம் ஒன்று
இலாவகமாக ஏற்றிச் செல்லுகின்றது

இறங்கி நடக்க
சிவப்புக் கம்பள விரிப்பு
நீண்டு கொண்டே போகிறது
மெத்தெனக் கால்பதிகையில்
தேவலோக சுகமென
பாத நுனியிலிருந்து உச்சிவரை
சிலிர்க்கிறது மெய்

ஒவ்வொரு படப்பிடிப்பிலும்
கூசி அகலும்
ஒளித் தெறிப்பில்
நெஞ்சு மேலேறி இறங்குகின்றது
புளகாங்கிதத்தில்

செயற்கை ஒளி கூட
இத்தனை பிரகாசம் தருமா!
புன்னகைகளும் கையசைப்புக்களும்
எத்தனை இதமாயிருக்கிறது!

என்ன அற்புதம்!
தும்பியின் இறகுகள் கூட
இவ்வளவு இலகுவாயிருக்குமா!
பறக்கின்றது மனம்
ஒவ்வொரு பார்வையும்
வியந்து நோக்க
இன்னும் உயரே
ஆகாயம் தொடும் ஆனந்தம்

அத்தனை நட்சத்திரங்களையும்
அணைத்து விட்டு
ஒற்றை விளக்காய்
உலாவரும் பேரவா
உள்ளூர ஊற்றெடுக்க
மனம் மதர்த்துக் கிடக்கின்றது

யார் சொன்னது
போதை கள்ளில் உண்டென்று

உறிஞ்சிப் பாருங்கள்
புகழ்ச் சரக்கில் சிறிதை
ஆளை சிதறடிக்கும்
வெறியின் ஆட்டம் புரியும்

வி.அல்விற்.
27.06.2014.

கருத்துகள் இல்லை: